Ad Code

கிறிஸ்து ஆலயம் | மிலிட்டரி லைன் சேகரம் | Christ Church | Military Line Pastorate


பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஆலயம் தென்னிந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலத்தை சேர்ந்த மிலிட்டரி லைன் சேகரத்தின் சேகர ஆலயமான கிறிஸ்து ஆலயம் ஆகும்.


CSI Christ Church
Military Lines Pastorate

முதன் முதலில் திருநெல்வேலி திருச்சபை உருவாகுவதற்குக் காரணமாயிருந்த குளோரிந்தா அம்மையார் மற்றும் கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்களின் முயற்சியினால் கட்டப்பட்ட குளோரிந்தா சிற்றாலயம்  மிலிட்டரி லைன் சேகரத்தின் கீழ் தான் உள்ளது. (குளோரிந்தா கட்டிய ஆலயம் & மிலிட்டரி லைன் ஆலயம் வேறு வேறு)

அந்த சிற்றாலயத்திற்கு அருகே கிறிஸ்தவ  ஆங்கிலேய படைத்தளபதிகள், SPCK (Society for the Propagetion of Christian Knowlwdge) சங்கத்தினர் இவ்விடத்தை வாங்கி ஒரு சிறு ஆலயம் கட்டி அங்கு கடவுளை ஆராதித்து வந்துள்ளனர். இது தான் மிலிட்டரி லைன் ஆலயம் (Military Line English Church). இந்த பெயர் வர இதுவே காரணம். 

SPCG (Society for the Propagetion of Christian Gospel) சங்கத்தினர் 1826 ஆம் ஆண்டு இவ்விடத்தை SPCK சங்கத்தினரிடமிருந்து பெற்று இறைப்பணியை செய்து வந்தனர் . SPCG சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்பகுதியில் தங்கள் சுவிசேஷ பணிகளைத் தொடர்ந்தனர். ஆயினும் இவ்வாலயத்தின் கல்லறைத் தோட்டம் அரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. ஆங்கில அரசாங்கம் மாதம் ரூ. 35 வாடகை கொடுத்து வந்தது. சில காலம் சென்றபின் SPCG சங்கத்தினர் இவ்வாலய வளாகம்,  கல்லறைத் தோட்டத்துடன் சேர்த்து ஆங்கில அரசாங்கத்துக்கு விற்று விட்டனர். ஆனாலும் இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை இவ்வளாகத்தில் அடக்கம் செய்தனர்.


1848 ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியினர் புதிய ஆலயம் கட்ட ரூ. 3930 வழங்கியிருந்தனர். எனவே , அவர்கள் இவ்விடத்தை ரூ. 1000க்கு வாங்கி ரூ. 466 செலவிட்டு இவ்வாலயத்தை புதுப்பித்தனர் . ஆங்கில அரசாங்கம் Rev.ஜியார்ஜ் நெல்லர் கிரீம் அவர்களை (George KnclerGreame) இச்சிற்றாலய குருவாக (Chaplain) நியமித்தது. ஆகவே அவர் 1841 முதல்  1844 வரை இச்சிற்றாலயத்தில் பணியாற்றினார். அதன்பின் உள்ளூர் CMS சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இச்சிறாலய கவுரவ குருவாக பணியாற்றினார்கள் .

சென்னை பேராயர் கனம். டெல்டரி அவர்கள் திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது புதுப்பிக்பட்ட இவ்வாலயத்தை 23.02.1856ம் ஆண்டு பிரஷ்டை செய்து கிறிஸ்து ஆலயம் என பெயர் சூட்டினார். சிற்றாலயம் ஆலயமாக வளர்ந்தது. அந்நாட்களில் 100 பேர் மட்டுமே இந்த ஆலயத்தில் வழிபட்டனர். ஞாயிறு தொழுகை மாலையில் தான் நடந்தது. பாளையங்கோட்டையிலிருந்து வெளியேறிய காலாட்படை எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக வந்த நான்காம் படையினர் எண்ணிக்கை (fourth Regiment) குறைந்ததால் 1858 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்த ஆலயத்தில் முதல் திடப்படுத்தல் ஆராதனை 1859 ஆம் ஆண்டு நடந்தது. அதில் சென்னை பேராயர் அவர்கள் 23 பேரை திடப்படுத்தினார்கள்.

CSI Christ Church
CSI Christ Church

1877 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆராதனையில் பங்கேற்ற ஐரோப்பியர்கள்,  இந்தியர்கள் என்று தனித்தனியாக பதிவு செய்தனர். அந்நாட்களில் இரு தரப்பினரும் சமமாக இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை ஆனால் 1880 ஆம் ஆண்டிலிருந்து குறைய ஆரம்பித்தது. 1915  ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆராதனையில் பங்கு பெற்ற ஐரோப்பியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து 30 ஆகிறது. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக ஆராதனையில் பங்கு எடுத்தனர் .
1928 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்து 20க்கும் கீழானது. தூய யோவான் கல்லூரி, 1928ல் இன்றைய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் கல்லூரி மாணவர்கள் இவ்வாராதனையில் பங்கு பெற்றனர் .

1940 ஆம் ஆண்டில் மலையாள கிறிஸ்தவர்கள் இப்பேராலயத்திலுள்ள 2 கல்லூரிகளிலும் பணியாற்ற வந்தனர். எனவே , அவர்கள் குடும்பத்தினர் இந்த ஆலயத்தில் ஆராதனைகளில் பங்குபெற்றனர்.
1953க்குப் பின்னர் மலையாள கிறிஸ்தவர்கள் குறைய ஆரம்பித்து 40 பேர் மட்டும் இங்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.


Military Lines CSI Church
Military Lines CSI Christ Church

1950ம் ஆண்டு முதல் இந்த ஆலயம் திருநெல்வேலி அத்தியட்சாதீனத்தில் (The Diocese of Tirunelveli) அங்கம் பெற்று 1954 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்திலிருந்து அத்தியட்சாதீனத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1954ம் ஆண்டு Rev. Dr. G.N  காந்தையா இந்த ஆலயத்துக்கு Deacon ஆக பொறுப்பு ஏற்றார். 1955ம் ஆண்டு முதல் 1981 வரை ஒரு கவுரவ போதகராக அவர் பணி ஆற்றினார். அவருடைய பணி காலத்தில் தான் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலை 9 மணிக்குத் தமிழ் ஆராதனை நடத்த ஆரம்பித்தனர். இவ்வாலயத்தில் 10.02.1957ல் முதன் முதலாகத் தமிழ் ஆராதனை நடைபெற்றது. நெல்லை முதல் தமிழ் பேராயர். கனம். A.G. ஜெயராஜ் அவர்களும் இதற்கு வித்திட்டவர்கள் ஆவார்கள்.

Christ Church
Inside of the Church

இந்த ஆலயத்தின் முன்புறம் கிறிஸ்தவ மிஷனரிகள் கல்லறைகள் உள்ளன. CSI திருநெல்வேலி திருமண்டலத்தின் மாம்பழச்சங்க ஸ்தோத்திர பண்டிகை வருடந்தோறும் இங்கு இருந்து தான்  ஆரம்பிக்கப்பட்டு, மாபெரும் பவனியாக நூற்றாண்டு மண்டபம் நோக்கி செல்லும்.

Night View
Night View of the Church

தற்பொழுது 600 குடும்பங்கள் அங்கமாக இந்த சபையில் உள்ளன. தூய யோவான் கல்லூரி விடுதி மாணவ மாணவிகள் இங்கு தான் ஆராதனைக்கு வருகின்றனர். தினமும் மாலை வழிபாடு, ஞாயிறு காலை 5.30 மற்றும் 9.30 மணிகளில் தமிழ் ஆராதனை, ஞாயிறு காலை 7.30 மற்றும் மாலை 6.30 மணிகளில் ஆங்கில ஆராதனை ஆகியவை நடைபெறுகின்றன.


கிறிஸ்துவின் அருளும் அன்பும் உங்களோடிருப்பதாக.


About the Author

Y. Golden Rathis. B.A, B.Sc., B.Th.,

Photos by

John Peter.




Post a Comment

2 Comments

John Peter said…
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾