Ad Code

4. முகமுகமாய் எதிர்த்தேன் | Opposition with Face to Face | கலாத்தியர் 2.11 Galatians | திருமறை தியானம்

தியானம் : 4 / 18.02.2022
தலைப்பு : முகமுகமாய் எதிர்த்தேன்
திருவசனம் : கலாத்தியர் 2.11 " மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள்... கலத்தியர் 2 ஆம் அதிகாரத்தில் எருசலேம் சங்கம் பற்றியும், அந்தியோகியாவில் மீண்டும் பேதுருவை சந்தித்த போது நடந்ததையும் கலாத்திய சபைக்கு எழுதியுள்ளார். அப்படி என்ன நடந்தது? ஏன் முகமுகமாய் எதிர்த்தார்? என்று தியானிப்போம்.

விளக்கவுரை

கிபி 49 இல் நடைபெற்ற (அப்போ 15) முதல் எருசலேம் சங்கம், பவுல் வைத்த கோரிக்கையின் பேரில், யூதரல்லாத புறஜாதி மக்களுக்கும், நற்செய்தி அறிவித்து, ஏற்ற தாழ்வில்லாமல், விருத்தசேதனமின்றி, கிறிஸ்துவின் சபையாகிய மந்தையில் சேர்க்க தீர்மானித்தது. அதுவரை யூத கிறிஸ்தவர்கள் மற்றும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டது. பின்னர் பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியாவில் ஊழியம் செய்த போது பேதுரு அங்கே வந்திருந்தார். அப்போது பேதுரு புறஜாதியாருடன் இணைந்து சாப்பிட்டார். ஆனால், யூத வைராக்கியத்துடன் இருந்த யாக்கோபின் நபர்கள் அங்கே வந்த பின்பு, விருத்தசேதனமுள்ள அவர்களுக்குப் பயந்து தனியே சாப்பிட சென்றார். பர்னபா உட்பட மற்ற யூதர்கள் பேதுருவோடு சேர்ந்து மாயம் பண்ணினார்கள். 

இந்த சம்பவம் புறஜாதி மக்களுக்காக குரல் கொடுத்த, பவுலடிகளை கேள்வி கேட்க வைத்தது? திருச்சபையின் தூண்களில் ஒருவரான பேதுருவின் இந்த செயலால், பவுல் பேதுருவை நேருக்கு நேர் முகமுகமாய் எதிர்த்தார். ஏனென்றால், இவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்ப சரியாய் நடக்கவில்லை. பேதுருவும் கொர்நேலியுவை (அப்போ 10) சந்திக்கும்முன், தான் கண்ட காட்சியில் சமத்துவம் குறித்தே கற்றுக்கொடுக்கப்பட்டது. பயம் மற்றும் பிரியப்படுத்துதல் மாய்மாலத்திற்கு நேராக நடத்தின. ஆனால் தைரியம் மற்றும் சத்தியத்திற்காக போராடுதல் மாய்மாலத்திலிருந்து மீளவைத்தன.

நிறைவுரை
பவுலடிகளாரின் இந்த செயலை நான் பராட்டுவேன். இந்த காரியத்தில் முகமுகமாய் எதிர்ப்பது தவறல்ல. ஏனென்றால் இவர்கள் கிறிஸ்தவத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள். இது பகையாக முடியவில்ல. தனிக்கொள்களை வகுத்துக் கொண்டு பிரியவில்லை. பேதுரு தம் கடைசி நிருபத்தில் பவுலை மேற்கோள்காட்டி எழுதியுள்ளார். தவறை ஏற்றுக்கொண்டு மாறுவது தான் தலைசிறந்த பண்பு. இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் கண்ணால் கண்டிராத, தீர விசாரிக்காத ஆனால் கேள்விப்பட்டவற்றிற்காய் குறைகூறுவது போன்றது இதுவல்ல. உள்ளத்தன்போடு முகமுகமாய் அதாவது நேருக்கு நேர் தன் கருத்தை பதிவு செய்வது தான் சரியான அணுகுமுறையாகும்.
இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments