நீதியின்மேல் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர்
யோ. ஆபிரகாம் ராஜ சுந்தர் B.A., மேலபட்டமுடையாபுரம், அடைக்கலப்பட்டணம் சேகரம், CSI.திருநெல்வேலி திருமண்டலம்
BD - 3, கால்வின் இறையியல் ஸ்தாபனம், ஹைதரபாத்.
click here to download pdf of Meditation - 05
தியான வசனம்: மத்தேயு 5:6 “நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.”
முகவுரை
இயேசுவின் மலைப் பிரசங்கத்தில், நான்காவது திருவருட்பேறாக (The Beatitudes), நாம் பார்க்கின்ற இந்த வசனத்தில், நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள்
ஒரு மனிதனை எடுத்துக் கொண்டோம் என்றால், அவன் உயிர் வாழ இன்றியமையாதது உணவு. அதுமட்டுமல்ல மனிதன் உயிர் வாழ இன்றியமையாது நீர். பசி தாகம் இரண்டையும் சேர்த்து இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தப் பசியும் தாகமும் ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகும். அதுபோல ஒரு மனிதன் ஆவிக்குரிய வாழ்விலே ஒரு முதிர்ச்சியை அடைய நீதியை விரும்புகிறவனாக இருக்க வேண்டும். நீதியின்மேல் பற்றுக் கொண்டவனாக இருக்கவேண்டும். அதாவது நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்கின்றார். நீதி என்பது, (δικαιοσύνην dikaiosünēn – Righteousness / Justice) நேரிய செயலாட்சி, முறைதவறா நடத்தை, உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நியாயம் செய்தல் என்று பொருள்.
இயேசுகிறிஸ்து யாருக்கும் அநீதி செய்யவுமில்லை; அநியாயத்தை ஆதரிக்கவுமில்லை. அவருடைய ஊழியக்கால கட்டத்தில், எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற அநியாயத்திற்கு அளவில்லை (யோவான் 2.13-17). இப்படிப்பட்ட அநீதியை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே கயிற்றினால் ஒரு சவுக்கை செய்து ஆடுமாடுகளை ஆலயத்திலிருந்து துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய மேஜைகளையெல்லாம் கவிழ்த்துப்போட்டார். அங்கு நீதியை நிலைநாட்டினார்.
இயேசுவின் நீதியுணர்வு ஆழ்ந்த இரக்கமுள்ளதாக இருந்ததை வேதத்தில் காணமுடியும். தங்களை தற்காத்துக்கொள்ள வலிமையற்ற மக்களுக்கு அவர் உடனடியாக உதவியளித்தார். தேவையுள்ளவர்களின் தேவைகளை அறிந்துகொண்டவராக அவர்களுக்கு நன்மைகளை செய்தார். இயேசு நீதி என்னவென்பதை தேசங்களுக்கு தெளிவாக்கினார். அநேக முறை, தமக்கு பெரும் ஆபத்தாக இருந்தபோதும் அதைச் செய்தார். இயேசுவின் முன்மாதிரி, உண்மையான நீதியை ஆதரிக்க தைரியம் தேவை என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது
பாக்கியவான்கள்
அநியாயத்தில் கிடைக்கக்கூடிய சிற்சில நன்மைகள் நிரந்தரமான ஆசீர்வாதங்களல்ல. அவை நமக்கோ, நமது சந்ததிக்கோ பாக்கியமல்ல. மாறாக, எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக நீதி செய்யும்போது கிடைக்கும் நன்மையே நமக்கு பாக்கியம்.
திருப்தியடைவார்கள்
மனிதன் உயிர் வாழ உணவு, தண்ணீர் மூலம் திருப்தி அடைகின்றானோ அதை போன்று நீதியின் மேல் பசிதாகம் உடையவனாய் வாழ்ந்தால் உலக ஆசிர்வாதத்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் திருப்தி கிடைக்கும். திருப்தி என்பது, (χορτασθήσονται - chortasthēsontai - will be filled / satisfied) விருப்பத்தை நிறைவு செய்தல் அல்லது மனநிறைவு பெறுதல் என்று அர்த்தம். அநியாயத்தினால் கிடைக்கும் சொற்ப ஆசியில், மனமகிழ்சியும் இருக்காது; மனநிறைவும் இருக்காது.
நிறைவுரை
சங்கீதம் 11:7 சொல்லுகிறது, “கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்.” அவரை பின்பற்றுகிற நாமும் அவரைப் போன்றே நீதியின் மேல் தாகம் உள்ளவர்களாகவும், நீதியின் மேல் பிரியமுள்ளவர்களாகவும் இருந்தால், நீதி செய்ய வேண்டும்; நீதியை நிலைநாட்ட வேண்டும். இதைதான் இறையரசின் குடிமக்களாகிய நம்மிடம் நம் அரசரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்து விரும்புகிறார். அதை நிறைவேற்ற ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
0 Comments