Ad Code

பாரத்தை பகிர்ந்துகொள்ள அழைப்பு • கலாத்தியர் 6:2 Galatians

1. ஞாயிறு குறிப்புகள்  
ஞாயிறு:
 கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் 5-ம் ஞாயிறு (லெந்து என்னும் நாட்களில் 2-ம் ஞாயிறு)
தேதி: 01/03/2026
வண்ணம்: கரு நீல நிறம்
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: 2 சாமுவேல் 9:1-13
நிருப வாக்கியம்: கலாத்தியர் 6:1-10
நற்செய்தி பகுதி: மாற்கு 2:1-12
சங்கீதம்: சங்கீதம் 41

 2. திருவசனம்
தலைப்பு: பாரத்தை பகிர்ந்துகொள்ள அழைப்பு 
இருப்பிடம்: கலாத்தியர் 6:2 
திருவசனம்: (பவர் திருப்புதல்) 
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். 
   (திருவிவிலியம்) ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்: இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

 3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
இந்த தவக்காலத்தின் ஞாயிறில் கிறிஸ்துவின் குணங்களை நாமும் பின்பற்ற நமக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. 

 4. வசன குறிப்புகள் நூலாசிரியர்:
ஆசிரியர்: அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் (கலாத்தியர் 1:2)
அவையோர்: கலாத்தியா பகுதியில் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் எழுதப்பட்ட கடிதம். 
வசன பின்னணி:
கலாத்தியர் திருச்சபையில் உள்ள மக்கள் குறிப்பாக யூதர்கள் நியாயப்பிரமாண சட்டத்தை பின்பற்றி, சபையில் குற்றம் செய்வோரை கடுமையாக தண்டிக்கவும், புறம்பாக்கவும் ஒப்புதல் அளித்து செயலாற்றினர் (கலா 5:15). இதை பவுல் அடிகளார் கண்டித்து கிறிஸ்து கூறிய பிரமாணத்தை நிறைவேற்றி , தூய ஆவியானவரின் சித்தத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள் என புத்திமதி கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. 

 5. திருவசன விளக்கவுரை
இந்த வசனத்தை கலாத்தியர் 5-ம் அதிகாரத்தின் 25 ஆம் வசனத்திலிருந்து தொடர்ச்சியாக படிக்கும்போது அதன் பொருள் புலப்படுகிறது. ஆவிக்குரியவர்களாக நடப்பது என்பது சக மனிதரையும் எந்த வித பிரிவினையுமின்றி ஏற்றுக்கொண்டு, நல்வழிப்படுத்துவதைக் குறிக்கிறதாக பவுல் அடிகளார் தெளிவுப்படுத்துகிறார். 

அவ்வாறு நல்வழிப்படுத்துவதன் ஒரு பகுதி தான், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பது ஆகும். வெளிப்படையாக தலையில் சுமக்கப்படும் சுமையை உருவகமாக சொல்லி, தவறு செய்த நபரின் உள்ளத்தில் உள்ள குற்றச்சுமையைக் கருணையினால் நீக்கிவிட பவுல் அடிகளார் கூறுகிறார் (V.1 ). அக்கிரம செயலினால் தனித்துவிடப்படுவதை விடுத்து, ஒருவருக்கொருவர் அரவணைப்பாக இருந்து சரியான பாதையில் நடந்திட அறைகூவல் விடுக்கிறார் (V.2 a). செய்த தப்பிதங்களுக்கு கண்டிப்பும் தண்டனையும் கொடுப்பதை விட, அன்பு செலுத்தி ஆண்டவரோடு உள்ள உறவில் பலப்படச்செய்வது தான் கிறிஸ்துவின் பிரமாணத்தை (கலா. 5:15) நிறைவேற்றுவது என வலியுறுத்துகிறார் V. 2 b). 

 6. இறையியல் & வாழ்வியல்
இன்றைய திருச்சபையிலும், குடும்பங்களிலும், சமுதாயத்திலும் குற்றம் செய்த மனிதரை பார்க்கும் விதமும், நடத்தும் பண்பும் அவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கிறது என சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்து நமது குற்றங்களிலிருந்து நம்மை விடுதலையாக்க தம்முடைய அன்பை வெளிப்படுத்தியது போல, நாமும் பாவத்தில் அகப்பட்டோர், குற்ற மனசாட்சி உடையோரை சீர்ப்படுத்த ஆண்டவர் அழைக்கிறார். 

 7. அருளுரை குறிப்புகள் :
1. கருணையோடு அணுகும் கிறிஸ்துவின் பாரம்
2. அரவணைத்து நல்வழிப்படுத்தும் கிறிஸ்துவின் பாரம்
3. கண்டிப்பு அல்ல அன்பு எனும் கிறிஸ்துவின் பாரம்

எழுதியவர்
திரு. கிறிஸ்து ராசையா
சபை ஊழியர் 
அடைமிதிப்பான்குளம்

Post a Comment

0 Comments