1. ரோமன் கத்தோலிக்க திருச்சபை: கன்னி மரியாளின் விண்ணேற்பு (Assumption)
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ விசுவாசக் கோட்பாட்டின்படி, மரியாள் தனது உலக வாழ்வை முடித்தவுடன், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். மரியாள் பாவக்கறையின்றி (அமல உற்பவி) பிறந்தவர் என்பதால், பாவத்தின் விளைவான 'உடல் அழுகுதல்' அவருக்கு ஏற்படவில்லை என்பது பொதுவான விசுவாசம்.
மேலும் அவர் "இறந்தாரா" அல்லது "துயின்றாரா" என்பதை கத்தோலிக்க விசுவாசப் பிரகடனம் (1950, திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர்) மிகத் தெளிவாக வரையறுக்கவில்லை. "தனது உலக வாழ்வின் ஓட்டத்தை முடித்தபோது" என்றே அது குறிப்பிடுகிறது.
2. கிழக்கு மரபுவழி திருச்சபை: துயில் கொள்ளுதல் (Dormition)
கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் (Eastern Orthodox) இது மரியாளின் துயில் கொள்ளுதல்" (Dormition of the Mother of God) என்று அழைக்கப்படுகிறது. மரியாள் ஒரு சாதாரண மனிதரைப் போலவே இயற்கை மரணமடைந்தார் என்றும், அவரது ஆன்மாவை இயேசு ஏற்றுக்கொண்டார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், அவர் இறந்த மூன்றாவது நாளில், அவருடைய உடல் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே, இங்கும் உடல் அழியவில்லை என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எருசலேமில் "தூக்கநிலை தேவாலயம்" (Dormition Abbey) அமைந்துள்ளது.
3. சீர்த்திருத்த திருச்சபைகள்
மரியாளின் இறப்பு அல்லது விண்ணேற்றம் பற்றிப் புதிய ஏற்பாட்டில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதால், இதனை ஒரு விசுவாசக் கோட்பாடாக அவர்கள் ஏற்பதில்லை. பெரும்பாலான சீர்திருத்தத் அறிஞர்கள், மரியாள் மற்ற மனிதர்களைப் போலவே இயல்பாக இறந்து அடக்கம் செய்யப்பட்டிருப்பார் என்றே கருதுகின்றனர். அவர் விண்ணேற்றம் அடைந்தார் என்பதற்கு வரலாற்று ரீதியான அல்லது வேதப்பூர்வமான சான்றுகள் இல்லை என்பது அவர்களின் வாதம். அவர் மற்ற விசுவாசிகளைப் போலவே இயற்கை மரணம் எய்தினார் என்பதே பொதுவான கருத்து.
மரியாள் விண்ணேற்றம் அடைந்ததாகக் கூறப்படும் கதைகளை "கற்பனையானவை" என்று ஜான் கால்வின் கடுமையாக விமர்சித்தார்.
நிறைவாக...
மரியாள் எங்கே உயிர்நீத்தார் என்பதில் இரண்டு இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன:
• சீயோன் மலையில் மரியாள் துயில் கொண்டதைக் குறிக்கும் ஆலயம் உள்ளது. தொடக்க கால மரபுகள் பலவும் இதையே குறிப்பிடுகின்றன. |
• சிலுவையில் இயேசு யோவானிடம் மரியாளை ஒப்படைத்ததால், யோவான் எபேசு (துருக்கி) சென்றபோது மரியாளையும் அழைத்துச் சென்றார் என்றும், அங்கேயே அவர் வாழ்வை முடித்தார் என்றும் ஒரு கருத்து உள்ளது.

0 Comments