1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: தவக்காலத்தின் 6 ஆம் ஞாயிறு; கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு முன் வரும் ஞாயிறு
தேதி: 29/03/2026
வண்ணம்: கருநீல நிறம்
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு:2 இராஜாக்கள் 7. 3 - 20
நிருப வாக்கியம்:பிலிப்பியர் 4. 3 - 14
நற்செய்தி பகுதி:மாற்கு 11. 1 - 11
சங்கீதம்: சங்கீதம் 24
2. திருவசனம்
தலைப்பு: பவனி வரும் சமாதான ராஜா
இருப்பிடம்: மத்தேயு 21:9
வசனம்:
(பவர் திருப்புதல்)முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
(திருவிவிலியம்) அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
கிறிஸ்து உயிர்ப்பு திருநாளுக்கு முன் வரும் ஞாயிறு குருத்தோலை ஞாயிறு ஆகும். இந்த நாள் இயேசுவின் இறுதி வாரத்தின் (புனித வாரம்) துவக்கமாக கருதப்படுகிறது. இது பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: மத்தேயு
அவையோர்: மத்தேயு நற்செய்தி கிறிஸ்தவர்கள், குறிப்பாக யூதப் பின்னணியில் இருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்காக எழுதப்பட்டது.
வசன பின்னணி: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பாடு மரணத்திற்கு முன்பு, எருசலேம் நகருக்குள் பவனி சென்றபோது, அவரோடு சென்ற திரளான மக்கள் இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த போது, பயன்படுத்திய வாசகம் (மத்தேயு 21.9, மாற்கு 11.9) இதுவாகும்.
5. திருவசன விளக்கவுரை
கிறிஸ்து இயேசு பவனி சென்ற போது, மக்கள் கூட்டம் அவரைப் புகழ்ந்திட பயன்படுத்திய வாசகங்கள் குறித்து எழுதும் போது, நான்கு நற்செய்தியாளர்களும் வார்த்தைகளில் சற்று வேறுபடுகின்றார்கள். ஆனாலும், அவற்றை ஒப்பிட்டு படிக்கும் போது, கீழ்க்கண்ட மூன்று வாசகங்கள் பொதுவாக வருகின்றன.
A. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா தாவீதின் மகன் (Son of David) என்ற வாசகம், இயேசுவை அரசர் தாவீதின் வழி வந்த அரச வாரிசாக மக்கள் நினைத்ததை வெளிக்காட்டுகிறது. ஓசன்னா என்ற வார்த்தையின் பொருள் "ஆண்டவரே எங்களைக் காப்பாற்றும்." ரோம அரசாங்கத்தின் பிடியில் இருந்து தங்களைக் காப்பாற்ற வரும் யூத அரசனுக்காக மக்கள் காத்திருந்தனர்.
மத்தேயு 12.23: இயேசு அற்புதங்களைச் செய்த போது, அவரை தாவீதின் குமாரன் என்று மக்கள் சொன்னார்கள்.
மத்தேயு 15.22 கானானிய பெண் தன் மகளுக்கு சுகம் பெற தாவீதின் குமாரன் என்று கூப்பிட்டார்.
மத்தேயு 20.31 இயேசுவிடம் பார்வை பெற குருடர் தாவீதின் குமாரன் என்று அழைத்தனர்.
லூக்கா 20.44 இல் இயேசு இதைக் குறித்த கேள்வியை எழுப்புகிறார்.
B. கர்த்தரின் நாமத்திலே வருகிறவர் போற்றப் பெறுபவர்
கர்த்தரின் நாமம் என்பது இயேசுவுக்கு வழங்கப்பட்ட பெயர்களில் சிறப்புமிக்க ஒன்றாகும். ஏனென்றால், யூத மரபில், ஆண்டவர் - யெகோவா என்பதைக் குறிப்பதாகும். இந்த நாமம் ஆளுமையைக் (Lord -Yahweh) குறிக்கும். தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் ஆளுமை பிரதிநிதியாக எண்ணி இயேசுவை துதித்தனர்.
சங்கீதம் 118. 26 இதற்குரிய தீர்க்கதரிசன முன்னடையாளம்.
ஏசாயா 9.6 இல் வரும் கர்த்தத்துவம் என்பது (Misrah - Government) ஆட்சிப் பொறுப்பைக் குறிக்கும்.
C. உன்னதத்திலே ஓசன்னா
உன்னதத்தில் என்ற பதம் Supreme (Mosh High) உயர்வான என்பதைக் காட்டிலும், இதைக் காட்டிலும் மேலாக ஒன்றுமில்லாத ஆளுமையின் உச்சத்தைக் குறிக்கிறது.
லூக்கா 2.14 உன்னதத்தில் இருக்கிற கடவுள்
லூக்கா 1.79 உன்னதத்தில் இருந்து தோன்றின அருணோதயம்
யோவான் 3.31 உன்னதத்திலிருந்து வருகிறவர்
மக்கள் பயன்படுத்திய இந்த மூன்று வாசகங்களையும் மற்றும் ஓசன்னா என்ற வார்த்தையையும் பார்க்கும் போது, கழுதையின் மீது அமர்ந்து பவனியில் வந்த இயேசுவை பார்க்கும் போது, தங்களைக் காப்பாற்ற வந்த அரச வாரிசாக, கடவுளின் பிரதிநிதியாக, மேலான அதிகாரம் கொண்டவராக எண்ணி துதித்ததை அறிய முடிகிறது.
ஆனால், உலக ரீதியான ஒரு தலைவராக எண்ணி இந்த வாசகங்களை பயன்படுத்தினர் என்பதும் தெளிவாகிறது. ஆவிக்குரிய மீட்பர் என்ற கண்ணோட்டம் அவர்களில் இருந்திருக்க மிகக் குறைவு. அதுவும் எருசலேம் நகரில், பண்டிகைக்கு வந்த இவ்வளவு திரளான கூட்டம் உண்மையை உணர்ந்து, ஆர்ப்பரித்துத் துதித்துப் பாடியதா? என்பது கேள்விக்குறி.
ஆனால், அடுத்த சில தினங்களில், சிலுவை மரணம் வாயிலாகவே, உலகை மீட்டு காப்பாற்றவே, எருசலேமுக்குள் பவனி வந்தார் என்பது இயேசுவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. சீடர்கள் கூட இதை உணரவில்லை என்பது மெய்.
6. இறையியல் & வாழ்வியல்
இன்று நம் வாழ்வில் ஆசரிக்கும் குருத்தோலை ஞாயிறும், முதலாம் நூற்றாண்டு போன்று அர்த்தமற்ற நிலையில் உள்ளதா? என்று சிந்திக்க வேண்டும். ஏதோ, தெருவில் குருத்தோலை பிடித்து, ஓசன்னா ஓசன்னா என்று கூட்டத்தோடு கூட்டமாக, ஆர்ப்பரிப்பதோடு, முடித்து விடுகிறோமா? அல்லது உண்மையில், இயேசு கிறிஸ்து நம்மை மீட்டதை உணர்ந்து பவனி செல்லுகிறோமா?
7. அருளுரை குறிப்புகள்
1. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
2. கர்த்தரின் நாமத்திலே வருகிறவர் போற்றப் பெறுபவர்
3. உன்னதத்திலே ஓசன்னா
எழுதியவர்
திரு. யே. கோல்டன் ரதிஸ் M.Sc, B.A B.Th, B.D,

0 Comments