🇮🇳 இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் தான் நேதாஜி என்று அன்போடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ்.
🇮🇳 இவர் 23.01.1897 இல் ஒரிசா மாநிலம் கட்டாக்கில், ஜானகிநாத் போசு, பிரபாவதி தேவி என்ற பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறுவயதில் இருந்தே வீரமிக்கவராக, மனத்தைரியம் கொண்டவராக வளர்ந்தார்.
🇮🇳 ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் ஏற்பட்ட சண்டையால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
🇮🇳 பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
🇮🇳 காந்தியின் செயல்களை துணிந்து எதிர்த்தாலும், அவர் மீது கொண்ட அன்பால் காந்தியை "தேசத் தந்தை" என்று இவரே முதலில் அழைத்தார். இருமுறை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த பின் ஃபார்வேர்ட் ப்ளாக் என்ற தனிக் கட்சி ஆரம்பித்தார்.
🇮🇳 இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
🇮🇳 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். ஒருநாள், பெண்கள் படை கூடாரத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த நேதாஜியை தடுத்த பெண் அதிகாரி கோவிந்தம்மாளுக்கு, அப்படையின் உயரிய விருதான "லாண்ட்சு நாயக்" விருது வழங்கி கௌரவித்தார்.
🇮🇳 ஆகஸ்ட் 16, 1945-ல் பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் சென்ற நேதாஜி ஆகஸ்ட் 18 தைபே விமான விபத்தில் இறந்ததாக சொல்லப்படுகிறது.இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்த, சுதந்திரதிற்காக பாடுபட்ட இவரது மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
0 Comments