தலைப்பு : இறைவனிடத்தில் எடுபடாத இடும்பு
திருவசனம் : யாத்திராகமம் 18.11 "....அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்..."
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். இஸ்ரவேல் மக்கள் எகிப்தின்று விடுதலையாகி கானானை நோக்கி செல்லுகையில், இதைக் குறித்து கேள்விப்பட்ட மோசேயின் மாமன் எத்திரோ, மோசேயின் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கூட்டிக்கொண்டு வந்து அவரை சந்தித்தார். அப்போது அவர்களை ஏற்றுக்கொண்டு மோசே, ஆண்டவர் எவ்வாறு விடுவித்தார்? சந்தித்த தொல்லைகள் என்ன? கடவுள் எப்படி நடத்தினார்? என்று தம் மாமனாருக்கு விவரித்துச் சொன்னார். அப்போது எத்திரோ மகிந்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி சொன்னது தான்: எகிப்தியர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்.
விளக்கவுரை
இடும்பு என்றால் என்ன? இதை மூல பாஷை எபிரெயத்தில் பார்க்கும்போது, (זָד֖וּ - zā·ḏū) கொதித்து குமுறுகிற (Seethe / Boil up / Act Proudly) என்று அர்த்தம். இதற்கு இணையாக தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிற இடும்பு என்ற சொல்லுக்கு அகந்தை, அவமதிப்பு, கொடுஞ்செயல் என்ற அர்த்தங்களும் உண்டு. எகிப்தியரிடத்தில் இருந்த ஆணவத்தின் உச்சநிலையை குறிக்கிறது எனலாம்.
ஆம் உண்மையாகவே எகிப்தின் பார்வோன்கள், அதிகாரிகள் மற்றும் மக்கள் கொடுமைவாதிகள் போல, இஸ்ரவேல் மக்களை நடத்தினர் மற்றும் அழிக்க நினைத்தனர் என்று யாத்திராகமம் முதல் அதிகாரத்தில் வாசிக்க முடியும். அதோடு மாத்திரமல்ல, இஸ்ரேலரின் இறைவனாகிய யாவே என்னும் ஆண்டவருக்கு விரோதமாக தங்கள் இருதயத்தை கடினப்படுத்தியதை அறிந்திருக்கிறோம். இந்த இடும்பு செயல்களை எல்லாம் கவனித்த கடவுள் அவர்களை மேற்கொண்டார். நைல் நதியில் இரத்தமாதல் தொடங்கி செங்கடல் வரை தாம் யார்? எப்படிப்பட்டவர் என்பதை கற்றுக்கொடுத்தார்.
நிறைவுரை
இன்றைக்கும் இறைவனுக்கு எதிராக, இறைமக்களுக்கு எதிராக இடும்பு செய்கிறவர்களுக்கு இதுவொரு பாடம். இறைவனிடத்தில் இடும்பு எடுபடாது என்று புரிந்துகொள்ள வேண்டும். சங்கீதம் 31.23 சொல்லுகிறது: கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்கு முழுமையாய் பதிலடி கொடுப்பார். இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments