Ad Code

திருவழிபாட்டு வாசகத் திரட்டு • Lectionary History


கிறிஸ்தவத் திருச்சபையின் வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் விவிலியப் பகுதிகள் ஒழுங்குமுறைப்படி வாசிக்கப்பட ஏற்படுத்தப்பட்ட விவிலியப் பகுதிகளின் தொகுப்பே 'திருவழிபாட்டு வாசகத் திரட்டு' (Lectionary - லெக்சனரி) என அழைக்கப்படுகிறது. இது தினசரி அல்லது ஞாயிறு வழிபாடுகளில் வாசிக்கப்பட வேண்டிய விவிலியப் பகுதிகளைக் (வாசகங்கள்) கொண்ட அதிகாரப்பூர்வமான புத்தகத் தொகுப்பாகும். இது திருப்பாடல், முதல்/இரண்டாம் வாசகம் மற்றும் நற்செய்திப் பகுதிகளை உள்ளடக்கியது. இது மறைநூல் பகுதித்திரட்டு அல்லது மறைவாசகப் பகுதிப்பட்டியல் எனவும் அழைக்கப்படுகிறது. 

1. ஆரம்ப கால வரலாறு
திருவழிபாட்டு வாசக முறையின் வேர்கள் யூத வழிபாட்டு முறையில் (Synagogue) காணப்படுகின்றன. யூதர்கள் தோராவையும் (Torah) இறைவாக்கினர் நூல்களையும் ஒரு சுழற்சி முறையில் வாசித்தனர் (லூக்கா 4:16-21).

ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் யூத முறையைப் பின்பற்றியதோடு (அப்போஸ்தலர் 13:15), இயேசுவின் போதனைகளையும் திருத்தூதர்களின் கடிதங்களையும் வாசிக்கத் தொடங்கினர்.

புனித ஜஸ்டின் மார்டியர் (St. Justin Martyr - 150 AD) தனது குறிப்புகளில், ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளில் "திருத்தூதர்களின் நினைவுக்குறிப்புகளும் இறைவாக்கினர்களின் நூல்களும்" நேரம் இருக்கும் வரை வாசிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

லெக்டியோ காண்டினுவா (Lectio Continua): இது ஒரு நூலைத் தொடர்ச்சியாக, முதல் அதிகாரத்திலிருந்து இறுதி வரை வாசிக்கும் முறையாகும். இதுவே ஆரம்பகால முறையாக இருந்தது. 
 
கி.பி. நான்காம் நூற்றாண்டில், திருச்சபை வளர்ந்தபோது, அந்தந்த சிறப்பு நாள்களுக்கு ஏற்றவாறு (எ.கா: ஈஸ்டர், கிறிஸ்துமஸ்) குறிப்பிட்ட வாசகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை உருவானது. மத்திய காலத்தில் வாசகங்கள் முறைப்படுத்தப்பட்டு, நற்செய்தி மற்றும் கடிதங்கள் அடங்கிய தனித்தனிப் புத்தகங்கள் உருவாயின.

கி.பி. 470 இல் வியன்னாவின் ஆயர் புனித மமெர்ட்டஸ் (St. Mamertus) குறிப்பிட்ட காலங்களுக்கு ஏற்ற வாசகங்களைத் தொகுத்ததாகக் கருதப்படுகிறது.

கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு: ஜெரோமின் (St. Jerome) லத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பான வல்கேட் (Vulgate) அடிப்படையில் வாசகங்கள் பிரிக்கப்பட்டன.

காம்ப்பியன் (Compiègne): 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்குயின் (Alcuin of York), பேரரசர் சார்லமேனின் வேண்டுகோளுக்கு இணங்க வாசகத் திரட்டைச் சீரமைத்தார்.

3. ரோம திருச்சபை பங்கு
மத்திய காலத்தில் (கி.பி. 13 - 16 ஆம் நூற்றாண்டு) 'மிசால்' (Missal) எனப்படும் திருப்பலி புத்தகம் உருவானது. இதில் வாசகங்களும் வழிபாட்டுச் செபங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

1570 இல் புனித ஐந்தாம் பத்திநாதர் (Pope St. Pius V):திரிதெந்து பொதுச்சங்கத்திற்குப் பிறகு (Council of Trent), கத்தோலிக்க திருச்சபை முழுமைக்கும் ஒரே மாதிரியான வாசக முறையை (Tridentine Missal) கட்டாயமாக்கினார். இதில் ஒரு வருடச் சுழற்சி மட்டுமே இருந்தது.
 
1963 இல் சாக்ரோசான்க்டம் கன்சிலியம் (Sacrosanctum Concilium) மூலம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், "விவிலியத்தின் வளமான பகுதிகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்" என ஆணை பிறப்பித்தது.

1969 இல் புனித ஆறாம் சின்னப்பர் (Pope Paul VI) இவர் புதிய திருவழிபாட்டு வாசகத் திரட்டை (Ordo Lectionum Missae) அறிமுகப்படுத்தினார்.

ஒரு வருடச் சுழற்சி என்பது மூன்று வருடச் சுழற்சியாக (A, B, C) மாற்றப்பட்டது. இதன் மூலம் விவிலியத்தின் 70% க்கும் அதிகமான பகுதிகள் வழிபாட்டில் இடம் பெற்றன.

இதனடிப்படையில் தற்போதைய வாசகத் திரட்டு பெரும்பாலும் மூன்று ஆண்டுகளைக் கொண்ட ஒரு சுழற்சியைக் (Cycles A, B, C) கொண்டுள்ளது.

 * முதல் வாசகம்: பழைய ஏற்பாட்டிலிருந்து (ஈஸ்டர் காலத்தில் திருத்தூதர் பணிகள்).
 * திருப்பாடல்: சங்கீதப் பகுதி.
 * இரண்டாம் வாசகம்: புதிய ஏற்பாட்டுக் கடிதங்கள் (Epistles).
 * நற்செய்தி: இயேசுவின் வாழ்வும் போதனையும்.

4. சீர்திருத்த திருச்சபை பயன்பாடு (Ecclesial Usage)
சீர்திருத்தக் காலத்தின் போது (Reformation), மார்ட்டின் லூதர் போன்றவர்கள் வாசகத் திரட்டைத் தொடர விரும்பினர்.

1983 இல் Consultation on Common Texts' (CCT) என்ற அமைப்பு Common Lectionary-ஐ உருவாக்கியது.

1992 / 1994 ஆண்டுகளில் இது மேலும் சீரமைக்கப்பட்டு Revised Common Lectionary (RCL) எனப் பெயரிடப்பட்டது.
 
லூத்தரன், மெத்தடிஸ்ட், பிரஸ்பிட்டேரியன் மற்றும் ஆங்கிலிக்கன் சபைகள் இன்று இந்த முறையையே பெருமளவில் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில், சி.எஸ்.ஐ, வட இந்தியத் திருச்சபை (சி.என்.ஐ) மற்றும் மார் தோமா திருச்சபை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியத் திருச்சபைகளின் கூட்டமைப்போடு (சி.சி.ஐ) இணைந்து, மூன்றாண்டு பொது திருமுறைப் பட்டியலிலிருந்து வரும் கருப்பொருள்களையும் பாடங்களையும் ஏற்றுக்கொள்கிறது; குறிப்பாக, இது இரண்டாம் சுழற்சி (ஆண்டு B) மற்றும் பிறவற்றுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. 

5. நன்மைகள்
 
ஒற்றுமை: உலகெங்கும் உள்ள விசுவாசிகள் ஒரே நாளில் ஒரே வாசகங்களைக் கேட்டு தியானிக்க இது உதவுகிறது.

முழுமை: போதகர்கள் தங்களுக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் போதிக்காமல், விவிலியத்தின் அனைத்துப் பகுதிகளையும் மக்கள் அறிந்து கொள்ள இது வழிவகுக்கிறது.

நிறைவாக,
திருவழிபாட்டு வாசகத் திரட்டு என்பது வெறும் புத்தகமல்ல; அது விசுவாசிகளை இறைவார்த்தையின் வழியாக ஒருங்கினைக்கும் ஒரு கருவியாகும். இது இறைமக்களுக்கு விவிலியத்தின் ஆழமான அறிவை முறைப்படி வழங்குகிறது. இன்று பல செயலிகள் (Apps) மற்றும் இணையதளங்கள் வழியாக அன்றாட வாசகங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. நவீன வாசகத் திரட்டுகள் தற்காலச் சூழலுக்கு ஏற்றவாறு விளக்கமளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. RC சபைக்கு என்று தனி தமிழ் மொழியா? Click Here

Post a Comment

0 Comments