Ad Code

பணமா? பாசமா? Money or Love

ஓய்வு பெறும் நிலையில் உள்ள நீதிபதி ஒருவர் தன் மனைவியிடம் சொன்னார்," என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்த போதும் பிறகு நீதிபதியாக வந்த போதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை. அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது ‌," 
        
மனைவி கேட்டார் அப்படி என்ன வழக்கு சொல்லுங்கள். அதற்கு நீதிபதி சொன்னார். வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால்,"என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது, எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும். 

உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன், இவர் உங்களின் தந்தையா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன், உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்? ஏன் அப்படி கொடுப்பதில்லை?. அதற்கு அவர் (மகன்) சொன்னார் ஐயா, அவர் பணக்காரர். அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது. அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அதனால் தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை .இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. 
         
நான் முதியவரிடம் கேட்டேன். உங்களுக்கு பணம் உள்ளது, மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது, வரவை விட உங்களின் செலவு குறைவாக தானே இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அந்த பெரியவர் ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது. இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும். அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து, குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார். நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து, ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்.
          
நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த முதியவர் சொன்னார். எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன் நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம், மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார். இதை கேட்டதும் நானும் அழுதுவிட்டேன். பணம் இருந்தாலும் பாசமும் தேவைப்படுகிறது.

Post a Comment

1 Comments

Anonymous said…
Super da Thambi!