முன்னுரை
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சமயப் பணி, கல்விப் பணி மற்றும் அரசியல் தூதுவப் பணிகளில் குறிப்பிடத்தக்க தடம் பதித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஃபிரடெரிக் ஸ்வார்ட்ஸ் (Christian Friedrich Schwarz 8.10.726 - 13.02.798). இவர் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஸ்வார்ட்ஸ் அக்டோபர் 8, 1726-ல் ஜெர்மனியில் (பழைய பிரஷ்யா) பிராண்டன்பர்க் பகுதியில் சோன்னென்பர்க் (Sonnenburg) என்னும் ஊரில் ஜார்ஜ் ஸ்வார்ட்ஸ்- மார்கரெட் க்ருனிரின்(Margaret Grunerin) இணையருக்கு பிறந்தார். இளமையிலேயே தாயை இழந்த ஸ்வார்ட்ஸ் திரு.ஹெல்ம் என்பவரின் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளைக் கற்றார். அருகே உள்ள கஸ்ட்ரின் (Custrin) எனும் ஊரில் பள்ளிக்கல்வியை முடித்தபின் 1746-ல் ஹாலே பல்கலை (University of Halle) யில் சேர்ந்தார்.
கிறித்தவ பணி
டேனிஷ் மெட்ராஸ் மிஷன் இயக்கத்தை சேர்ந்த ஷூல்ட்ஸ் (Benjamin Schultze 1689-1760) ஐ சந்தித்தார். அவர் வழியாக இந்தியாவில் மதப்பணி செய்யும் ஆர்வத்தை அடைந்தார். ஆகஸ்ட் 8, 1749-ல் கோப்பன்ஹெகனில் குருத்துவப் பட்டம் பெற்ற ஸ்வார்ட்ஸ் சிலகாலம் இங்கிலாந்து சென்று ஆங்கிலக் கல்வி கற்றபின் 1750-ல் இந்தியாவுக்கு மதப்பணிக்காக பயணமானார். இங்கிலாந்தில் மதப்பரப்புநர் ஜார்ஜ் வைட்பீல்ட்(George Whitefield)க்கு அணுக்கமானவராக இந்தார். ஸ்வார்ட்ஸ் ஜூன் 17, 1850-ல் கடலூரில் கப்பலிறங்கி அங்கிருந்து இன்னொரு படகில் ஜூலை 30, 1850-ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார்.
லுத்தரன் மிஷன் அமைப்பின் திருச்சி மறைமாவட்டத்தின் தலைமையகமாக அன்று தரங்கம்பாடி இருந்தது. தரங்கம்பாடியில் இருந்து திருச்சி வந்துசென்ற ஸ்வார்ட்ஸ் 1766-ல் திருச்சியில் குடியேறி அங்கே மதபோதகராகப் பணியாற்றினார்.
ஸ்வார்ட்ஸ் தஞ்சை, திருச்சி பகுதிகளில் சரபோஜியின் உதவியுடன் கிறிஸ்தவ சபைகளை நிறுவி ஏராளமானவர்களை மதமாற்றம் செய்தார். உள்ளூர் உபதேசியார்களுக்கு ஆங்கிலமும் மதக்கல்வியும் அளித்து அவர்களை மதப்பணிக்கு பயன்படுத்தினார். ஆரோன், டியாகோ, ராஜநாயகம் எனும் மூன்று தமிழ் உபதேசிகளும் அவருடன் இணைந்து பணியாற்றினார்கள். 1700 பேரை அவர்கள் மதமாற்றியதாக ஸ்வார்ட்ஸ் குறிப்பிடுகிறார். ஸ்வார்ட்ஸ் கிறித்தவ ஞானப்பள்ளி (Society for Promoting Christian Knowledge (SPCK) எனும் அமைப்பை நிறுவினார். திருச்சியின் பிரிட்டிஷ் தேவாலயங்களின் பாதிரியாராக நியமனம் பெற்றார்.
கிளாரிந்தா
தஞ்சையில் ஆங்கிலத் தளபதி லிட்டில்டன் முதிய கணவருடன் உடன்கட்டையேற கட்டாயப்படுத்தப்பட்ட கிளாரிந்தா என்னும் பெண்மணியை காப்பாற்றி மணந்துகொண்டார்.1778-ல் கிளாரிந்தாவுக்கு ஸ்வார்ட்ஸ் திருமுழுக்கு அளித்தார்
வேதநாயகம் சாஸ்திரியார்
ஸ்வார்ட்ஸ் வேதநாயகம் சாஸ்திரியார் இளமையில் கல்விகற்கும் வசதியின்றி இருக்கையில் அவரைத் தத்து எடுத்து தன்பொறுப்பில் கல்வி கற்பித்தார். ஸ்வார்ட்ஸ் துரையை வேதநாயகம் சாஸ்திரி தன் ஞானத்தந்தையாக கருதி போற்றி எழுதியிருக்கிறார்.
கல்விப்பணி
பிஷப் ஹீபர் பள்ளி
1761-ல் பிரிட்டிஷ் வெடிமருந்துக்கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் மறைந்தனர். அவர்களின் குழந்தைகள் அனாதையாயினர். அவர்களுக்கு கல்வி கற்பிக்கும்பொருட்டு பிஷப் ஹீபர் பள்ளி 1761-ல் நிறுவப்பட்டது. மேஜர் ஏ.பிரெஸ்டன் (Major A. Preston) அதற்கு உதவி செய்தார். 1763-ல் இன்னொரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதில் ஏராளமான பிரிட்டிஷ் படைவீரர்கள் மறைந்தனர். அவர்களுக்காக செயிண்ட் ஜான் தேவாலயத்தில் (St.John's Church) இன்னொரு பள்ளி நிறுவப்பட்டது. இந்தப்பள்ளிகளை நிறுவி நடத்த ஸ்வார்ட்ஸ் முன்முயற்சி எடுத்தார். ஆங்கிலேய ராணுவத்தினருக்காக இறுதிச்சடங்குப் பணிகளை ஆற்றிய ஸ்வார்ட்ஸ் அவர்களின் உதவியுடன் மே 18, 1766-ல் கிறிஸ்ட் சர்ச் வளாகத்தையும் பள்ளிகளையும் உருவாக்கினார்.
சரபோஜியின் நட்பு
1769-ல் ஸ்வார்ட்ஸ் தஞ்சை மன்னர் துளஜாஜி யின் நட்பை பெற்றார். துளஜாஜி மதம் மாறாவிட்டாலும் கிறிஸ்தவ போதகர்களை ஆதரித்தார். துளஜாஜியின் தத்தெடுக்கப்பட்ட மகன் நான்காம் சரபோஜியின் கல்விப்பொறுப்பை ஸ்வார்ட்ஸ் ஏற்ற்றுக்கொண்டார். சரபோஜி ஸ்வார்ட்ஸ் ஐயரை தன் குருவாக நினைத்தார்.
தஞ்சை ஆங்கிலப்பள்ளி
1784-ல் ஸ்வார்ட்ஸ் தஞ்சையில் ஓர் ஆங்கிலப்பள்ளியை நிறுவினார். இன்று அது செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி என அறியப்படுகிறது.
அரசியல் பணி
ஸ்வார்ட்ஸ் இந்தியாவில் பணியாற்றிய காலகட்டத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படிப்படியாக இந்தியாவின் ஆதிக்கத்தை அடைந்துகொண்டிருந்தது. கர்நாடகப்போர்கள் நடைபெற்றன. அந்தப்போர்ச்சூழலின் அழிவையும், பஞ்சங்களையும், அதனூடாக பிரிட்டிஷ் ஆதிக்கம் உருவானதையும் ஸ்வார்ட்ஸ் தன் நினைவுக்குறிப்புகளில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தஞ்சையை ஆண்ட துளஜாஜி தனக்குப்பின் வாரிசாக நான்காம் சரபோஜியை தத்து எடுத்தார். அந்த சுவீகாரத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்றுக்கொள்ளச்செய்யும் தூதுப்பணியை ஸ்வார்ட்ஸ் செய்தார். நான்காம் சரபோஜியை கொல்ல முயன்றவர்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஆகஸ்ட் 25,1779-ல் ஸ்வார்ட்ஸ் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதராக மைசூர் சுல்தான் ஹைதர் அலியை சந்தித்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தினார். ஹைதர் அலி மதம் பற்றிய பிடிவாதங்கள் ஏதுமில்லாமல் ஸ்வார்ட்ஸ் துரை சொல்வதை கேட்கும் மனநிலையில் இருந்தார் என்றும், ஸ்வார்ட்ஸ் அவருக்கு கிறிஸ்துவின் செய்தியைச் சொன்னார் என்று ஸ்வார்ட்ஸ் பதிவுசெய்துள்ளார். ஹைதர் அலிக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது, ஆனால் கூரிய நினைவாற்றல் கொண்டவர் என்று ஸ்வார்ஸ் எழுதியிருக்கிறார். ஸ்வார்ட்ஸ் திருவிதாங்கூர் மகாராஜா கார்த்திகைத் திருநாள் ராமவர்மாவையும் திருவனந்தபுரத்திற்குச் சென்று சந்தித்து திருவிதாங்கூரில் மதப்பரப்புகைக்கு ஒப்புதல் பெற்றார். மகாராஜாவுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் நடுவே தூதராகவும் பணியாற்றினார்.
மறைவு
ஸ்வார்ட்ஸ் பிப்ரவரி 13, 1798-ல் மறைந்தார். அவரது சமாதி தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ளது. அதில் சரபோஜி மன்னர் அவருக்காக எழுதிய அஞ்சலி பொறிக்கப்பட்டுள்ளது.
ராஜா சரபோஜியின் அஞ்சலிக்குறிப்பு
கனம். கிறிஸ்டியன் ஃபிரடெரிக் ஸ்வார்ட்ஸ் அவர்களின் நினைவாக. 1726 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி புருஷியா ராஜ்ஜியத்தின் நியூமார்க்கில் உள்ள சோனென்பர்க்கில் பிறந்து, 1798 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தஞ்சாவூரில் தமது 72 வது வயதில் இயற்கை எய்தினார். தமது இளமைப் பருவம் முதலே கிழக்கத்திய நாடுகளுக்கான சுவிசேஷகராகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால், நற்செய்தியை முதன்முதலில் போதித்த அப்போஸ்தலர்களின் சூழ்நிலையை ஒத்த இவரது வாழ்க்கைப் பயணம், அவர்களின் எளிமையான மற்றும் தூய்மையான அப்போஸ்தலப் பண்புகளை இவரிடமும் இயல்பாகப் பிரதிபலிக்கச் செய்தது. இவரது இயல்பான சுறுசுறுப்பு மக்களின் அன்பை வென்றது; அதேபோல இவரது கலங்கமற்ற நேர்மையும், தூய்மையான வாழ்க்கையும் கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய அனைவரின் மரியாதையையும் ஒருங்கே பெற்றன. ஏனெனில், இந்த எளிய போதகரைத்தான் இந்து மற்றும் முகமதிய மன்னர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான தங்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான தூதராகத் தேர்ந்தெடுத்தனர் - மகா ராஜா செர்ஃபோஜி.
நிறைவுரை:
ஸ்வார்ட்ஸ் ஐயர் ஒரு மதபோதகராகத் தன் பயணத்தைத் தொடங்கினாலும், சாதி-மத வேறுபாடின்றி மக்கள் அனைவரின் அன்பையும் வென்றவராக வாழ்ந்தார். கல்வி அமைப்புகளை உருவாக்கி தலைமுறைகளைக் காத்ததுடன், தஞ்சை அரச குடும்பத்திற்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஒரு நேர்மையான மத்தியஸ்தராக நின்று அமைதியை நிலைநாட்ட முயன்றார். மத எல்லைகளைக் கடந்து நேர்மை, கல்வி மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கிய ஸ்வார்ட்ஸ் ஐயரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாகும்.

0 Comments