செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பிரசங்கம் (Sermon) ஆயத்தம் செய்வது எளிமையானதாகத் தோன்றினாலும், அதில் சில முக்கியமான ஆன்மீக மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஏன்? காரணங்கள் இதோ...
1. ஆவிக்குரிய தொடர்பு இல்லாமை (Lack of Spiritual Connection)
பிரசங்கம் என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவது மட்டுமல்ல; அது இறைவனுடனான தனிப்பட்ட உறவிலிருந்து பிறக்க வேண்டியது. AI ஒரு இயந்திரம் என்பதால், அதற்கு உணர்வு (Empathy), ஆன்மீக அனுபவம் (Spiritual Experience) அல்லது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் இருக்காது. பிரசங்கம் தகவல் நிறைந்ததாக (Information-rich) இருக்கலாம், ஆனால் அது அபிஷேகம் நிறைந்ததாக (Anointing-rich) இருக்காது.
2. சூழல் அறியாமை (Lack of Contextual Awareness)
உங்கள் சபையில் உள்ள மக்களின் தற்போதைய மனநிலை, அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் அந்த ஊரின் கலாச்சாரம் போன்றவற்றை AI அறியாது. ஒரு மேய்ப்பராக உங்கள் மக்களுக்கு அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை ஆவியில் உணர்ந்து பேசும் "தனிப்பட்டத் தொடுதல்" (Personal Touch) இதில் விடுபடும்.
3. உண்மையற்றத் தன்மை (Lack of Honesty)
சபையார் தங்களுடைய போதகரின் செய்திகளை எதிர்பார்க்கிறார்கள். இயந்திரம் தயாரித்த ஒன்றைப் பேசும்போது, அங்கு உண்மையும் நேர்மையும் கேள்விக்குள்ளாகிறது. மேடையில் நின்று தவறான ஒரு தகவலைப் பகிர்ந்துவிட்டால், அது போதகரின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். ஒரு போதகர் தனது பிரசங்கத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். "ஏன் இதைச் சொன்னீர்கள்?" என்று ஒரு விசுவாசி கேட்டால், "AI கொடுத்தது" என்று சொல்ல முடியாது.
4. சத்தியமற்ற நிலைமை (Lack of the Truth)
AI பல வலைத்தளங்களை (Websites) பார்த்து, அதில் இருந்து, ஆங்காங்கே உள்ள தகவலை திரட்டிதான் தரும். ஒரு நிலையான செய்தியை ஆயத்தம் செய்து தர இயலாது. இது சத்தியமற்ற நிலைக்கு வழிவகுக்கும். அறியாமலேயே வேதாகமக் கருத்துக்களுடன் "உலகப் பிரகாரமான தத்துவங்கள்" (Secular Humanism) கலந்துவிட வாய்ப்புள்ளது. இது தூய நற்செய்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும்.
5. தவறான போதனைகள் (Theological Risks)
AI இணையதளத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் கொண்டு பதிலளிக்கிறது. இதில் சில நேரங்களில், வேத வசனங்கள் தவறாகப் பொருள் கொள்ளப்படலாம்; சபையின் கோட்பாடுகளுக்கு (Doctrines) முரணான கருத்துக்கள் கலக்க வாய்ப்புண்டு; மற்றும் தவறான புள்ளிவிவரங்கள் அல்லது ஆதாரமற்ற கதைகளை அது உண்மையானது போல வழங்கலாம்.
நிறைவாக...
போதிப்பது என்பது ஒரு தெய்வீகப் பொறுப்பு. அதை ஒரு இயந்திரத்திடம் முழுமையாக ஒப்படைப்பது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகும். பிரசங்கத்தின் கருப்பொருள் (Theme), கட்டமைப்பு (Outline) மற்றும் முடிவுரை (Application) ஆகியவை உங்களுடைய ஜெபத்திலிருந்தும், வேத தியானத்திலிருந்தும் மட்டுமே வர வேண்டும்.
"AI தயாரித்த பிரசங்கம் ஒரு விரிவுரை (Lecture) போல இருக்குமே தவிர, அது ஒரு உயிருள்ள செய்தி (Living Message) ஆக இருக்காது."
வேதாகமம் சொல்கிறது (யாக்கோபு 3:1): "போதிக்கிறவர்களாகிய நாம் அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக."
Prepared by
Meyego.

0 Comments