1. தலைப்பு
செவிடும் ஊமையுமானவனை குணமாக்குதல்: மாற்றுத்திறனாளிகள் மீது இறைமைந்தரின் கரிசனை
2. திருமறை பகுதி
மாற்கு 7: 31 - 37
3. இடம் & பின்னணி
மாற்கு நற்செய்தியாளர் மட்டுமே இந்த அற்புதத்தை பதிவு செய்துள்ளார். இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்த போது, அந்த இடத்தில் இந்த அற்புதத்தை செய்தார்.
4. விளக்கவுரை
இயேசு கிறிஸ்துவிடம் காது கேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனை கொண்டுவந்து அவன்மேல் கைகளை வைக்கும்படி சிலர் கெஞ்சிக் கேட்டார்கள். இயேசு, கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார். அதன் பின்பு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, "திறக்கப்படுவாயாக" என்ற அர்த்தங் கொள்ளும் வகையில், “எப்பத்தா” என்று சொன்னார். அப்போது அவனுடைய காதுகள் திறந்து பேச்சுக் குறைபாடும் சரியாகி அவன் தெளிவாகப் பேச ஆரம்பித்தான். இந்த விஷயத்தைப் பரப்ப வேண்டாம் அவர் பல தடவை சொல்லியும் இன்னும் அதிகமாகத்தான் அவர்கள் அதைப் பரப்பினார்கள். எல்லாவற்றையும் நன்றாய் செய்கிறார் என்று சொல்லி இயேசுவை புகழ்ந்தார்கள்.
5. கருத்துரை
நோயுற்றோரை குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை நோயாளிகள் பெறுவதே, ஓர் அற்புதம்தான். இந்த மாற்றுத் திறனாளி மனிதர் மீது அவரை அழைத்துக் கொண்டு வந்த சில நண்பர்களுக்கும் இயேசுவுக்கும் கரிசனை இருந்தது. இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், எல்லாம் நலமாக அமையும்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments