அப்போஸ்தலர் பேதுருவின் அருளுரை
(அப்போஸ்தலர் 2:14-41)
முகவுரை
பெந்தெகொஸ்தே திருநாளின் போது, சீடர்கள் யாவரும் மேல்வீட்டறையில் கூடியிருந்த போது தூயாவியானவர் வல்லமையாய் பொழிந்தருளினார். கூடியிருந்த மக்கள் வியந்து அப்படியும் இப்படியுமாகப் பேசிக் கொண்டிருக்கையில் பேதுரு தைரியமாக எழுந்து நின்று தூயாவியில் நிறைந்தவராய் பேசிய அருளுரையைத் தியானிப்போம்.
1. வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் அருளுரை
அப்போஸ்தலர் 2:17 “…மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களையும், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள்." அப்போஸ்தலானாகிய பேதுரு தமது அருளுரையின் துவக்கத்தில், யோவேல் 2:28இல் சொல்லப்பட்ட வாக்கு நிறைவேறியதைச் சுட்டிக்காண்பிக்கிறார். மேலும் சில தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேறுதலை விளக்குகிறார்.
2. வல்லமையான சாட்சிபகரும் அருளுரை
அப்போஸ்தலர் 2:32 “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; அதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.” இயேசுகிறிஸ்து இப்பூமியில் ஊழியத்தை நிறைவேற்றி முடித்தப் பின்பு, பாடுகள்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் மீண்டும் உயிரொடெழுந்தார். அதனை யூதர்கள், ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் பேதுரு இந்தச் சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிபகருகிறார். அதை உறுதிப்படுத்த (சங்கீதம் 16) “பரிசுத்தாவானின் அழிவைக் காணவொட்டீர்” என்ற வசனத்தைக் கூறி விளக்குகிறார்.
3. வாழ்வை மாற்றும் அருளுரை
அப்போஸ்தலர் 2:36 “நீங்கள் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுங்கள்; பரிசுத்த ஆவிக்கான வரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” பேதுருவின் அருளுரை அநேகரின் உள்ளத்தை அசைக்கக் கூடியதாயிருந்திருக்கிறது. ஆகவே தான் மூவாயிரம் பேர் பிரசங்கத்திற்குப் பின்பு திருமுழுக்குப் பெற்றதாய் வாசிக்கிறோம்.
முடிவுரை
ஆண்டவரை மறுதலித்ததுமன்றி, மீண்டும் மீன்பிடிக்கப் புறப்பட்டவர் தான் இந்தப் பேதுரு. கர்த்தருடைய ஆவியானவரால் நிரப்பபெற்ற பேதுரு தைரியத்தினால் நிறைந்து உரைத்த அருளுரை இதுவே. இன்றும் திருச்சபை வரலாற்றில் இந்த அருளுரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
0 Comments