Ad Code

விசுவாசக்கிணறு • திருச்சபை சரிதைக் கதைகள் | Faith Well • Church Historical Events


 பாளையங்கோட்டைக்குக் கிழக்கேயுள்ள அழகுக் கிராமம் மணக்காடு , தாமிரபரணி ஆற்றோரம் அமைந்துள்ள குடியிருப்பு. 136 ஆண்டுகளுக்கு முன்பு, குளியல் முதல் பாத்திரம் துலக்குவது வரையுள்ள அனைத்தும் ஆற்றோர வாழ்வாதாரமே. குளித்துவிட்டுக் குடிக்க மட்டும் ஒரு குடம் தண்ணீர் வீட்டுக்குக் கொண்டுவருவர். கிறிஸ்தவக் குடியேற்றத்தினால் அம்மக்கள் நாகரிகத்திலும், கல்வியிலும் மேம்பாடுற்று விளங்கினார். அவ்வூர் கிறிஸ்தவ சபைத்தலைவரின் பேர் விசுவாசம். அவரின் பெயருக்கேற்ப, அவர் விசுவாசத்தில் நிலைத்து நின்றார். ஆற்றோரக் குடியிருப்பிற்கு ஓர் ஆபத்து ஏற்பட்டது. 

அடிக்கடி ஏற்பட்ட மே காற்றுச் சுழற்சியால் அவர்களின் குடிசை வீடுகள் முங்கி மூழ்கின. மே காற்று, மணலை அள்ளிக்கொட்டிச் சாப்பிட முடியாமலும், நிம்மதியாகத் தூங்கமுடியாமலும் கஷ்டப்பட்டனர். சபைத் தலைவர் விசுவாசம் ஓர் ஆலோசனை கூறினார். சபையாகக் கூடி சிந்தித்தார்கள். "ஆற்றுக்குத் தெற்கேயுள்ள மேடான இடத்தில் தங்கள் குடியிருப்பை மாற்றிக்கொள்வது" என்று தீர்மானித்தார்கள். மேட்டுப் பகுதிகளில் வீட்டுமனைகளை அமைத்தார்கள்.

இப்பொழுது அவர்களுக்கு ஒரு புதிய பிரச்சனை எழுந்தது. ஆற்றுக்குப் போக இரண்டு பர்லாங் நடக்கவேண்டும். ஆறு சற்று தூரமாயிற்று. சபை மூப்பர் விசுவாசத்திற்கு ஒரு புதிய விசுவாசம் பிசுபிசுத்தது. "புதிய குடியிருப்பில் தம் வீட்டுப் பக்கமுள்ள தோட்டத்திலேயே ஒரு கிணறு தோண்டினால் என்ன?" என்று எண்ணினார்." மணற்சரிவான இந்த இடத்தில் எப்படிக் கிணறு தோண்டமுடியும் ? 'மண்மூடிப்போகுமே” என்று சொல்லிப் பலரும் அவரைப் பரிகசித்தார்கள். 

விசுவாசம் தம் பற்றுறுதியில் பலமாய் நின்றார். ஒரு ஊற்றைத் தோண்டினார் . தண்ணீர் ஊற்றெடுத்தது , ஆற்றுக்குப் போகாமலே குடிக்கவும் , குளிக்கவும் தண்ணீர் கிடைத்தது . ஊர் மக்கள் அக்கிணற்றை விசுவாசக்கிணறு என்று அழைத்தனர். அது குறுக்காக மூன்று அடியும், ஆறு அடி ஆழத்திலுமிருந்தது. விகவாசம், அக்கிணற்றின் பக்கம் ஒரு தோட்டம் அமைக்க நிலத்தை செப்பனிட்டு சீர்திருத்தம் செய்தார். அப்போது ஓர் அதிசயம், ஆச்சரியம்,  இரு நூறு அடி தூரத்தில் ஒரு பழைய கிணறு காணப்பட்டது . அது பழங்கால முறைப்படி வட்டம் வட்டமாகச் சுட்ட செங்கல்களை அடுக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஊர் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். 

அன்று மணக்காட்டிற்கு சார்ஜண்ட் பிஷப் பாளையங்கோட்டையிலிருந்து வருகை தந்திருந்தார்.  குடி தண்ணீர் செய்தியை கேள்வியுற்று அதைப் பார்க்க விரும்பினார். விசுவாசம் கூட்டிச் சென்றார். ஊரே அவர்பின் சென்றது. அத்தியட்சர் அவர்களோடு லூக் சிமியோன் ஐயரும் சென்றார் . சபை மக்களைத் தோட்டத்தில் கிணற்றண்டை உட்காரவைத்து ஒரு பொருட்பாட அருளுரை வழங்கினார் . விசுவாசம் அவர்களின் விசுவாசம் இரட்டிப்பானது. மேலும், உங்கள் மூதாதையர் இந்த இடத்தில் வசித்துள்ளார்கள் என்பதற்குப் பழைய கிணறு பலத்த சான்று என்று கூறினார் . 

அன்று மாலை ஆராதனையில்
ரோமர் 10 : 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்கிறது என்ற வசனத்தின் பேரில் பிரசங்கம் செய்தார்.  கிரியையுடன் கூடிய விசுவாசம் மேலானது. கிரியையற்ற விசுவாசம் செத்தது என்று கண்டித்து உபதேசித்தார் . ஆற்றோரம் உள்ள அவ்வூர் மக்கள் வீட்டோரம் ஊற்றுகள் தோண்டி, தோட்டம் துறவுகள் அமைத்து செழித்து வாழ்ந்தனர். விசுவாசம் என்றால் தேவனைச்சார்ந்து செயல்படுவதாகும். 

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
ஆதாரம் : 
8 . 6 . 1877 இல் சார்ஜன்ட் பேராயர் எழுதிய குறிப்புகளிலிருந்து...

Post a Comment

0 Comments