ஸ். ஆபிரகாம் காட்வின்
BD –1, ஐக்கிய வேதாகம கல்லூரி (UBS), புனே. கருவந்தா சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
click here to download pdf of Meditation 14
தியான வசனம்: மத்தேயு 5:18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
விளக்கவுரை
கிறிஸ்து இயேசு, தாம் சட்டத்தை அழிக்க வராமல் , அதை நிறைவேற்ற வந்ததாக சொன்ன வசனத்திற்குப் (மத் 5.17) பின்பு, அதை வலுப்படுத்தும் வண்ணம் சொன்னது தான், “ஏனென்றால், வானமும் பூமியும் அழியும் வரை, அனைத்தும் நிறைவேறும் வரை, சட்டத்திலிருந்து ஒரு புள்ளி அல்லது ஒரு சின்னம் மறைந்துவிடாது என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (Literal Translated from KJV Version). லூக்கா 16:17 லும் வாசிக்கிறோம்: “வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.”
வானமும் பூமியும் கடந்து போகும் வரை என்ற சொற்டொடரானது, இறை வார்த்தையின் மாறாத தன்மையை வெளிப்படுத்த, அநேகமாக நம் ஆண்டவரால், நற்செய்தியில் பொதுவாக பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். கூடுதல் வலுவை தாம் சொன்னவற்றிற்கு கொடுக்கும் வண்ணம் இந்த சொற்டொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடைசிக்காலத்தைக் குறித்து (மத்தேயு 24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33) இயேசு கிறிஸ்து பேசும் போதும் சொல்லியுள்ளார்: “ வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மாற்கு 13.30). எல்லாம் வல்ல கடவுளின் நியாயத்தீர்ப்பு இருக்கும் போது, புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியால் பழைய வானமும் பூமியும் கடந்து போகும், புதிய எருசலேம் வானத்திலிருந்து வரும் (வெளி. 21:2).
சிறு எழுத்து என்று தமிழில் வருவது, கிரேக்க எழுத்துக்களில் மிகச்சிறிய எழுத்தான (ஐயோடா) ἰῶτα என்று மூல பாஷையில் வருகிறது. நவீன ஆங்கிலம் இதை ஏதோ ஒரு சிறிய அளவீட்டிற்கான உருவகமாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க வார்த்தையான கெராயா (κεραία), தமிழில் எழுத்தின் உறுப்பு என்றும், ஆங்கிலத்தில் (KJV), "டாட்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது பேனாவின் சிறிய பக்கவாதத்தைக் குறிக்கிறது. ஹீப்ருவில், இதே போன்ற சிறிய குறிகள் ஒரு எழுத்தை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகின்றன. எனவே, சட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும், அதிலுள்ள அனைத்தையும் அவர் நிறைவேற்றும் வரை செயலில் இருக்கும் என்பதே இயேசுவின் கருத்தாகும்.
மெய்யாகவே என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் வருவது எபிரெயத்தின் அடிப்படையிலான ஆமென் என்ற பதத்தின் அர்த்தம் (ἀμὴν – amen – Truly / Let it be done) 'உண்மையாக,' 'விசுவாசமாக,' அல்லது 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லலாம். நம்முடைய கர்த்தருடைய போதனையில் மிகவும் காணப்படும் பொதுவான வார்த்தையான இது, நற்செய்திப் பகுதியில் முதன்முதலாக இந்த வசனத்தில் தான் வருகிறது. நம்புவதில் தாமதமுள்ளவர்களின் இதயக் கடினத்தன்மையின் காரணமாகவோ அல்லது குறிப்பாக நம்புபவர்களின் முழுக்கவனத்தை ஈர்க்கவோ இந்த பதம் பயன்படுத்தப்படுகிறது. ஏசாயா 40:8 சொல்லுகிறது: “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”
சிந்தனைக்கு…
நாம் நம்பி வழிபடுகின்ற கடவுள் மாறாதவர்; அவ்வாறே அவருடைய வாக்குகளும் மாறாதவைகள் என்றால் மிகையாகாது. ஆகவே அவருடைய வார்த்தைகளைக் கனப்படுத்தி, அவற்றின்படி வாழ்வோம். இறைவாக்கின் ஆற்றல் நமது வாழ்க்கையில் வெளிப்படுவதாக, ஆமென்.
0 Comments