Ad Code

மாம்பழச் சங்கப் பண்டிகை வரலாறு | The Festival of Tirunelveli Diocese

 மாம்பழச் சங்க பண்டிகை  வரலாறு

Tirunelveli Diocese
History of Mampaza Sangam

ஒரு சின்ன விதை பெரிய மரமாக உருவாகி அதன் கனிகளை பலன்களாக அனுபவிப்பது போல "வளர்ந்து பெருகுக" என்னும் நோக்கில் வித்திடப்பட்டு, இன்று கனி கொடுத்து கொண்டிருக்கும் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஸ்தோத்திர பண்டிகை தான் மாம்பழ சங்க பண்டிகை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் இந்த பண்டிகை பாளையங்கோட்டையில் வைத்து நடைபெறுகிறது.

ஏன் இந்த பண்டிகை ஆரம்பிக்கப்பட்டது? என்று சொல்லி பார்ப்போம்.
திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு வேலைக்காக சென்ற லட்சுமணன் என்பவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 10.08.1770 அன்று சுவார்ட்ஸ் ஐயரவர்கள் வாயிலாக ஞானப்பிரகாசம் என்ற பெயரில்  அங்கு திருமுழுக்கு பெற்றார். தஞ்சைப் பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்ட கோகிலா என்ற பெண்மணி 03.03.1778 அன்று அன்று சுவார்ட்ஸ் ஐயரவர்கள் வாயிலாக குளோரிந்தா என்ற பெயரில்  அங்கு திருமுழுக்கு பெற்றார். இவர் தான் திருநெ்வேலி திருச்சபையின் அஸ்திபாரக்கல்லானார்.  1780 - 1785 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 13 சாதிகளைச் சேர்ந்த 40 பேர் திருநெல்வேலியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இருந்தனர். 24.08.1785 அன்று முதல் ஆலயம் கட்டப்பட்டது. இது இன்றைக்கு மிலிட்டரி லைன் ஆலயத்தின் அருகே உள்ளது. 1780 ஆம் ஆண்டு முதல் சபை கூடுதல் நடைபெற்றிருக்கும் என்று நம்ப்பபடுகின்றது.

1820 ஆம் ஆண்டு CMS மிஷனரியாக திருநெல்வேலிக்கு வந்த கனம். ரேனியஸ் ஐயரவர்கள் திருநெல்வேலி திருச்சபை வளர கடவுளின் முக்கிய கருவியாக இருந்திருக்கிறார்.  இவரது காலக்கட்டத்தில் திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக சபைகள் உருவாக ஆரம்பித்தன. அந்த சமயத்தில் ஆனி மாதம் நெல்லையிலுள்ள குரங்கனி முத்துமாலையம்மன் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் விழாவிற்கு புதிதாக சபையில் சேர்ந்த விசுவாசிகளும் சென்று வழிபட்டு , தாமிரபணி ஆற்றில் குளித்து வருவதைக் கண்டு ரேனியஸ் ஐயர் வருந்தினார். இதற்கு மாற்று வழியை மக்களின் கலாச்சர அடிப்படையில் யோசிக்கலானார். ஏற்கனவே அவர் விதவைகள் நலச்சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருந்தார். அந்த சங்கத்தின் விழா நாளை ஆனி மாதம் நடைபெறும் திருவிழா நாளன்று மாற்றி உதவிகள் செய்தார். 1834 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பல சபைகளில் இருந்து வண்டி வண்டியாக இந்த சிறப்பு விழாவில் மக்கள் பங்கு பெற்றனர். அன்றைய தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதித்து விட்டு, தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

1835 ஆண்டு ஜூலை 7 ஆம் புதிதாக பாளையங்கோட்டைக்கு CMS மிஷனேரியாக வந்த எட்வர்ட் சார்ஜென்ட் ஐயா, இந்த நாட்களில் அனைத்து சபை மக்களும் பங்கெடுக்க அழைப்பு கொடுத்தார். அப்படியே இந்த நாட்கள் மிக விமரிசையாக ஆசரிக்கப்பட்டன. 29.11.1876 இல் புதுப்பிக்கப்பட்ட தூய திரித்துவ பேராலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் பேராயராக 1877 இல் நியமிக்கப்பட்ட பின்பு1880 ஆம் ஆண்டில் நூறாண்டு விழா கண்டது திருநெல்வேலி திருச்சபை. அப்போது அதன் நினைவாக நூற்றாண்டு மண்டபம் கட்டப்பட்ட்டது.

Tirunelveli Diocese Cathedral
Tirunelveli Diocese Cathedral

அன்றைய காலக்கட்டத்தில் இந்த நாட்கள் மாம்பழ சீசன் நேரம். பாளையங்கோட்டை தெருக்கள்தோறும் மாம்பழ வாசனை வீசும் வண்ணம் விற்பனை இருக்கும். மற்ற கோவில் விற்பனை சங்கங்கள் புறஜாதியார் மத்தியில் இருந்தது. அதற்கு மாறாக சபை விசுவாசிகள் தங்கள் விளைச்சலை இங்கு கொண்டு ஏலம் போட்டு எடுத்து சென்றனர். ஆகவே இது 1899 ஆம் ஆண்டு முதல் மாம்பழ சங்க பண்டிகை என்று அழைக்கப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் புறஜாதியார் மத்தியில் ஆனி மாதம் திருவிழாவிற்கு வந்தால் நல்ல மணவாழ்வு ஆவணியில் அமையும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு மாறாக, அநேக சபைகளில் இருந்து மக்கள் பண்டிகைக்கு வருவதால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர்களுக்குள் அல்லது பக்கத்து கிராமங்களுக்குள் முடிந்துவிடும் திருமணம் பரந்து விரிந்து, பெற்றோர்கள் அயலிடங்களில் வரன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆகவே இதற்கு மாப்பிள சங்கம் என்ற பட்டப் பெயர் வந்தது.

ரேனியஸ் ஐயா காலத்தில் ஒரு நாள் ஆசரிக்கபட்ட பண்டிகை, பின் இரண்டு நாட்களாகி, 1980 ஆம் ஆண்டு வரை இரண்டு நாட்கள் இந்த பண்டிகை ஆசரிக்கப்பட்டது. முதல் நாள் ஆயத்த வழிபாடும், கதாகாலட்சேபமும் நடைபெறும். இரண்டாம் நாள் காலையில் தூயா திருவிருந்து ஆராதனை, மதியம் பண்டிகை ஆராதனை (காணிக்கை ஆராதனை) நடைபெறும். அதன் பின்னர் அங்கு இருக்கிற ஏழைஎளிய மக்களுக்கு விசுவாசிகள் தங்கள் தர்ம காணிக்கைகளை செலுத்துவார்கள்.

Tirunelveli Diocese Missionaries
Missionaries, Tirunelveli 2

1980 ஆம் ஆண்டு பேராயர் கனம். தானியேல் ஆபிரகாம் ஐயா காலத்தில் இரு நூறாண்டு விழா மூன்று நாட்கள் ஆசரிக்கப்பட்டது. இதன் நினைவாக இன்று நாம் பயன்படுத்துகிற இரு நூறாண்டு கீதம் வெளியிடப்பட்டது. அதிலே "வளர்ந்தே பெருகுக" என்ற திருநெல்வேலி திருமண்டல பாடல் 399 வது எண்ணில் உள்ளது. முதல் நாள் திருத்தொண்டர்கள் நினைவு ஸ்தோத்திர ஆராதனை, இரண்டாம் நாள் பண்டிகை ஆராதனை, மூன்றாம் நாள் ஸ்தோத்திர திருவிருந்து ஆராதனை நடைபெறும்.

1997 ஆம் ஆண்டு பேராயர் கனம். ஜேசன் தர்மராஜ் ஐயா காலத்தில், CSI (தென்னிந்திய திருச்சபை) பொன் விழா ஆண்டில், நூற்றாண்டு மண்டபம் புதுப்பிக்கப்ப்பட்டு திருமண்டல பண்டிகை மிக சிறப்பாக நடைப்பெற்றது.

Holy Trinity Cathedral
Holy Trinity Cathedral, Tirunelveli

இது இஸ்ரவேல் மக்கள் ஆசரித்த அறுப்பின் பண்டிகையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த பண்டிகை நாட்களில், பூர்வ நாட்களையும், கடவுளின் கருவிகளாக செயல்பட்ட அருட்பணியாளர்களையும் நினைத்து, அவரை போற்றவும், நம் உழைப்பிற்கு கடவுள் கொடுத்த பலன்களுக்காய் அவருக்கு நன்றி செலுத்தவும் அழைக்கப்படுகின்றோம்.

முந்நூறாம் ஆண்டின் விழாவை நோக்கி...


துணை நின்ற நூல்கள்

இருநூற்றாண்டு விழா மலர்

இவர்களைத் தெரியுமா? - 1









Post a Comment

6 Comments