இறைஇயேசுவில் அன்பானவர்களே, கிறித்து உயிர்ப்பு திருநாள் வாழ்த்துகள்!
நம் திருமண்டலத்தின் சட்டவாக்கியம் "நீதி (மிஷ்பாட்) செய்கிற கடவுள்" என்பதை வலியுணர்த்துகிறது. திருமறையில் மிஷ்பாட் (நீதிக்கான எபிரெய வார்த்தை) என்பது, தண்டனை நீதியை மட்டுமல்ல, சீர்படுத்தும் மற்றும் சரிசெய்யும் நீதியையும் குறிக்கிறது.
இந்தாண்டு கிறித்து உயிர்ப்பு திருநாளைக் (Easter) கொண்டாடுகின்ற நாம், இயேசுவின் உயிர்ப்பு வாயிலாக நிலைநாட்டப்பட்ட இறைநீதியை உணர்ந்து கொண்டு நம் வாழ்வில் செயல்படுத்துவது அவசியம். அதுவே நமக்கு ஆசீர்வாதம்.
ரோமர் 5.21 சொல்லுகிறது: "ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது."
இந்த இறைநீதி என்ன செய்தது?
1. ஏளனப்படுத்திய தீர்ப்பைத் தகர்த்துப்போட்ட மிஷ்பாட்
• பொழுதுவிடியும் முன்னே சரிகட்ட நினைத்த யூத நீதிமன்றமாகிய சனகெரிப் சங்கத்தின் தீர்ப்பு
• தன் கைகளைக் கழுவித் தீர்ப்பு வழங்கிய ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்துவின் தீர்ப்பு
இந்த இரண்டு (யூத & ரோம) அமைப்புகளும் கிறித்துவின் காலத்தில் அதிகாரமிக்கதாகும். இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்ட பின்பு, சட்டத்திற்கு மாறாக, அவசர அவசரமாக ஆறு முறை விசாரிக்கப்பட்டு, அவருக்கு சிலுவை மரணத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
எத்தனை ஏளனங்கள்!
எத்தனை பரிகாசங்கள்!
எத்தனை அவமானங்கள்!
எத்தனை பொய்ப்பழிகள்!
இத்தகைய சூழலில், கள்வரின் மத்தியில் இயேசுவுக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
யூதர்கள் சிரித்தனர்;
ரோமர்கள் நகையாடினர்;
இயேசுவின் சரீரமோ அடக்கம் செய்யப்பட்டது. தீர்ப்பு கொடுத்தவர்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணினர்; தீர்ப்பிட வைத்தவர்கள் கல்லறையையும் காத்து, சாத்தித்துவிட்டதாக நினைத்தனர்.
ஆனால், அனைத்து ஆற்றலுமுடைய கடவுளின் நீதியான தீர்ப்பில் வெளிப்பட்டது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்.
என்னவொரு எதிர்பாராத நீதியின் தீர்ப்பு!
என்னவொரு அதிசயமான உயிர்த்தெழுதல்!
அனைத்து மனித சூழ்ச்சியும் கிறித்துவின் உயிர்ப்பில் தகர்க்கப்பட்டது. கிறிஸ்துவே ஆண்டவர் என்ற சாட்சி பகிரப்பட்டது.
அப்போஸ்தலர் 3:14 & 15 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, ...... ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள். அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
2. ஏதேனின் தீர்ப்புக்கு மறுவரையறையான மிஷ்பாட்
• மரணத் தீர்ப்பு வந்தது
• சாபங்கள் ஆட்கொண்டது
• ஏதேனின் வாழ்வும் போனது
ஆதி மனுக்குலத்தின் (ஆதாம் & ஏவாள்) பாவத்தின் விளைவுகள் தான் இவை. ஒரே மனிதன் ஆதாமினால் பாவமும், அதன் ஆக்கினையும் வந்தது.
சர்ப்பத்தில் வெளிப்பட்ட பிசாசு மனுக்குலத்திற்கு கிடைத்த இந்த தீர்ப்பு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தான் நினைத்தை சாதித்துவிட்டதாகக் கருதினான். இனி மனுக்குலம் மரணத்தின்பிடியில் சிக்கித் தவிக்கும் என்று எண்ணினான்.
ஆனால், இங்குதான் மிஷ்பாட் (இறைநீதி) மறுவரையறை கொடுத்தது. மரணத்தின் ஊடாகவே, மரணத்தை வென்று நித்திய வாழ்வு என்னும் மறுவரையறை. ஏதேனில் வழங்கப்பட்ட தீர்ப்பின் உண்மை நிலை கிறித்துவின் உயிர்ப்பில் தான் வெளிப்பட்டது. சதுசேயரின் உயிர்த்தெழுதல் இல்லை என்ற கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிந்தின ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பே பரம ஏதேனின் நித்திய வாழ்வுக்கான முன்னடையாளமானது.
ரோமர் 5. 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது, அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
1 கொரிந்தியர் 15. 22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அன்புக்குரியவர்களே,
கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைநாட்டப்பட்ட இறைநீதி நமக்கானது. அதை நம் வாழ்வில் அனுபவமாக்க உயிர்த்த கிறிஸ்து நமக்கும் அழைப்பு கொடுக்கிறார்.
உலகத்தின் ஏளனங்களைத் தகர்த்துப் போட்டதும், மறுமைக்குரிய மறுவாழ்வை உறுதிப்படுத்தியதுமான மிஷ்பாட் இன்றும் செயல்படக்கூடியது. உயிர்த்த கிறிஸ்துவின் அனுபவம் ஏளனச்சூழல்களில் உங்களைப் பலப்படுத்தட்டும். ஏதேனின் வாழ்வைப் பெற்றுக்கொள்ள நம்பிக்கையுடன் முன்வாருங்கள். உயிர்த்தெழுதலின் வாழ்வில் நாமும் பங்குள்ளவர்களாவோம். இறையாசி உங்களோடிருப்பதாக...

0 Comments