1871-இல் ஹென்றி பவர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு, 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய தமிழ் வேதாகமத்தை (Old Version) இந்திய வேதாகம சங்கம் தற்போது மறுதிருத்தம் செய்துள்ளது. மூலக் கருத்து மாறாமல் இன்றைய தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்ப திருத்தப்பட்ட இந்த வேதாகமம், "தமிழ் ஓ.வி. ரீ-எடிட்டட் பைபிள்" (Tamil Bible O.V. Re-edited) என்ற பெயரில் புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
1. வழக்கு ஒழிந்த மற்றும் தவறான புரிதல் கொண்ட சொற்கள் மாற்றம்
காலப்போக்கில் புழக்கத்தில் இல்லாத மற்றும் வாசிப்போருக்கு தவறான அர்த்தத்தைத் தரக்கூடிய பல பழைய சொற்கள், தற்கால எளிய தமிழ்ச் சொற்களாக மாற்றப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட சில முக்கிய சொற்கள்:
* பிரதியுத்திரமாக -> மறுமொழியாக
* துபாசி -> மொழிபெயர்ப்பாளன்
* துர்ஜன பிரவாகம் -> பொல்லாதவர்களின் கூட்டம்
* உம்பலிக்கையாக -> சுதந்திரமாக
* அஞ்சிக்கையோடு -> பயபக்தியோடு
* எவ்வன ஜனம் -> இளைஞர்
* சமாசி -> மத்தியஸ்தம்
* ஜாதி பிசாசு -> இவ்வகை பேய்
* புறஜாதியார் -> பிற ஜனத்தார்
* சர்ப்பனையை -> சதி திட்டத்தை
* அபரஞ்சி பூஷணம் -> பசும் பொன் ஆபரணம்
2. இலக்கணப் பிழைகள் நீக்கம்
பழைய மொழிபெயர்ப்பில் இருந்த ஒரு சில இலக்கணப் பிழைகள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன. உதாரணமாக, சங்கீதம் 139:16-ல் "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது" என்று இருந்த வாக்கியம், இலக்கண முறைப்படி "என் கருவை உம்முடைய கண்கள் கண்டன" என பன்மையாகச் சரியாக மாற்றப்பட்டுள்ளது.
3. மூல மொழிகளோடு ஒப்பிட்டுச் செய்யப்பட்ட வசனத் திருத்தங்கள்
பழைய பதிப்பில் எபிரேய, கிரேக்க மூல மொழிகளின் அர்த்தத்தில் இருந்து சற்று மாறுபட்டு, தவறான புரிதலை ஏற்படுத்திய சில முக்கிய வசனங்கள் மூல மொழியோடு மறு ஒப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளன.
* யோவான் 1:1: "ஆதியிலே வார்த்தை இருந்தது" என்பது, அது இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதால் "ஆதியிலே வார்த்தை இருந்தார்" என்று மாற்றப்பட்டுள்ளது.
* ரோமர் 5:20: பழைய பதிப்பில் "மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது" என்று இருந்தது (அதாவது பாவம் பெருகவே தேவன் சட்டத்தைக் கொடுத்தார் என்ற தவறான அர்த்தம் தந்தது). இது தற்போது "நியாயப்பிரமாணம் வந்தபடியால் மீறுதலின் மிகுதி தெரிந்தது" என சரியாக மாற்றப்பட்டுள்ளது.
* யோவான் 8:23: இயேசு தன்னை "நான் உயர்விலிருந்து உண்டானவன்" (படைக்கப்பட்ட ஒரு பொருள் என்ற அர்த்தம்) என்று கூறுவது மாற்றப்பட்டு, "நான் மேலே இருந்து வந்தவர்" என்று திருத்தப்பட்டுள்ளது.
* நீதிமொழிகள் 16:4: "தீங்கு நாளுக்காக துன்மார்க்கனையும் உண்டாக்கினார்" என்பது "தீங்கு நாளுக்காக துன்மார்க்கனையும் வைத்திருக்கிறார்" என மாற்றப்பட்டுள்ளது.
* மேலும், 'இஸ்ரவேல்' தேசத்தின் பெயரானது எபிரேய உச்சரிப்பின்படி 'இஸ்ரயேல்' என்று மாற்றப்பட்டுள்ளது (இதில் 'ஏல்' என்பது கடவுளைக் குறிக்கும்).
இன்னும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்னும் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.

0 Comments