Ad Code

கிறிஸ்துவே ஆண்டவர் • Jesus the Lord • திருவசன தியானம் 16/4/2023

1. ஞாயிறு குறிப்புகள் 
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு
தேதி: 16/4/2023
வண்ணம்: வெள்ளை 
திருமறைப் பாடங்கள்:
யாத்திராகமம் 3: 13-17
கொலோசெயர் 1. 15 - 23
யோவான் 20 : 24 - 29
சங்கீதம்: 93

2. திருவசனம் & தலைப்பு 
    கிறிஸ்துவே ஆண்டவர்
அப்போஸ்தலர் 2.36  
(பவர் திருப்புதல்) ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
(திருவிலியம்) ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினர் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

3. ஆசிரியர் & அவையோர் 
அப்போஸ்தலருடைய நடபடிகள் பரிசுத்த லூக்கா என்பவரால் எழுதப்பட்டதாகும். இவரே லூக்கா நற்செய்தி நூலையும் எழுதியவர். இவர் ஒரு மருத்துவர் மற்றும் வரலாற்று எழுத்தாளர் என்று நம்பப்படுகிறது. இந்த வரலாற்று நூல், இவரின் நற்செய்தி நூல் போன்றே "தெயோப்பிலுவே" என்று ஒரு நபருக்கு எழுதியதாக ஆரம்பித்தாலும், இந்த நூல்கள் முதல் நூற்றாண்டு முதல் தலைமுறை கிறிஸ்தவர்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை. 

4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
இந்த நூல் பெரும்பாலும், 80 - 120 AD காலக் கட்டத்தில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இயேசுவின் பரமேறுதல் (33 AD) முதல் அப்போஸ்தலர் பவுலின் இறுதிக்காலம் (63 AD) வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரம், பெந்தேகோஸ்தே திருநாள் வரலாற்று சம்பவ பதிவாகும்.
 அப்போ 2. 1 - 13 தூயாவியார் பொழிவு
 அப்போ 2. 14 - 36 பேதுருவின் அருளுரை
 அப்போ 2. 37 - 47 சபை வளர்ச்சி 

5. திருவசன விளக்கவுரை 
அப்போஸ்தலர் 2.36 பேதுருவின் அருளுரையின் ஒரு முக்கிய வசனமாகும். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்கு பின்பு, பயந்துபோய் கொண்டிருந்த சீடர்கள், ஏன் தங்கள் சுய வேலைக்கு திரும்பிய சீடர்கள் இப்போது, இயேசுவின் வாக்கை நம்பி காத்திருந்து தூயாவியை பெற்றுக் கொண்டனர். அதற்குப் பின்பு மிகுந்த தைரியம் அவர்களுக்கு வந்தது. பேதுருவின் அருளுரையில் அது வெளிப்பட்டது. 

"நீங்கள் சிலுவையில் அறைந்த" என்று சொல்லி நேரடியாக இஸ்ரவேல் அதாவது யூத மக்களை கண்டிந்து பேசுகின்றார். "கடவுள் இயேசுவை ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினார்" என்று இயேசுவின் உண்மையான தன்மைக்கு பேதுரு சாட்சி பகருகின்றார். கிறிஸ்து என்பது மெசியா என்பதின் கிரேக்க பதம். அதற்கு அபிஷேகிக்கப்பட்டவர் என்று பொருள். ஆண்டவர் என்றால் ஆளுகை செய்பவர் என்று பொருள்.

"கிறிஸ்துவே ஆண்டவர்" என்று பேதுரு கொடுத்த சாட்சி அந்த சூழலில் மிக முக்கியமானது. இந்த பெயர்ச்சொல்லின் பின்னணி YHWH யாவே என்னும் எபிரேய மொழியில் உள்ளது. மோசேக்கு கடவுள் தம்மை வெளிப்படுத்தும் போது "நான் நானே "I am Who I am" என்று சொல்லி தம்மை யாவே / யெகோவா என்று வெளிப்படுத்தினார். அது தான், பவர் தமிழ் திருப்புதலில், பழைய ஏற்பாட்டில் கர்த்தர் (LORD) என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. திரவிலியத்தில் ஆண்டவர் என்று வருகிறது. பயபக்தியின் காரணமாக, இஸ்ரவேல் மக்கள் யெகோவா YHWH என்று உச்சரிக்காமல், அதோனை (Adonai) என்று உச்சரித்தனர். அதுவும் பவர் தமிழ் திருப்புதலில் ஆண்டவர் (Lord) என்றே வருகிறது. திருவிலியத்தில் தலைவர் என்று வருகிறது. 

புதிய ஏற்பாட்டில் Kurios என்ற கிரேக்க வார்த்தை ஆண்டவர் என்று தமிழ் திருப்புதல்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது பழைய ஏற்பாட்டில் வரும் YHWH என்பதற்கு கிரேக்கத்தில் பயன்படுத்திய வார்த்தை (Kurios) ஆகும். ஆகவே "ஆண்டவர்" (கர்த்தர்) என்ற பதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 

6. இறையியல் & வாழ்வியல்
"கிறிஸ்துவே ஆண்டவர்" என்பதில் முழு இரையியலும் அடங்கியுள்ளது எனலாம். யூதர்கள் இயேசுவை ஆண்டவராக (YHWH) ஏற்றுக்கொள்ள மறுத்ததால் தான் சிலுவையில் அறைய முன்வந்தனர். இன்றைக்கும் இயேசுவின் உபதேசங்களை பாராட்டி ஏற்கும் பலர் இயேசுவை நம்பி கடவுளாக ஏற்க மறுக்கும் நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய நிலைமை எப்படியுள்ளது? கிறிஸ்துவே ஆண்டவர் என்பதற்கு நாம் சாட்சிகளாக வாழ்கிறோமா? 

7. அருளுரை குறிப்புகள்
      கிறிஸ்துவே ஆண்டவர்
  1. மேலான நாமம் 
      அப்போ 2.36 பிலிப் 2.11
  2. நாமே சாட்சி 
      அப்போ 2.32   
  3. எல்லாருக்கும் ஒரே ஆண்டவர்
      அப்போ 2.21 அப்போ 2.37 - 41

..... எழுதியவர்.....
யே. கோல்டன் ரதிஸ்
செராம்பூர் கல்லூரி

Post a Comment

0 Comments