திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: பெந்.திரு. பின்வரும் 3 -ம் ஞாயிறு (திருத்துவ-2)
தேதி: 14/06/2026
வண்ணம்: பச்சை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: யோபு 12:7-12
நிருப வாக்கியம்: வெளி. 22:1-6
நற்செய்தி பகுதி: லூக்கா. 12:24-34
சங்கீதம்: 9
2. திருவசனம்
தலைப்பு: இயற்கையில் ஒலிக்கும் இறைவனின் குரல்
இருப்பிடம்: லூக்கா 12:24
திருவசனம்:
(பவர் திருப்புதல்) காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார், பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
(திருவிவிலியம்) காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினம். இதற்கு அடுத்து வரும் ஞாயிறு சுற்றுச்சூழல் ஞாயிறாக ஆசரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில், ஜூன் முதல் ஞாயிறு கல்வி ஞாயிறாக வந்தால், இரண்டாம் ஞாயிறு சுற்றுச்சூழல் ஞாயிறாக ஆசரிக்கப்படும்.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர் &அவையோர்: இந்த நற்செய்தி நூலை எழுதியவர் லூக்கா என்பவர் ஆவார். இவர் கிரேக்க இனத்தை சார்ந்த மருத்துவர் (கொலோ 4:14). இவர் பவுல் அப்போஸ்தலரின் நண்பரும் மற்றும் உதவியாளருமாயும் இருந்தார். அப்போஸ்தலர் நடபடிகள் லூக்கா நற்செய்தியாளரால் எழுதப்பட்ட நூல். லூக்கா நற்செய்தி நூல் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் இவ்விரண்டு நூல்களும் கனம் பொருந்திய தெயோபிலு -வுக்கும் மற்றும் பிற இனத்தவர்களுக்கும் எழுதப்பட்டுள்ளது.
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை: இந்த நூல் சுமார் கி.பி. 60-ல் ரோமில் வைத்து லூக்கா எழுதிருக்க வாய்ப்பிருக்கிறது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எருசலேம் அழி க்கப்பட்ட கி.பி. 70 -க்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
வசன பின்னணி: இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்கள் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படை (உணவு, உடை) தேவையை குறித்து கவலைப்படாமல் (anxiety) சுதந்திரமாக வாழ்வதற்கு முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையே தேட வேண்டும் என்கிறதான கருத்தை சவாலாக முன்வைக்கிறார்.
5. திருவசன விளக்கம்
அடிப்படை தேவையான உணவுக்காக கவலைப்பட கூடாது என்பதை விளக்குவதற்காக இயேசு கிறிஸ்து இங்கு காகங்களை உவமையாக பயன்படுத்துகிறார். யூதர்களுடைய பார்வையில் காகங்கள் தூய்மையற்றது மற்றும் அருவருப்பானதாக கருதப்படுகிறது (லேவி. 11:15; உபா. 14:14. மனிதர்ள் தங்ககளுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதமாக (guarantee) விதைத்து, அறுத்து பண்டக சாலையில் சேர்த்து வைக்கிறார்கள். ஆனால் இதை போன்ற தற்காப்பு (Precautions) எதுவுமே இல்லாத காகங்களை ஆண்டவர் ஒவ்வொரு நாளும் நேர்த்தியாக உணவு கொடுக்கும் போது (யோபு. 38:41), அவைகளைப் பார்க்கிலும் விசேஷித்தவர்களாக இருக்கிற மனிதர்களுடைய அடிப்படை தேவைகளையும் ஆண்டவரால் நேர்த்தியாக சந்திக்க முடியும். எனவே, சீஷர்கள் எதைக் குறித்தும் கவலைப்படாமல் ஆண்டவருடைய இராஜ்ஜியத்தை மாத்திரமே முதன்மைப்படுத்தும் படி இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியப் பாதையில் மனிதர்களை அறிவுறுத்தும் படியாக இயற்கையை (மலை, காட்டு புஷ்பம், பறவைகள், விலங்குகள்) கருவியாக பயன்படுத்துகிறார். காகங்கள் தங்களுடைய வாழ்க்கையில் உழைப்பதில்லை அறுப்பதில்லை மற்றும் பண்டக சாலைகளில் சேர்த்தும் வைப்பதில்லை என்கிற போதனை மனிதர்களை எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேரிகளாக இருப்பதற்கு வலியுறுத்தவில்லை. மாறாக இப்போதனையில் இயேசு கிறிஸ்து மனிதர்களைக் காட்டிலும் அறிவில் குறையுள்ள பறவைகளையே ஒரு குறைவில்லாமல்ஆண்டவர் பராமரித்தால் , அதை காட்டிலும் விசேஷித்தவர்களாயிருக்கிற மனிதர்களை ஆண்டவர் எந்த அளவிற்கு பராமரிப்பார் என்பதை இயற்கையின் மூலம் வலியுறுத்துகிறார்.
7. அருளுரை குறிப்புகள்
1. இயற்கை கடவுளால் படைக்கப்பட்டது
2. இயற்கை கடவுளால் பராமரிக்கப்படுகிறது
3. இயற்கை கடவுளின் பாடத்தைக் கற்பிக்கிறது
எழுதியவர்
தா. ரெபின் ஆஸ்டின்

0 Comments