தேதி: 01/01/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்
பழைய ஏற்பாடு: ஏசாயா 30.18 - 26
நிருப வாக்கியம்: எபிரேயர் 6.9 - 15
நற்செய்தி பகுதி: லூக்கா 18. 1 - 8
சங்கீதம்: 65
2. திருவசனம்
தலைப்பு: சட்ட வாக்கியம்
இருப்பிடம்: ஏசாயா 30:18
திருவசனம்:
(பவர் திருப்புதல்) ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
(திருவிவிலியம்) ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்; உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்; அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
3. திருவசனத் தலைப்பு & தொடர்பு
திருநெல்வேலி திருமண்டல சட்டவாக்கியம்.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்:
ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை எழுதியவர் யூத அரசரான யோவாசின் இளைய புதல்வரான ஆமோத்சின் மகன் ஏசாயா ஆவார்.
ஏசாயா தீர்க்கத்தரிசி பழைய ஏற்பாட்டின் பவுல் என்று அழைக்கப்படுகிறார். இவர் அரச குடும்பத்தை சார்ந்தவரானதால் மிகுந்த கல்வி புலமையை பெற்றிருந்தார். . இவரது மனைவி தீர்க்கதரிசனியாக இருந்தார். ஏசாயா 7:3 மற்றும் 8:3 - ன் படி இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்திருக்க வேண்டும். இவரது தீர்க்கதரிசனம் யூதாவை ஆண்ட மனாசே ராஜாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் இவரை இரு தடிகளுக்கு நடுவில் கட்டி வைத்து வாளாள் அறுத்து கொலை செய்ததாக யூத பாரம்பரியம் கூறுகிறது.
அவையோர்:
யூதா தேசத்து மக்கள்.
பின்னணி:
ஏசாயா தீர்க்கதரிசியின் நூல் இஸ்ரவேலின் இருண்ட கால காலகட்டத்துடன் தொடர்புடையதாயிருக்கிறது. ஏனென்றால் இஸ்ரவேலினுடைய வடக்கு பகுதி இஸ்ரவேல் என்றும் தெற்கு பகுதி யூதா என்றும் இரண்டாகப் பிரிந்து தேவ பக்தியில் இருந்து வழுவி ஒழுக்க சீர்குலைவிலும் விக்ரக ஆராதனைகளும் வீழ்ந்து கிடந்தது. இதில் குறிப்பாக யூதா ஜனங்கள் அசிரியர்களை எதிர்ப்பதற்காக எகிப்தின் உதவியை நாடுகிறார்கள் ஆனால் அது ஆண்டவருடைய நியாய தீர்ப்பை அவர்கள் மீது கொண்டு வருகிறது.
5. திருவசன விளக்கவுரை
யூதா அசிரியவால் தாக்கப்பட்டு, எகிப்தை நம்பி ஆண்டவரை விட்டு தூரம் போயிருந்த நேரத்தில் ஆண்டவருடைய மீட்பின் தீர்க்கதரிசனத்தை ஏசாயா தீர்க்கதரிசி உரைக்கிறார். v. 18-ல் உதவியற்றிருக்கிற சீயோன் (யூதா) ஆண்டவருக்கு காத்திருக்கும் போது ஆசீர்வதிப்பார்(v. 18 d), என்கிற வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைக்கிறார்.
" ஆனாலும்" என்கிற வார்த்தை யூதாவை மீட்டெடுப்பதற்கு கர்த்தருடைய தலையீடு முக்கியமாக தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவர் தனக்கு விரோதமாக கலகம் செய்த யூதாவை உடனடியாக நியாயம் தீர்க்காமல் மாறாக அவர்களை மீட்கும்படி கிருபையாய் காத்திருக்கிறார். "எழுந்திருப்பார்" (Rise up) என்கிற வார்த்தை ஆண்டவர் தன்னுடைய எதிரிகள் மீது வல்லமையை வெளிப்படுத்தும்போது பயன்படுத்தப்படுகிற வார்த்தை ஆனால் இங்கு ஆண்டவர் தம்முடைய ஆழமான இரக்கத்தை (தாய் தன்னுடைய கரு மீது கொண்டுள்ள உணர்வு) யூதா மீது காண்பிப்பதற்காக எழுந்திருக்கிறார்.
6. இறையியல் & வாழ்வியல்
யூதா தனக்கு அசிரியாவால் நெருக்கங்கள் ஏற்பட்ட போது ஆண்டவரே நம்பாமல் எகிப்தியர்களை நம்பினதால் ஆண்டவருடைய நியாய தீர்ப்பு யூதா மீது வந்தது. ஆனாலும் ஆண்டவர் தன்னுடைய கிருபையை நிமித்தமும் இரக்கத்தின் நிமித்தமும் யூதாவை மீட்டுக் கொள்வேன் என்கிற வாக்குத்தத்தை கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் நெருக்கங்களை எதிர்கொள்ளும் போது மனிதர்கள் மீதும், நம் மீதும் நம்பிக்கை வைக்காமல் ஆண்டவருடைய வார்த்தையை முழுவதுமாக சார்ந்து கொள்ளும் போது ஆண்டவர் நம்மை பாதுகாக்கிறார். சில நேரம் நாம் யூதா ஜனங்களைப் போல தவறும் போதும் ஆண்டவர் அவருடைய கிருபை நிமித்தம் நம்மை மீட்டெடுக்கிறார்.
7. அருளுரை குறிப்புகள்
1. இரக்கம் செய்கிற தேவன்
2. மனதுருகுகிற தேவன்
3. நீதி செய்கிற தேவன்
எழுதியவர்:
திரு. T. ரெபின் ஆஸ்டின்
சபை ஊழியர்
கல்லிடைக்குறிஞ்சி

0 Comments