(வீட்டிற்கு முன்பாக)
பாடல்:
தோத்திரம் செய்வோமே - இரட்சகனைத்
தோத்திரம் செய்வோமே
இப்புதுமனைதனில் இறையன்பின் பிரசன்னம்
எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி
1.கையின்பிரயாசமதை - தயவாய், சுபமாய், நிறைவாய்
கனிந்திடச் செய்தவரை
கைவிடேன் ஒரு போதும் என்ற நல் கர்த்தனை
கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி - தோத்திரம்
2.இல்லத்தின் ஒளி அவராய் - இருந்து, தொடர்ந்து, நிறைந்த
இன்பங்கள் நல்கிடவே
இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள்
இவ்வடியாருடன் இருந்திட கீதம் பாடி - தோத்திரம்
திருப்பணிவிடையாளர் கூறுவது:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்.
இந்த வீட்டிற்கும், இங்கே வாசம்பண்ணுகிறவர்களுக்கு சமாதானம் உண்டாவதாக. இங்கே உள்ளே வருகிறவர்களுக்கும், போகிறவர்களுக்கும் சமாதானம் உண்டாவதாக. எந்த
இடத்திலும் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்
குரு : கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.
மறுமொழி: கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளார் விழித்திருக்கிறது விருதா.
ஜெபம் செய்வோம்
கர்த்தராகிய எங்கள் ஆண்டவரே, இந்த வீட்டை கட்ட உமது அடியாராகிய ...................... இவர்களுக்கு தேவரீர் அருளிச் செய்த எல்லா ஈவுகளுட்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
இவர்களுக்கும் இந்த கட்டிய வேலையைச் செய்த யாவருக்கும் உமது பாதுகாவலையும், பராமரிப்பையும் அருளிச் செய்தமைக்காக உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் எப்பொழுதும் உமக்கு
நன்றியுள்ளவர்களாய் இருக்கவும், உமது தயவுள்ள வல்ல கரங்களைப் பற்றி, நாங்கள் உறுதியான நம்பிக்கையுடையவர்களாயிருக்கவும், உமது பரிபூரணமாக சித்தத்தை நிறைவேற்ற எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவும் எங்களுக்கு உதவி புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிகொள்ளுகிறோம். ஆமென்.
(பிரதிஷ்டை செய்தல்)
பிதா,குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் இந்த வீட்டை ஆசீர்வதித்துப் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென்.
(யாவரும் வீட்டினுள் புகும் போது ஒரு தோத்திரப் பாடல் பாடப்படும் & இப்பொழுது ஆராதனை நடத்துகிறவர் வாசல்களில் சிலுவை அடையாளம் வரையலாம்)
திருமறை பகுதி
சங்கீதம் 91 அல்லது
2 சாமுவேல் 7 : 25 - 29
ஜெபம் பண்ணக்கடவோம்
கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்
கிறிஸ்துவே எங்களுக்கு இரங்கும்
கர்த்தாவே,எங்களுக்கு இரங்கும்
கர்த்தருடைய ஜெபம்
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே .... ஆமென்.
மன்றாட்டு ஜெபங்கள்
ஆபிரகாமை அழைத்து, ஆசீர்வதித்து உலகின் மக்களுக்கு ஆசீர்வாதமாக்கின எங்கள் பிதாக்களின் கடவுளாகிய ஆண்டவரே,
இந்த வீட்டை ஆசீர்வதித்தருளும்.
எகிப்திலே யோசப்பை ஆசீர்வதித்து அவனை மேன்மைப்படுத்திய எங்கள் ஆண்டவரே,
இந்த வீட்டை ஆசீர்வதித்தருளும்.
நாசரேத்தூர் யோசசேப்பின் குடும்ப வாழ்க்கையினால் எல்லாக் குடும்பங்களையும் ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய கிறிஸ்துவே,
இந்த வீட்டை ஆசீர்வதித்தருளும்.
சகேயுவின் வீட்டிற்குள்ளே சென்று, இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்று அருள் வாக்குரைத்த கிறிஸ்து இயேசுவே,
இந்த வீட்டை ஆசீர்வதித்தருளும்.
தொடர்ந்து ஜெபிப்போம்...
சமாதான தாபரங்களிலும் நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய் தங்கும் இடங்களிலும் உமது மக்களைக் குடியிருக்கச் செய்கிற ஆண்டவரே, உமது நாமத்தினாலே, நாங்கள் ஆசீர்வதிக்கிற இந்த வீட்டை நீர் ஆசீர்வதிக்க உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். பகைவரின் எல்லா விக்கினங்களையும் இதினின்று அறவே அகற்றியருளும். உம்முடைய அடியார்கள் சமாதானத்தோடு வாழத்தக்கதாக, உம்முடைய பரிசுத்த தூதர்கள் இங்கு தங்கியிக்கக் கட்டளையிட்டருள வேண்டுமென்று
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
அன்பின் ஆண்டவரே, இந்த வீட்டில் வாசம் பண்ணி பொல்லாங்கானவற்றின் செயல்கள் அனைத்தையும் இதை
விட்டு அகற்றியருளும். இங்கே வாழுகின்ற யாவருக்கும் நீரே தாபரமாகவும், அரணிப்பான மதிலாகவும் இருக்கிறீர் என்பதை அவர்கள் காணத் துணை புரியும். அவர்கள் உண்ணும் உணவையும், உணவு அருந்தும் இடத்தையும் ஆசீர்வதிப்பீராக. அவர்கள் நூல்கள் வாசிக்கும் இடத்தை ஆசீர்வதித்து அந்நூல்களின் வாயிலாக உண்மையைக் கண்டடையச் செய்யும். அவர்கள் துயில் கொள்ளும் இடத்தை ஆசீர்வதித்து களைப்பிலே அவர்களுக்கு இளைப்பாறுதலை அருளிச்செய்யும். விருந்தினரின் அறையை ஆசீர்வதித்து நீரே அவரகளின் உபசரணைக் கர்த்தாவாயிருப்பீராக; தேவரீர் இந்த வீட்டின் பிரதான வாயிலாக விளங்கி இங்கே உட்பிரவேசிப்பவர்கள் இதன் வழியாக வெளியே செல்பவர்களையும் ஆசீர்வதிப்ரபீராக. இவர்கள் இன்றும் என்றும் செய்யும் எப்பணியிலும் உமக்குத் தொண்டு புரியவும், இவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியிலே உமது பிரசன்னத்தை உணரவும் இவர்களுக்குக்
கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்
சிறப்பு ஜெபம்
முடிவு கவி
ஆசீர்வாதம்
துணை நின்ற நூல்கள்
திருநெல்வேலி திருமண்டல வீடு பிரதிஷ்டை ஆராதனை புத்தகம்
0 Comments