தியானம் : 18 / 27.03.2022
தலைப்பு : கிறிஸ்துவும் சமூக மாற்றமும்
திருவசனம் : கொலோசெயர் 2. 15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் செய்து முடித்த காரியங்கள் அநேகம். நம் ஆன்மாவுக்கும், சரீரத்துக்கும் தேவையானவை அதில் அடங்கும். ஏன் இந்த சமூகமும் மாற்றமடைய அவர் மனுக்கோலம் எடுத்து பாடுப்பட்டார் என்றால் மிகையாகாது. தம் வாழ்நாள் முழுவதும் சமூகத்தின் மீதும், மக்கள் மேலும் கரிசனையுள்ளவராக இயேசு கிறிஸ்து இருந்தார்.
வசன விளக்கம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த வேலையின் ஒரு அம்சமாக பவுலடிகளார் இங்கு சொல்வது (கொலோ 2.15): இயேசு தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர் (துரைத்தனம்), அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக்கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்கினார் என்று அறிகிறோம். ஆம், அவர் அதிபர்களையும் அதிகாரங்களையும் நிராயுதபாணியாக்கினார். ( ரோமர் 8:38, எபேசியர் 1:21; 3:10; 6:12)
இயேசுவின் காலத்தில் பூமியின் மிகப்பெரிய சக்திகள் - மிகப்பெரிய அரசாங்க சக்தி ரோம், மற்றும் மிகப்பெரிய மத சக்தி யூத மதம் ஆகும். கடவுளின் குமாரனை சிலுவையில் வைக்க ஒன்றாக சதி செய்தது. இந்த சக்திகள், தங்கள் சுயநலத்திற்காக விடுத்த சவாலில் கோபமடைந்து, பொது அவமதிப்புக்கு ஆளாக்கி, சிலுவையில் அறைந்தனர். ஆனால்வெற்றி பெற்ற இயேசு, உயிர்ப்பிக்கும் ஆன்மீக சக்திகளை எடுத்து இந்த பூமிக்குரிய சக்திகளை அகற்றினார்; பகிரங்கமாக அவர்கள் மீது வெற்றி பெற்றார்.
1. அனைவருக்குமான சமூகம்
இந்த சமூகம் என்பது ஏதோ ஆஸ்தி, பதவி உயர்வு என மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உரியது மட்டுமல்ல. மாறாக இறைவனின் படைப்பில் அனைவரும் சரியாக அனுபவிக்க வேண்டும் என்பதே படைப்பாளரின் நோக்கம்.
2. அனைவரும் ஒன்றான சமூகம்
இந்த சமூகத்தில் யாருக்கும் யாரும் பெரியவர்கள், தாழ்ந்தவர்கள் அல்ல. எல்லோரும் இறைவன் முன்பு சமமானவர்கள். எல்லாரும் இறை சாயலில் படைக்கப்பட்டவர்கள். ஆகவே ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ வேண்டும்.
நிறைவுரை
கிறிஸ்து சிலுவையில் சம்பாதித்த வெற்றியை சுதந்தரிக்கவும், பகிர்ந்தளி்த்து வாழவும் வேண்டும். கிறிஸ்து விரும்பும் சமுதாய மாற்றம் நம்மில் ஆரம்பமாகட்டும், நம் வாயிலாக செயல்படுத்தப்படட்டும். இறையரசு இந்த பூமியில் நிலவுவதாக. இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments