தென்பொதிகை மலைக்கு மேற்கே, தென்மலை நீர்த்தேக்கமுக்கு கிழக்கே திருநெல்வேலி திருமண்டலத்திற்கு கிடைக்கப்பெற்ற பரிசு தான் நெடும்பாறை சேகரம். தமிழ்நாடு - கேரள எல்லையிலிருந்து மேற்கே ஆரியாங்காவு என்ற ஊருக்கு அடுத்து வரும் கழுதுருத்தி என்ற இடத்திலிருந்து வடக்கே 3 KM தொலைவிலுள்ள நெடும்பாறை சேகரத்தின் சேகர சபையாக தூய யோவான் ஆலயம் அமைந்துள்ளது.
வெள்ளைக்காரர்கள் இந்த பகுதியில் இருந்த போது அவர்கள் கடவுளை தொழுதுகொள்ள ஒரு சிற்றாலயத்தை கட்டியுள்ளனர். 1877 ஆம் ஆண்டு புனலூரில் பாலம் கட்டும் பணிக்காக வந்த ஒரு ஆங்கிலேயர் நெடும்பாறையில் தங்கியிருந்த போது இந்த சிற்றாலயம் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. அங்கு ஆங்கில ஆராதனை நடைபெற்றிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் குதிரையில் வந்து அங்கு ஆராதித்துவிட்டு தங்கக் இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என்று வாய்வழி செய்தி உண்டு.
இரப்பர் எடுக்கும் கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட பிறகு எஸ்டேட்டில் பணிபுரிய வந்த தமிழ் மக்கள் இங்கு ஆராதிக்க வழிவகுக்கப்படிருக்கிறது. சுமார் 150 குடும்பங்கள் அங்கு ஆண்டவரை தொழுது கொண்டிருக்கிறார்கள். ஞாயிறு காலை 8.30 முதல் 9.30 வரை தமிழ் மொழியிலும், 9.30 முதல் 10.30 வரை ஆங்கில மொழியிலும் வழிபாடு நடைபெற்றிருக்கிறது.
தமிழ் மக்கள் எடுத்த தீர்மானத்தின்படி தமிழ்நாட்டிலுள்ள CSI திருநெல்வேலி திரு மண்டலத்தில் சபை இணைக்கப்பட்டு தென்காசி சர்க்கிளின் கீழ் இருந்தது. பின்னர் சாந்தபுரம் சேகரத்துக்கு மாறி, அடுத்து செங்கோட்டை சேகரத்தின் அங்கமாய் மாறியது. தற்போதுள்ள ஆலயம் 2005 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 10 வருடங்களாக, எஸ்ட்டேடில் வேலை பார்க்கும் மக்கள்எண்ணிக்கை குறைந்ததால் சபையில் குடும்பங்கள் எண்ணிக்கை சரிய தொடங்கிவிட்டது.
தூய யோவான் ஆலயத்தில் தற்சமயம் 25 குடும்பங்கள் உள்ளன. ஆனாலும் எஸ்டேட்டில் 6 சபைகள் காணப்பட்டதால் புதிதாக 2018 ஆம் ஆண்டு நெடும்பாறை சேகரம் உருவாக்கப்பட்டது. முதல் சேகர தலைவர் Rev. பால் ஜெபராஜ் ஐயரவர்கள் ஆவார்.
இங்கு தியான மையம் ஒன்றும் ஆலயத்தின் அருகே உள்ளது. ஆலயத்தின் முன்பு ஆறு ஓடுகிறது. திருநெல்வேலி, துத்துக்குடி- நாசரேத் திருமண்டலங்களிலிருந்து இங்கு தியான கூட்டங்கள் நடத்த வருகின்றனர். இதற்கான அனுமதியை சேகர தலைவரை அணுகி பெறலாம். அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும்.
ஆண்டவருடைய ஆலயத்தின் நன்மைகள் உங்களுக்கு உண்டாவதாக.
0 Comments