Ad Code

சங்கீதம் 3 - வெறுங்கால் பாட்டு



முகவுரை
  
எட்டு வசனங்களைக் கொண்ட மூன்றாம் சங்கீதம் வரலாற்றுப் பின்னணி கொண்ட சங்கீதம். இஸ்ரவேலின் இரண்டாம் அரசராகிய தாவீது ராஜா தன் மூன்றாம் குமாரன் தனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிய போது, வெறுங்காலால் ஒலிவமலைக்கு நடந்து போனார் (2சாமுவேல் 15). அப்போது பாடிய திருப்பாடல் தான் சங்கீதம் 3 என அதன் முகவுரையின்று அறியமுடியும். ஆகவே தான் இதற்கு ‘வெறுங்கால் பாட்டு” என்று தலைப்பிட்டுள்ளேன். 

நடைமுறை வாழ்க்கையை எடுத்தியம்பும் சங்கீதமிது. நினைவுகூர்ந்து ஜெபித்தல் என்ற பொருளில் வந்துள்ள சேலா என்ற வார்த்தையின் அடிப்படையில் இந்த சங்கீதத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. சத்துருவின் போராட்டம்
      
சங்கீதம் 3:1-2 கர்த்தாவே என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று என் ஆத்துமாவைக் குறித்து சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா)
        
முதல் இரண்டு வசனங்கள் தாவீதுக்கு இருந்த பகைஞர்களின் நெருக்கத்தினைக் குறித்து சொல்லுகின்றன. ஏற்கெனவே சவுலரசனால் வந்த துன்பங்கள் கொஞ்சமல்ல. இன்னும் சொந்த மகன் மூலம் வந்த இந்தப் பிரச்சனைகள் தாவீதை மனமடிவாக்கின. இந்தச் சூழ்நிலையில் சீமேயி தாவீதை தூஷித்து கல்லெறிந்தை 2 சாமுவேல் 16 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். 
        
  
2. கடவுளின் மகத்துவம்
            
சங்கீதம் 3:3-4 ஆனாலும் கர்த்தாவே நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா)
              
தாவீது அரசர் அவர் நம்பிக்கை வைத்துள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் வல்லமைகளை இந்த வசனங்களில் சொல்லுகிறார். கர்த்தரே கேடகம் (Shield), மகிமை (Glory), உயர்த்துகிறவர் (Lifter) மற்றும் கூப்பிடுதலைக் கேட்கிறவர் (Hearing God) என அவரது மகத்துவங்களைப் பாடுகிறார்.
              
3.தாவீதின் விசுவாசம்
                  
சங்கீதம் 3: 5 – 8 நான் படுத்து நித்திரை செய்தேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். எனக்கு விரோதமாய்ச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே எழுந்தருளும், என் தேவனே என்னை இரட்சியும்; என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, அவர்களுடைய பற்களையெல்லாம் தகர்த்துப் போட்டீர். இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உமது ஜனத்தின் மேல் இருப்பதாக. (சேலா)
                    
எல்லாமே எதிராக இருந்தாலும், தாவீதுக்கு சுகமான நித்திரையைக் கொடுத்துத் தாங்குகிற கர்த்தர் மேல் நம்பிக்கையிருந்ததை அவரது விசுவாச அறிக்கையின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. தாவீது எதைக் குறித்தும் பயப்படவில்லை. விசுவாசத்தோடு ஜெபிப்பதைக் காணமுடிகிறது. இரட்சிப்பு கர்த்தருடையது என்று அவரையே முழுதும் தாவீது சார்ந்து நிற்பதை நம்மால் உணர முடிகிறது.
                    
முடிவுரை
                      
தாவீதின் இந்த விண்ணப்ப சங்கீதம், கர்த்தரையே நம்பியிருந்த தாவீதுக்காக, அவன் சத்துருக்களுக்கெதிராக செயற்படும் கடவுளின் வல்லமையை எடுத்துரைக்கிறது. இந்த புரட்சி தாவீதின் பாவத்திற்கு (2 சாமுவேல் 12) கிடைத்த தண்டனை எனவும் கூறலாம்; ஏனென்றால் நீதிமானுக்குப் பூமியில் சரிக்கட்டப்படும் என்று வேதம் கூறுகிறது. தாவீது தன் பிழையை உணர்ந்ததால் கர்த்தரிடத்தில் இரக்கம் கிடைத்தது. கடவுளின் மீதுள்ள நம் விசுவாசம் நமக்கு வெற்றியைக் கொண்டுவரும்.

தற்காலத்தில் நாமும் வெற்றியைச் சுதந்தரித்துக் கொள்ள நம்மை நாமே நிதானித்தறிந்து, விசுவாசத்தைக் கடவுள் மீது வைத்து செயற்படுவோம். நம்மிடத்தில் வெறுமை காணப்பட்டாலும் கடவுள் தம் வல்லமையால் மகத்தான காரியங்களைச் செய்வார். கடவுளின் ஆசீர்வாதம் அவரின் பிள்ளைகளாகிய நமக்கு உரித்தாகட்டும்.

Post a Comment

0 Comments