Ad Code

வில்லியம் கேரி வரலாறு | William Carey

William Carey
Rev. Dr. William Carey

கேரியின் சிறுபிராயம்

வில்லியம் கேரி, 17.08.1761 அன்று  இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷைர் மாவட்டத்தின் பாலர்ஸ்பரியில் ஒரு சிறிய குடிசையில் எட்மண்ட் மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தார். பக்தியும் கல்வியறிவும் மிக்க இந்த பெற்றோருக்கு 5 குழந்தைகள் மற்றும் அவர்கள் நெசவாளர்களாக பணியாற்றியதால் வாழ்க்கை கடினமாக இருந்தது. 1767 ஆம் ஆண்டில் அவரது தந்தை கிராம பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டபோது குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தனது பன்னிரண்டு வயதில் தனக்கென ஒரு அறையில் சிறிய நூலகம் மற்றும் இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகம் அமைத்து தாவரங்கள், கற்கள், பூச்சிகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றின் தொகுப்பை சேகரித்து வைத்திருந்தார். அவர் பயண புத்தகங்களை ஆவலாக படித்தார். அதிகமான மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டு கற்றார்.


கேரியின் வாலிபப் பருவம்

16 வயது முதல் 28 வயது வரை ஷூ பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார்.  கேரியோடு சக பயிற்சியாளனாக செருப்புக் கடையில் பயிற்சி பெற்று வந்த வார்டு என்ற வாலிபனின் ஆழமான அசைக்க முடியாத கிறிஸ்தவ ஜீவியத்தின் நற்சாட்சி வில்லியம் கேரியினைத் தொட்டது. வில்லியம் அவ்வப்போது ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் ஒருமுறை வில்லியம் தன்னுடைய எஜமானனின் நாணயம் ஒன்றினை எடுத்துச் செலவழித்து விட்டு அதற்குப் பதிலாக ஓர் உடைந்த செல்லாத நாணயத்தை அதில் வைத்து விட்டார். ஆனால் அவருடைய எஜமான் அதைக் கண்டுபிடித்து எல்லாருக்கும் முன்பாகவும் அவரை அவமானப்படுத்தி விட்டார். இந்த அனுபவம் கேரி தன் இதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க நடத்தியது. கேரி பாவத்தைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டு மனந்திரும்பினார். அதே நேரத்தில் அநேக புத்தகங்கள் வாசிப்பார். 10.06.1781 அன்று தன் 20வது வயதில் டாரதியை திருமணம் செய்தார் இளம் கேரி.


கேரியின் ஊழிய வாஞ்சை

05.10.1783 அன்று திரு. ஜான் ரைலாண்டால் அவர்களால் முழுக்காட்டுதல் பெற்று பாப்டிஸ்ட் தூதரகங்களில் சேர்ந்து பணியாற்றினார்.
1791 ஆம் ஆண்டு  கேரி போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார். பாப்டிஸ்து சபை போதகர்களுடைய ஆண்டு நிறைவுக் கூட்டம் ஒன்றில் 1792-ம் ஆண்டில் வில்லியம் கேரி ஆண்டவருடைய செய்தியைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார். கடவுளிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார்; கடவுளுக்காக பெரிய காரியங்களை சாதிக்கப் பார் என்பதே அவருடைய செய்தியின் மையமாக இருந்தது. இந்தக் கருத்தே அவர் வாழ்க்கை முழுவதிலும் அவர் குறிக்கோளாகவும் மாறி விட்டது. இந்தக் கூட்டத்தின் விளைவாக பாப்டிஸ்து மிஷனரி சங்கம் (BMS - Baptist Missionary Society) ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்கம் உடனடியாக ஒரு மிஷனரியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் முன் வந்தது.


மிஷனரியாக இந்தியாவில் கேரி

இந்த மிஷன் வாயிலாக இந்தியாவில் பணிபுரிய கேரி தன் குடும்பத்துடனும் டாக்டர் தாமஸீடனும் 13.06.1793 அன்று கப்பல் ஏறினார். 1793 நவம்பர் 11 ஆம் தேதி வங்காளத்தில் தனது 33 ஆம் வயதில்  தரையிறங்கினார்.  அவர் இரண்டு கோட்பாடுகள் வைத்திருந்தார். (1) ஒரு மிஷனரி அவர் அனுப்பப்படும் மக்களின் தோழர்களில் ஒருவராகவும் சமமாகவும் இருக்க வேண்டும்; மற்றும் (2) ஒரு மிஷனரி விரைவில் பூர்வீக, சுய ஆதரவு, சுய பிரச்சாரம் ஆகியவற்றோடு பணிசெய்ய  சுதேச ஊழியர்களை ஏற்படுத்த வேண்டும்.


சோதனைகளை சகித்த கேரி

இந்தியாவில் அவர் வாழ்ந்த முதல் வருடத்தில் அவருடைய குடும்பத்தின் மக்கள் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக நோய்வாய்ப்பட்டனர். அவருடைய அருமையான ஐந்து வயது மகன் பீட்டர் இறந்து போனான். இந்து, முஸ்லீம் வேலை ஆட்கள் புதைகுழி வெட்ட முன் வரதாததால் தாமாகவே புதைகுழி வெட்டிட, அப்போது இரண்டு பேர் அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். பின்னர் தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சாயத் தொழிற்சாலையில் பொறுப்பாளராக கேரி வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த பணியும் சிறிது காலத்திலேயே அவரை விட்டுப் போனது. பெலவீனப்பட்ட தன் மனைவியை இழந்து மறுமணம் முடித்தார்.  கல்கத்தாவில் உள்ள அரசாங்கக் கல்லூரியில் கேரி வங்கமொழி பேராசிரியராக பணியாற்றினார். அங்கு சமஸ்கிருதத்தையும் மராட்டியையும் கூட அவர் போதித்தார். 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர் தன் வருவாயில் ஒரு சிறு பகுதியை மட்டும் தன் செலவுக்காக வைத்துக்கொண்டு, பெரும் பகுதியை கடவுளுடைய ஊழியத்திற்கென்றே பயன்படுத்தினார்.


கேரியின் மிஷனரி நண்பர்கள்

வில்லியம் கேரி, ஜோஷ்வா மார்ஷன் மற்றும் வில்லியம் வார்டு ஆகிய மூவரும் Serampore Trio என்றழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் கடவுள் கொடுத்த அழைப்பு மற்றும் தாலந்துகளின் அடிப்படையில் திறம்பட பணியாற்றி கேரிக்கு மிகுந்த உதவியாக இருந்தனர். கேரி தம் குடும்பத்தினரை இழந்த சமயங்களில் மிகுந்த ஆதரவாக இருந்தனர்.

Serampore Trio
Serampore Trio


கேரியின் மொழிபெயர்ப்பு பணி

தனது நீண்ட கடற்பிரயாணத்திலேயே கேரி வங்காள மொழியைக் கற்க ஆரம்பித்தார். பிறகு அவர் இந்துஸ்தானி, பாரசீகம், மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார். இந்தியா வந்து இறங்கியவுடனேயே அவர் இந்திய மக்களோடு வங்க மொழியில் உரையாட ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, வேத வசனங்களை அச்சடிப்பதற்கு ஓர் அச்சுக் கூடமும் ஆரம்பித்தார். பிரிண்டிங் பணியில் வில்லியம் வார்டு அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவரது அச்சுக்கூடமும் தீக்கிரையானது என்றாலும் இச்சம்பவங்கள் கேரியை எந்த விதத்திலும் மனந்தளர்ந்து போகச் செய்யவில்லை. மீண்டும் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டார். புதிய ஏற்பாடு முழுவதும் வங்காள மொழியில் 1800 ஆம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது. தனது மரணத்திற்கு முன்பாக இவர் புதிய ஏற்பாட்டை நாற்பதுக்கு மேலான மொழிகளிலும், இருபதுக்கு மேலான மொழிகளில் முழு வேதாகமத்தையும் மொழி பெயர்த்திருந்தார்.


கேரியின் நற்செய்தி பணி

கேரி ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்த ஊழியத்தின் முதல் கனியான கிறிஸ்னு பால் என்னும் ஒரு தச்சனுக்கு  ஞானஸ்நானம் கொடுத்தார். இவன் ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு அநேக பாடுகளைக் கடந்து வந்த போதிலும் கிறிஸ்னு  பால் உண்மையான ஒரு கிறிஸ்தவனாக நிலைத்திருந்து தன் வாழ்க்கையின் மூலமாக பலரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினான். கேரி இந்தியாவில் ஊழியம் செய்த 22 ஆண்டு காலத்தில் 765 பேர் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத் தப்பட்டனர். கேரி மரிப்பதற்கு முன்னால் இந்தியாவில் 26 சபைகள் எழும்பின.


கேரியின் கல்விப் பணி

வில்லியம் கேரியோடு இணைந்து ஜோஷ்வா மார்ஷ்மன் மற்றும் அவரது மனைவி ஹன்னா மார்ஷ்மன் கல்வி பணி செய்தனர். செரம்பூர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் செயல்பட துவங்கியது. 1818 ஆம் ஆண்டு செராம்பூர் கல்லூரி நிறுவப்பட்டது. இன்றைக்கு இந்தியாவில் இது வேதாகம செரம்பூர் பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது.

Serampore College
Serampore College


கேரியின் சமூகப் பணி

வில்லியம் கேரி ஓர் அனாதை இல்லத்தையும் ஒரு தொழுநோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார். இவரது வேண்டுக்கோளுக்கிணங்க அரசாங்கம் இறந்த கணவனோடு அவனது மனைவியையும் உயிரோடு எரிக்கும் “உடன்கட்டை ஏறுதல்” என்னும் பழக்கத்தை எதிர்த்து, ஒரு சட்டத்தை இயற்றி அதற்குத் தடை விதித்தது. அது மட்டுமல்ல, உயிர்ப்பலியாக பச்சிளங்குழந்தைகளைக் கங்கை நதியிலே தூக்கி எறியும் பழக்கமும் தடை செய்யப்பட்டதற்கு இவரே காரணமாய் இருந்தார்.


இறுதிவரை இந்தியாவில் கேரி

இப்படியாக மாபெரும் சாதனைகளைப் புரிந்த கேரி தன்னை ஒரு பயனற்ற ஊழியன் என்றும், சிறிதளவே பயன்பட்டவன் என்றே கூறினார். “நான் மறைந்த பின்பு, கேரியைப் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் கேரியின் இரட்சகரைப் பற்றியே பேச வேண்டும்” என்று தன்னுடைய இறுதி நாட்களில் தன்னைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடத்தில் கூறினார். தனது 72-ம் வயதில் “என்னுடைய வேலை முடிந்தது. ஆண்டவருடைய சித்தத்திற்குக் காத்திருப்பதை விட இதற்கு மேல் இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1834-ம் ஆண்டு ஜீன் மாதம் அவர் மரித்தார். அவருடைய உடல் தாம் நேசித்த இந்தியாவிலேயே இளைப்பாறுதலுக்காக அடக்கம் செய்யப்பட்டது.


தன் தாய்நாட்டுக்கு ஒருமுறை கூட செல்லாமல் 41 ஆண்டுகள் பணியாற்றிய, “இந்திய நவீன அருட்பணியின் தந்தை” என்றழைக்கப்படும் வில்லியம் கேரி இன்றைக்கும் ஒரு முன்னோடியாக, மாதிரியாக விளங்குகிறார்.

Post a Comment

4 Comments

  1. Candle of India given by God

    ReplyDelete
  2. அருமையான ஆழமான பயனுள்ள பதிவு. கிறிஸ்தவ மிஷனெரிகளில் ஓர் ஓப்பற்றவராக வில்லியம் கேரியின் அற்ப்பணிப்பு விளங்குகிறது.

    நன்றி

    இறைப்பணியில்
    Rev.M.மனோஜ் குமார்

    ReplyDelete
  3. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 உள்ளத்தில் ஒரு உற்சாகமும் தேவனுக்காக எழும்பி செயல்பட வேண்டும் என்ற தரிசனத்தை உண்டாக்கின தேவனுக்கு நன்றி

    ReplyDelete
  4. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

    ReplyDelete