Ad Code

பரிசுத்த பவுலின் ஆலயம் | St. Paul's Church | நல்லூர்

நெல்லைக்கும் தென்காசிக்கும் இடையே அமைந்துள்ள ஆலங்குளத்திற்கு வடக்கே 2 Km தொலைவில் உள்ள ஒரு கிராமம் நல்லூர். இதற்கு நல்ல ஊர் என்று அர்த்தம். மிஷன் பணியை செய்ய நல்ல இயற்கை சூழலும், நற்றன்பு கொண்ட மக்களும் இருந்ததால் இந்த  காரணப் பெயர் கனம். ரேனியஸ் ஐயரவர்களால் கொடுக்கப்பட்டது.

Paul's Church
St. Paul's Church, Nallur.

1830 ஆம் ஆண்டு நெல்லை அப்போஸ்தலர் என்று அழைக்கப்படும் Rev. ரேனியஸ் ஐயரவர்கள் நெல்லையில் இருந்து, ஆலங்குளம் அருகே வந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாசிகள் அங்கு இந்த நற்செய்தியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் காசியாபுரம் ஊரில் மூன்று குடும்பத்தினர் இயேசுவை நம்பினார்கள். பின்னர் குருவங்கோட்டையில் 80 குடும்பத்தினர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அந்த கால நெல்லை மண்டல CMS சபைகளில், குருவங்கோட்டை இரண்டாவது பெரிய  சபையாக விளங்கியது.

இந்தப் பகுதிகளில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. பிராமண குலத்தவர்கள் மற்றவர்களை அடிமைகள் போல் வேலை வாங்கினார்கள். போக போக தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவின் அன்பையும், சுதந்திர வாழ்வையும் ருசி பார்த்தபின் இன்னும் அந்த அடிமை நிலையில் வாழ விரும்பாமல் வெளிக்கு வந்தனர். இதனால் புறமத சுரண்டல் உபதேசியார் மற்றும் சபையின் மூப்பர்களை தாக்கினர். அவர்கள் தீக்கொழுத்தி விட்டு, அவர்களே காவல் துறைக்கு தகவல் கொடுத்து சபையின் அங்கத்தினர்களை சிறையில் அடைக்க வழி வகுக்கப்பட்டது.  இறைமக்கள் Rev. ரேனியஸ் ஐயரவர்களிடம் முறையிட, அவர் வழக்குகளை சந்தித்து, உண்மைக்காக வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

Rev.ரேனியஸ் ஐயரவர்கள் 60 ஏக்கர் நிலத்தை காசியாபுரம் அருகே வாங்கினார். 1832 ஆம் ஆண்டு புதிய குடியிருப்பை உருவாக்கிட, மக்கள் அங்கு குடியேற பயந்தனர். வெறும் இரண்டு குடும்பங்கள் மட்டும் துணிந்து தங்க சென்றனர். பின்னர் அங்கு ஆலயமாகவும் பள்ளியாகவும் பயன்படுத்த ஒரு பெரிய கட்டிடத்தை கட்டினார்.
அப்போது ஏழு குடும்பங்கள் அங்கு தங்க குடியேறினர். இந்த பகுதிக்கு தான் கனம். ரேனியஸ் ஐயரவர்கள் நல்லூர் என்று பெயரிட்டார்.

இந்த ஆலயத்தின் உபதேசியாராகவும், பள்ளித் தலைமை ஆசிரியராகவும் கடாட்சபுரத்தை சேர்ந்த திரு. விசுவாசம் அவர்களை நியமித்தார். சபை நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. 1833 ஆம் ஆண்டு Rev.ரேனியஸ் ஐயரவர்கள் முயற்சியினால் கிணறு வெட்டப்பட்டது. நல்ல சுவைமிக்க குடிநீராக இருந்ததால் சுற்றுப்புற மக்கள் இங்கு வந்து குடியேறினர். நல்லூர் சபை நல்ல முன்னேற்றம் கண்டது.

1835 ஆம் ஆண்டு முதல் 1840 வரை நல்லூர் சபையை Rev. ஜான் தாமஸ் ஐயா கவனித்து வந்தார். Rev. பால் ஷாப்டர் ஐயா 1840  - 1841 மற்றும் 1844 - 1854 வரை கவனித்து வந்தார்.  இடையில் Rev. ஸ்டீஃபன் ஹாப்ஸ் ஐயா பணியாற்றினார்கள். நெல்லை கல்விப் பணியின் தந்தை என்று அழைக்கப்படும் Rev. பால் ஷாப்டர் ஐயா தன்னுடைய காலக் கட்டத்தில் மிகுந்த பிரயாசப்பட்டு கல்விப் பணிகளை விரிவுபடுத்தினார். அந்த நாட்களில் மேற்கு திருநெல்வேலி பகுதிகளில் காணப்பட்ட முதல் உயர்நிலைப் பள்ளி இதுவாகும். பின்னே மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இவரது காலக்கட்டத்தில் 1850 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது.

CSI Church Nallur
Inside of St. Paul's Church

இதற்கிடையில்  1844 ஆம் ஆண்டு சபை பாடுகளை சந்திக்க நேரிட்டது. சுப்பையா என்ற சமய வெறி பிடித்த இருபது வயது வாலிபன் தன் அடியாட்கள் பத்து பேருடன் கலகம் செய்தான். கிருஷ்ண பரமாத்தா இருக்க வேண்டிய இடத்தில் கிறிஸ்துவா என்று சொல்லி கிறிஸ்துவர்களை துன்புறுத்தினர். சபையாரின் வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். அங்கிருந்து உப்பு மூட்டைகளை திருடி, ஆலய பொது கிணற்றில் நள்ளிரவில் கொட்டினர். மிஷனரி வாயிலாக இந்த செய்தி காவல் துறைக்கு சென்றது. இதற்கு பயந்து அந்த வாலிபர்கள் ஓடி ஒளிந்தனர். அதில் சுப்பையா, பாளையங்கோட்டையிலுள்ள தம் தாயிடம் தஞ்சம் புகுந்து, தமிழ் மொழியை நன்கு கற்றார்.

Krishnapillai
HA Kirushnapillai

1854 ஆம் ஆண்டு இவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தன் பெயரை ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளையாக மாற்றினார். இவர் அநேக கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவருடைய பாடல்கள் சில நம் கீதங்களும், கீர்த்தனைகளும் புத்தகத்தில் உள்ளன. தாம் வாலிப வயதில் நல்லூரில் செய்த தவறை எண்ணி, உணர்ந்து பாடிய பாடலின் கவி இதோ...


மேற்கு திருநெல்வேலி பகுதியில் முதல் சர்க்கிளாக செயல்பட்டது இந்த நல்லூர் சபையே. 1980 ஆம் ஆண்டு நல்லூர், ஆலங்குளம், ரட்சண்யபுரம், குருவங்கோட்டை, கரும்புளியூத்து, கரும்பனூர், காளத்திமடம், கல்லூத்து, துத்திகுளம், கீழபட்டமுடையார்புரம், குரிப்பன்குளம், சிவலார்குளம் ஆகியன நல்லூர் சேகரத்தில் இருந்தன. இதிலிருந்து ஆலங்குளம், கரும்புளியூத்து சேகரங்கள் வளர்ந்தன. 


2000  ஆம் ஆண்டு நல்லூர் சபை 150 வது ஆண்டு  விழாவைக் கொண்டாடியது. தற்போது 400க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் அங்கத்தினர்களாக உள்ளன. இன்றைக்கு நல்லூரில் ஒரு துவக்கப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி மற்றும் கலையியல் & அறிவியல் கல்லூரி உள்ளது.


இப்போது புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள். ஆண்டவரின் இல்லத்தின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக.

2020 Nallur Church
Nallur CSI Church 2020


துணை நின்ற நூல்கள்

மறையவிருந்த மாணிக்க கற்கள் - DA கிறிஸ்துதாஸ்
ஊரும் பேரும் - ஆர்.எஸ்.ஜேக்கப் 
இரு நூறாண்டு மலர்

Post a Comment

0 Comments