தூய ஸ்தேவான் ஆலயம் | புலவனூர் சேகரம் | Saint. Stephen Church
சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டலத்தின் வரலாற்றில் மேற்கு திருநெல்வேலி பகுதியில் நல்லூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது சேகரமாக உருவான புலவனூரில் தான் தூய
ஸ்தேவான் ஆலயம் அமைந்துள்ளது. பாவூர்சத்திரம் கடையம் ரோட்டில் புலவனூர் என்ற ஊர் உள்ளது.
CMS குருவானவர் கனம். ரேனியஸ் ஐயரவர்கள் மேற்கு திருநெல்வேலி பகுதிக்கு ஊழியம் செய்ய வந்த போது, 1827 ஆம் ஆண்டு புலவனூர் கிராமத்தில் நற்செய்தி அறிவிக்கையில், ஆதி நாராயணன் என்பவரை சந்தித்தார். இந்த ஆதி நாராயணன் என்பவருக்கு குழந்தை பாக்கியமில்லை. கனம். ரேனியஸ் ஐயா அவர்கள் இவருக்காக ஜெபித்து நற்செய்தி அறிவித்தார். இவரும் இயேசுவை நம்பி ஜெபித்தார். அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைத்தது. உடனே அவர் குடும்பத்தோடு திருமுழுக்குப் பெற்று ஓலைக் கூரையைக் கட்டி கடவுளை வழிபட்டார். பின்னர் 50 குடும்பங்கள் அங்கு ஆராதித்து வந்தனர். விரைவில் சபை நல்ல வளர்ச்சியைக் கண்டதாலும், ஊழியம் செய்ய மற்ற பகுதிகளுக்கு செல்ல எளிதாக இருந்ததாலும், கனம். ரேனியஸ் ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட நல்லூர் சர்க்கிளில் இருந்து இரண்டாவது சேகரமாக புலவனூர் சேகரம் உருவாக்கப்பட்டது. இதற்கான முயற்சியை Rev. வில்லியம் கிளார்க் ஐயா துவங்கி வெற்றி கண்டார்கள். Rev. விசுவாசம் தர்மக்கண் ஐயா குருவானவராக 1858 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
திருநெல்வேலி திருமண்டலத்தின் பேராயர் கனம். சாமுவேல் மோர்லி ஐயா தூய ஸ்தேவான் திருநாள் (26.12.1900) அன்று புலவனூருக்கு வந்த போது, ஆலயத்திற்கு தூய ஸ்தேவான் ஆலயம் என்று சூட்டினார். அது வரை குறிப்பிட்ட பெயரில்லாமல் இருந்திருக்கிறது. புலவனூர் சேகரத்தில் அதன் பக்கத்து கிராமங்கள் சிவசைலனூர், கடையம், மேட்டூர், ஆசீர்வாதபுரம் போன்றவை இணைக்கப்பட்டன. இந்த புலவனூர் சேகரத்தில் தான் முதன் முதலில் 25.01.1861 அன்று சங்க காணிக்கை செலுத்தல் நடைமுறைக்கு வந்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வந்த Rev. ஞான முத்து ஐயா சங்கப் பணத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். முதல் சங்க காணிக்கை மொத்த தொகை 80 ரூபாய். பின்பு தான் திருமண்டல அளவில் நடைமுறைக்கு வந்தன.
1879 ஆம் ஆண்டு ஆலயம் விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது குறித்து பேராயர். கனம். சார்ஜென்ட் அவர்களின் நாட்குறிப்பில் 1878 இல் ஆலய பணிகள் Rev. V. தர்மக்கண் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறுவதாக எழுதியுள்ளது.
அருட்திரு. ஜெபமணி யோசுவா ஆயரவர்கள் காலத்தில் புலவனூர் சேகரத்தின் முதல் ஸ்தோத்திர பண்டிகை 1944 ஆம் ஆண்டு ஆசரிக்கப்பட்டது. இது கிளை சபையான கடையம் தூய இம்மானுவேல் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
2006 ஆம் ஆண்டு கடையம் தனி சேகரமாக பிரியும் வரை அங்கேயே நடைபெற்றது. சேகரத்தின் அனைத்து சபைகளின் விசுவாசிகளும் குடும்பமாக மூன்று நாட்கள் இந்த பண்டிகையில் பங்கெடுத்து அறுப்பின் முதற்பலன்களை செலுத்தியுள்ளனர். சேகரத்தின் புதிய குருமனை 29.09.2009 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதிய ஆலயம் கட்டப்பட்டு, 26.12.2005 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய ஆலயத்தின் கோபுரம் 2011 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடக்கத்தில் CMS துவக்கப் பள்ளியாக உருவான பள்ளிக்கூடம் தற்சமயம் TDTA நடுநிலைப் பள்ளியாக செயல்படுகிறது. சபையோடு உள்ளது. 200 க்கும் மேலான குடும்பங்கள் இங்கு அங்கத்தினர்களாக உள்ளன.
200 ஆம் ஆண்டை நோக்கி....
ஆண்டவருடைய ஆலயத்தின் நன்மைகள் உங்களுக்கு உண்டவதாக.
4 Comments
Well said
ReplyDeleteThank you
DeleteWonderful history my native &my church tq bro
ReplyDeleteThank You. God is Good
Delete