Ad Code

தூய சிமியோன் ஆலயம் | கோவிலூற்று | St. Simeon Church

தென்னிந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலத்தில் உள்ள ஆலயம் தூய சிமியோன் ஆலயம். இந்த ஆலயம் அமைந்துள்ள கோவிலூற்று கிராமம் அடைக்கலப்பட்டணத்திலிருந்து 5 km தெற்கே உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அழகான கிராமம்.
Koviloothu Church
Koviloothu Church 1980

மேற்கு திருநெல்வேலி பகுதியில் நல்லூரை மையமாக கொண்டு நற்செய்தி பணிகள் நடைபெற்ற அந்தக் காலக்கட்டத்தில், கோவிலூற்று (கோவிலூத்து Koviloothu) என்ற கிராமத்தில் வலுவான எதிர்ப்பலை காணப்பட்டது. இதனை சுற்றியுள்ள கிராமங்களில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் இருந்தனர். நல்லூரின் முதல் மிஷனரி என்று அழைக்கப்படுகின்ற கனம். P.P. ஷாப் வற்றர் ஐயரவர்கள் கோவிலூற்று கிராமத்தில் ஊழியத்தை 1847 இல் தொடங்கி, 1849 இல் வெற்றியும் கண்டு ஒரு சின்ன சபையை உருவாக்கினார். அந்த சபையின் முக்கிய நபராக தன்வந்தனரான திரு. மனுவேல் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். செல்வமிக்க இவர் இயேசுவின் மீது கொண்ட பற்றினால் செய்த வாஞ்சைமிக்க பணியால் இவரது சொந்தக்காரர்கள் சபையில் சேர்ந்தனர். 

15.10.1850 அன்று நல்லூர் உதவி மிஷனரி கனம். ஷெப்ற்றிமாஸ் ஹாப்ஸ் ஐயாவினால் புதிகாக கட்டப்பட்ட ஜெப ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் அதிகாலை முதல் நல்ல மழை பெய்ததால், நனைந்து கொண்டே குதிரையில் பயணப்பட்டு வந்தார். கொட்டும் மழையிலும் கூடியிருந்த விசுவாசிகளை கண்டு மகிழ்ந்தார். அன்று இரவு ஒன்பது மணிக்கு தான் அங்கிருந்து திரும்பினார். 

சபையின் முக்கிய பிரமுகர் மனுவேல் அவர்களுக்கு இருந்த செல்வாக்கின் நிமித்தம், மக்கள் பயத்தினாலும், அவர் ஆதரவை பெறவும் சபையில் சேர்ந்திருந்தனர். 1855 ஆம் ஆண்டிற்கு பிறகு Rev. கிளார்க் ஐயா நல்லூரில் பொறுப்பேற்றார்கள். கோவிலூற்று சபைக்கு உபதேசியாரை ஒழுங்காக நியமிக்க முடியவில்லை. காரணம் ஊழியர்கள் மனுவேல் அவர்கள் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று எண்ணினார். சபையாரும் உண்மையாக கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாததால் சபை வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது.

1856 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் தேதி Rev. கிளார்க் ஐயா வாயிலாக புதிய ஆலயம் கட்ட அஸ்திபாரம் போடப்பட்டது. ஆனால் இதற்கு முழு காரணமும் திரு. மனுவேல் அவர்களின் ஆசையும் முயற்சியும் தான். 50 அடி நீளமும் 30 அடி அகலமும் உள்ளவாறு, செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்ட தீர்மானம் இயற்றப்பட்டது. ஆலயத்தை சுற்றி மதில் கட்ட சபையார் யாவரும் 60 ரூபாய் கொடுக்கவும், மீதமுள்ள 4440 ரூபாய் வசூல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்ற வேளையில், 1857 ஆம் ஆண்டு மனுவேல் அவர்கள் எதிர்பாராவிதமாக மரணமடைந்தார். இந்த பேரதிர்ச்சி சபையை பாதித்தது. ஆலய கட்டுமானப்பணி நின்றது. இவருக்காக சபையில் சேர்ந்தவர்கள் பலர் பின்வாங்கி போனார்கள். மனுவேல் அவர்கள் இருக்கும் வரை சபைக்கு எதிராக செயல்படாத மற்றவர்கள் சபையார் 35 பேர் மீது வீண் பழி சுமத்தியதால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் கிறிஸ்து சபையை விட்டுவிட உறுதி கூறிய போது விடுவிக்கப்பட்டனர். 

இந்த காலக்கட்டத்தில் தான் மற்ற சபைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நிலையில், நல்லூர் சர்க்கிளின் கீழ் புலவனூரை குருபீடமாக்கி அங்கு ஒரு குருவானவர் நியமிக்கப்பட்டார். நாடார் குல இந்தியர்களில் முதல் குரு என்று அழைக்கப்பெற்ற Rev. D. ஞானமுத்து ஐயா (1816 - 1818) பொறுப்பேற்றார். அவரது கட்டுப்பாட்டில் கோவிலூற்று சபை வந்தது. அவரது பெரும் முயற்சியினால் 1861 இல் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் 52 பேர் சபையில் அங்கம் வகித்தனர். ஆனால் 1862 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசிய இந்து வீரன் வசாதராயர் மற்றும் நாராயணசாமி வணக்கம் செய்த முத்துக்குட்டி ஆதரவாளர்களால், புலவனூர் சேகர சபைகள் அனைத்தும் உபத்திரவத்தை சந்தித்தன. மேலும் கொடிய காலரா நோயும் பரவியதால் குல தெய்வம் கிறிஸ்தவத்தினால் கோபம் கொண்டு தண்டிக்கிறது என்று பரப்பப்பட்டது. இந்த காரணங்களால் மீண்டும் விசுவாசிகள் பின்வாங்கி போனார்கள். 


இவையெல்லாவற்றின் மத்தியிலும் Rev. ஞானமுத்து ஐயா சிறப்பாக ஊழியம் செய்து ஆத்துமாக்களை ஊக்கப்படுத்தினார். நின்று போன ஆலய கட்டுமானப் பணியை தொடங்கினார். Rev. கிளார்க் ஐயாவின் சகோதரி 465 ரூபாய் காணிக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது. சபையில் ஞானஸ்நான ஆயத்தக்காரர்கள் 77 பேராக கூடினர். மறுதலித்தவர்களில் 5 பேர் மீண்டும் சபையில் சேர்ந்தனர். 

Koviloothu CSI Church
CSI Church, Koviloothu.


23.12.1868 அன்று காலை 11 மணியளவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட 65.5 அடி நீளமும் 28 அகலமும் கொண்ட ஆலயம் நல்லூர் சர்க்கிள் குரு. அருட்திரு. டிக்சன் ஐயாவினால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய கோவிலூற்று உபதேசியார் T. சிமியோன் அவர்கள் எழுதிய பிரதிஷ்டை கீதம் பாடப்பட்டது. சுரண்டை குரு Rev. ஹானிஸ் ஐயா பிரசங்கம் செய்ய, உக்கிரன்கோட்டை குரு. Rev. அந்தோணி ஜேம்ஸ் ஜெபம் செய்தார். புலவனூர் குரு. ஞான முத்து ஐயா 4 பேருக்கு திருமுழுக்கு கொடுத்தார். பாளையங்கோட்டை குரு Rev. கெம்பர் ஐயா மற்றும் சீவலசமுத்திரம் குரு Rev. சாமுவேல் ஐயா ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 400 பேர் நல்லூர் சர்க்கிள் முழுவதிலும் இருந்து வந்திருந்தனர். 
Branch Churches Koviloothu
Branch Churches, Koviloothu Pastorate 1980

1975 ஆம் ஆண்டு இந்த கோவிலூற்று சபை ஒரு சேகரமாக மாற்றப்பட்டது. Rev. SG. அம்புரோஸ் ஐயா முதல் சேகர தலைவராக பணியாற்றியுள்ளார்கள்.

இப்போது கோவிலூற்று சேகரத்தில் 7 கிளை சபைகள் உள்ளன. 2025 இல் சேகரம் பொன்விழா 50 ஆம் ஆண்டை நோக்கி.... சபை 175 ஆம் ஆண்டை நோக்கி....

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

துணை நின்ற நூல்கள்
இரு நூறாண்டு விழா மலர்
மறையவிருந்த மானிக்ககற்கள்
            - DA கிறிஸ்துதாஸ்

Post a Comment

0 Comments