ஆண்கள் ஞாயிறு செய்தி 2026
1. கருத்து:
புதுமையான ஆண்கள்
2. வசனம்:
கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். எபேசியர் 4:24
3. வசன பின்னணி
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலுள்ள சபைக்குச் சிறைச்சாலையிலிருந்து இந்நிருபத்தை எழுதினார்.
முதலாவது மூன்று அதிகாரங்களில் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளுக்குக் கிடைத்துள்ள மேன்மையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பற்றி விளக்கிக் கூறுகிறார். 4-ம் அதிகாரத்திலிருந்து, "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு பாத்திரராக நடந்து கொள்ளுங்கள்" என நடைமுறை வாழ்க்கைக்குரிய அறிவுரைகளைத் தொடங்குகிறார்.
4. மூல வார்த்தைகள் விளக்கம்
i). தரித்துக்கொள்ளுங்கள் (Enduo - ἐνδύω): ஒரு ஆடையை அல்லது வஸ்திரத்தை உடுத்திக்கொள்வது போன்ற செயலாகும். கிறிஸ்து வழங்கிய புதிய சுபாவத்தை நமது அன்றாட நடத்தையாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ii) புதிய (Kainos - கைனோஸ்): கிரேக்க மொழியில் 'புதிய' என்பதற்கு இரு சொற்கள் உண்டு. Neos என்றால் காலத்தால் புதியது. ஆனால் Kainos என்பது தன்மையிலும் தரத்திலும் முற்றிலும் புதியது (New in quality/nature). பழையதின் புதுப்பிப்பு அல்ல, முற்றிலும் தெய்வீகத் தன்மை (Divine Nature) கொண்டது.
iii). சிருஷ்டிக்கப்பட்ட (Ktizo - κτίζω): இல்லாத ஒன்றைப் புதிதாக உண்டாக்குவது (Creation). இது மனிதனின் சுய முயற்சியால் அமைவது அல்ல, கடவுளால் மட்டுமே செய்யப்படக்கூடிய ஆவிக்குரிய படைப்பு.
iv) நீதி (Dikaiosyne - δικαιοσύνη): மனிதர்களுக்கு இடையிலான உறவிலும் கடவுளுக்கு முன்பாகவும் நேர்மையாகவும், சரியாகவும் நடக்கும் தன்மை.
v) பரிசுத்தம் (Hosiotes - ὁσιότης): உள்ளத்தின் தூய்மை, கடவுளுக்கு முன்பாக உள்ள தேவபக்தி மற்றும் மாசற்ற வாழ்வு.
5. வசன விளக்கம்
இரட்சிப்பு என்பது பழைய பாவச் சுபாவங்களை முழுமையாகக் களைந்துவிட்டு, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட புதிய இயல்பை நமது அன்றாட வாழ்வில் ஒரு வஸ்திரத்தைப் போல உடுத்திக்கொள்வதைக் குறிக்கிறது.
ஆதியாகமத்தில் பழைய ஆதாம் இழந்துபோன கடவுளின் மேன்மையான சாயலை விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பெற்றுக்கொள்கிறார்கள். முதல் ஆதாம் பாவத்தால் தேவ சாயலை இழந்தான்; இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து (1 கொரி. 15:45) அதை நமக்கு மீட்டுத் தந்துள்ளார்.
மனிதர்களின் போலி நீதியையோ வெளிப்புற ஆசாரங்களையோ சார்ந்திராமல், பிற மனிதர்களோடு அன்பிலும் நேர்மையிலும் நிலைத்திருக்கும் "மெய்யான நீதியிலும்," கடவுளோடு இருக்கும் தூய்மையான உறவைக் குறிக்கும் "பரிசுத்தத்திலும்" புதிய மனிதராக ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்பதே இத்திருவசனம் தரும் தலையாய பாடமாகும்.
வேதாகம உதாரணம்: புனிதர் பவுல் அடிகளார் வாழ்வு
மிஷனரி உதாரணம்: அதோனிராம் ஜட்சன் / புனித அகஸ்டின்
6. நடைமுறை வாழ்வியல்
ஆண்களுக்கான ஞாயிறு (Men's Sunday) தியானத்திற்காக சிந்திக்க வேண்டிய 5 நடைமுறை கேள்விகள்:
i). நீங்கள் களைந்துபோட வேண்டிய "பழைய ஆடை" போன்ற தீய பழக்கம் (கோபம், சுயநலம்) எது?
ii). தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியமான முறையற்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி, தூய்மையைக் காத்துக்கொள்ள என்ன வழி செய்கிறீர்கள்?
iii). வேலை செய்யும் இடத்தில் அல்லது வியாபாரத்தில் எந்தக் குறையும் இல்லாத முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்கிறீர்களா?
iv). உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களில் கடவுளின் சாயலையும் சுபாவத்தையும் பார்க்க முடிகிறதா?
v). உங்கள் பிஸியான வேலைகளுக்கு மத்தியில், கடவுளுடன் நேரத்தைச் செலவிடுவதற்கும் புதிய சுபாவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் எவ்வளவு இடம் தருகிறீர்கள்?
7. கற்றுக்கொள்ளும் பாடங்கள்
ஆண்களே....
1. களைந்துபோடுங்கள்
2. அணிந்துகொள்ளுங்கள்
3. வெளிப்படுத்துங்கள்
1. களைந்துபோடுங்கள் (Put off):
ஒரு விசுவாசி தனது பழைய பாவ வாழ்வு, பொய், கோபம், மற்றும் உலகப்பிரகாரமான துர்நடத்தைகள் போன்ற அழுக்கான ஆடைகளைக் களைந்துபோடுவதைப் போல, தனது பழைய சுபாவங்களை முழுமையாக விட்டு விலக வேண்டும்.
2.அணிந்துகொள்ளுங்கள் (Put on):
வெறுமனே பழையதை விடுவதோடு நின்றுவிடாமல், கடவுள் அருளும் புதிய சுபாவமாகிய நீதி மற்றும் பரிசுத்தத்தை ஒரு புதிய வஸ்திரத்தைப் போலத் தினசரி வாழ்வில் உடுத்திக்கொள்ள வேண்டும்.
3. வெளிப்படுத்துங்கள் (Express / Manifest):
நம்மிடம் புதுப்பிக்கப்பட்ட சிந்தையும் கடவுளின் சாயலும் உண்டென்பதை, பிற மனிதர்களோடு நாம் காட்டும் உண்மையான அன்பு, நேர்மை மற்றும் தூய்மையான வாழ்வின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும்.
Put Off – பழசைத் துறப்போம் (Strip the Past)
Put On – புதியதை உடுப்போம் (Suit the Divine)
Prove / Show – வாழ்வால் காட்டுவோம் (Shine the Faith)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ+
9486810915


0 Comments