தியானம்: 32 / 40 - ரபீ /போதகர்/ஆசிரியர்
எழுதியவர்: திரு. டெ. ஹேரிஸ்
தலைப்பு: ரபீ/போதகர்/ஆசிரியர்
மத்தேயு 23:8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
வசன இருப்பிடங்கள்:
மத்தேயு 26:25, 49;
மாற்கு 9:5, 11:21, 14:45;
யோவான் 1:38, 49, 2:2, 4:31, 6: 25, 9:2, 11:8
தலைப்பின் அர்த்தம்:
யோவான் நமக்குத் தெரிவிக்கும் "ரபீ" என்ற வார்த்தை "போதகர்" (யோவான் 1:38) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "ஆசிரியர்/போதகர்" என்ற தலைப்பு மிகவும் பொதுவானது. அக்காலத்தில், இயேசுவும் "ரபீ" என்று அழைக்கப்பட்டார்.
விளக்கவுரை:
அக்காலத்து மக்களுக்கும், இயேசுவும் அவருடைய சீடர்களும் வழக்கமாக இருந்த ரபீ-சீடர் கூட்டம் போலவே காணப்பட்டனர். பொதுவாக, சீடர்கள் தாங்கள் படிக்க விரும்பும் ரபீயை அவர்களேத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் நம் இயேசு கிறிஸ்து அவருக்கான சீடர் கூட்டத்தை அவரே தெரிந்து கொண்டார். ஒருவர் பின் ஒருவராக அவர் சீடர்களை அழைத்ததை நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கிறோம். அக்காலத்து யூத மத போதகர்கள் போல் அல்லாது நம் கிறிஸ்துவானவர் வேறுபட்ட போதகர். சீடர்களை தெரிந்து கொண்டு அவர் அவர்களுக்கு போதித்த விதம், மக்களுக்கு பிரசங்கம் பண்ணிய விதம், பரிசேயர் சதுசேயருக்கு பதில் கொடுத்த விதம் என எல்லாவற்றிலும் உவமைகளையும், ஆழமான பரலோக காரியங்களையும் உள்வைத்தார்.
1. தேவனிடத்திலிருந்து வந்த போதகர்:
நம் இயேசுவைக் குறித்து அழைக்கப்பட்ட சீடர்களில் ஒருவனான நாத்தான்வேல் இப்படியாக சாட்சி கொடுக்கிறான் (யோவான் 1:49): "அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்."
நம் கிறிஸ்துவாகிய போதகர் செய்த பல்வேறு அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டுணர்ந்த ஒரு பரிசேயனின் வார்த்தைகள் (யோவான் 3:2): "அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்..." இஸ்ரவேலில் போதகனாயிருந்த அவனுக்கு இயேசுவானவர் அந்த நாளில் போதகரானார். அந்த ஒரு வேளை போதகத்திலேயே அவனுக்கு பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதை குறித்தும், தேவனின் அன்பை குறித்தும், இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்தும், ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்தும் போதித்தார்.
2. சத்தியமாய்ப் போதிக்கிற போதகர்:
நம் இயேசு எவரையும் குறித்து அஞ்சாது நீதியும் உண்மையுமாய் தம் போதகங்களை மக்களுக்கு கொடுத்தார்(மாற்கு 12:14). நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பிரசங்கித்தார். மக்களும் அவரது போதகங்களுக்காக காத்து நின்றனர். தேவாலயங்கள், தெருக்கள், வீடுகள், மலைகள், சமவெளிகள் என எவ்விடத்திலும் உபதேசம் பண்ணினார். அவரது மலை பிரசங்கம் அதில் குறிப்பிடத்தக்கது. பரலோக காரியங்களை எக்காலத்திலும் அழியாத வண்ணம் கூறி சென்றுள்ளார் நம் போதகர். சீடர்கள் அவரிடம் போதகத்தில் வரும் சந்தேகங்களை கேட்க பயந்துள்ளனர். குறிப்பாக அவருடைய மரணம் தொடர்பான காரியங்கள் அநேக முறை அவர்களுக்கு போதிக்கப்பட்டும் அறியாதிருந்தார்கள். சில காரியங்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவருடைய சத்தியமான போதகங்களாலே குத்தப்பட்ட வேத பாரகர், பிரதான ஆசாரியரின் வஞ்சனையால் அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த ஏரோது கூட நம் போதகரிடம் அநேக காரியங்களை குறித்து கேட்கும் வண்ணம் ஆசையாயிருந்தான் என வசனம் குறிப்பிடுகிறது.
3. இன்றளவும் இருக்கும் கிறிஸ்துவின் போதகம்:
அவரது மரணம் வரையிலான மறைக்கப்பட்ட காரியங்களைக் குறித்து அவர்களது மனதை திறந்தார். கடைசியாக தம் சீடர்களுக்காக போதகர் தம் பிதாவினிடம் வேண்டுவதையும் யோவான் 17 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அவருடைய விண்ணேற்புக்கு முன் வரையில் நம் இயேசு சீடர்களுக்கு போதித்தார். சீடர்கள் அவரின்றி செய்யப் போகும் ஊழியங்களை குறித்தும் அவர்கள் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்க போவதையும் குறித்து பேசி அவர்களைத் திடப்படுத்தினார். இப்படியாக நம் கிறிஸ்துவானவர் நல்ல போதகராக திகழ்ந்தார். அவருடைய போதகம் அந்த கால யூத மக்களுக்காக மட்டும் அல்ல இன்று வாழும் நமக்கும் அநேக காரியங்களை நம் வாழ்க்கையில் கற்பிக்கின்றது. அநேக கள்ள போதகர்கள் எழும்பும் இந்த கடைசி காலத்தில் நாம் அவரின் போதகத்திற்குள் இருக்கும்படி நம்மை நல்ல ஒரு சபையில் நாட்டியுள்ளார்.
முடிவுரை:
எங்கோ நாம் கேட்ட கிறிஸ்துவின் போதகம் நம்மை இரட்சித்து இம்மட்டும் அழைத்து வந்துள்ளது. நமக்கு கிறிஸ்துவே போதகராய் இருந்துள்ளார். நம் அறிவிற்கு எட்டும் வகையில் அவருடைய கற்பனைகளை நமக்காக எளிதாக்கியுள்ளார் நம் போதகர். அனுதினம் நாம் வாசிக்கும் வசனங்களின் மூலம் தேவன் நம்மோடு பேசுகிறார். நாம் குழம்பும் காரியங்களில் தேவன் நமக்கு ஏற்ற காரியங்களை போதித்து நம்மை நடத்துகிறார். படிப்பு, வேலை, வீடு, சபை என எங்கும் நாம் அவரின் போதகத்தினால் ஞானமாய் செயல்பட வழி செய்துள்ளார். என்றும் அவரின் போதனையில் நாம் நடப்போம். ஆமென்.
0 Comments