Ad Code

குளோரிந்தா அம்மையார் (1746-1806) | Clarinda Life History | திருநெல்வேலி திருச்சபையின் தாய் | First Baptized in Tirunelveli |

முகவுரை
வாழ்வின் துவக்கம் முதல் மரணத்தின் மத்தியிலே வாழ்ந்து, கிறிஸ்துவால் உயிர்மீட்சி பெற்று, மரணத்தினுடே வாழும் மக்களை மீட்க, தன்னையே அர்ப்பணம் செய்து, மர்மமான முறையில் மரணத்தை சந்தித்தும், இன்றும் எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு பெண்மணியின் வரலாறு... யார் இந்த பெண்மணி? யாரால் யாருக்காக சாதித்தார்கள்? அம்மையாரின் வரலாறு இதோ...

துன்பங்களினுடே வளர்ந்த குளோரிந்தா
கோகிலா என்ற குளோரிந்தா 1746 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். கோகிலாவின் தந்தையும் தாத்தாவும் தஞ்சாவூரையும் ஆண்டுகொண்டிருந்த மராட்டிய மன்னர் சரபோஜி அரண்மனை கோவிலில் பண்டிதர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கோகிலா பிறக்கும் போதே அவரது தாய் பிரசவத்திலும், தந்தையார் போரினாலும் மரித்து போனதால், தாத்தாவின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். சிறுவயதிலேயே சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழியில் புலமை பெற்று விளங்கினார்.

இப்படியாக ஒருநாள் தஞ்சாவூர் கோவிலில் சமஸ்கிருத சுலோகங்களை ஓதுவதற்கு, மராத்திய அரச நந்தவனத்திலிருந்து புறப்பட்டு செல்லும்போது கொடிய விஷதன்மை கொண்ட பாம்பு கடித்தது. அப்போது அந்த வழியாய் வந்துகொண்டிருந்த ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரி பாம்பு கடித்த இடத்தை தன் உடைவாளால் சற்று கீறி தன் வாயால் இரத்தத்தையும் விஷத்தையும் உறிஞ்சியதால் கோகிலாவை காப்பாற்றப்பட்டாள். 

திருப்பு முனையில் குளோரிந்தா
1759 ம் ஆண்டு கோகிலாவுக்கு 13 வயதாக இருக்கும்போது ஒரு மராட்டிய இந்து பிராமணரோடு திருமணம் நடந்தது. எதிர்பாராதவிதமாக கோகிலாவின் கணவர் ஒரு வருடத்திற்குள்ளாக மரித்துவிட்டார். சம்பிரதாயபடி சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில், மரித்துபோன அவள் கணவருடன் எரிப்பதற்காக, கோகிலாவை குளிக்க வைத்து, அலங்கார ஆடை அணிவித்து, குங்கும பொட்டிட்டு, மேள தாளம் முழங்க கணவன் பிண ஊர்வலத்தில் அழைத்து சென்றார்கள். தன்னை யாராவது காப்பாற்றும்படி கூச்சலிட்ட ஒரு பெண்ணின் அலறல் குரலை, அச்சுடுகாட்டின் பாதை வழியாய் சென்று கொண்டிருந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரி கேட்டு, அங்கு வந்து, விசாரித்து, வாக்குவாதம் செய்து விரட்ட முற்பட்டபோது அங்கு வந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரி கர்னல் ஹென்றி லிட்டில்டன், போர்வீரர்களின் உதவியோடு கோகிலாவை இந்துமத பூசாரிகளிடம் இருந்து காப்பாற்றினார்.

அப்போதுதான் கர்னல் ஹென்றி லிட்டில்டன் கோகிலாவை யார் என்று அடையாளம் கண்டு, கோகிலாவின் உறவினர்களை அழைத்து கோகிலைவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் இந்துமத பூசாரிகள் ஈமசங்கு பூரணமாய் நிறைவேற்றப்படவில்லை என்று இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து கோகிலாவின் உறவினர்களை மிரட்டி, கோகிலாவை உயிரோடுவிட்டால் தெய்வகுற்றம் என்று சொல்லி பயமுறுத்தினார்கள். கோகிலாவுக்கு யாரும் அடைக்கலம் கொடுக்ககூடாது என்று எச்சரித்தார்கள். ஆகவே எவரும் கோகிலாவை ஏற்றுக்கொள்ளவில்லை. கோகிலாவின் நிலை பரிதாபமாயயிற்று. 

இறைநாட்டத்தில் குளோரிந்தா
கோகிலாவைக் காப்பாற்றும் வண்ணம் கர்னல் லிட்டில்டன் கோகிலாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். இந்த சூழ்நிலையில் மூன்று மாதத்திற்குள் தஞ்சாவூரில் பணியாற்றிக்கொண்டிருந்த கர்னல் லிட்டில்டன் 1760 ம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு மாறுதல் செய்யப்பட்டார். எனவே கோகிலாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாயாரின் நினைவாக கோகிலாவுக்கு கிளாரா இந்தியா என்று பெயரிட விரும்பினார். பின்னர் இந்த பெயரே கிளாரிந்தா அல்லது குளோரிந்தா என்று மாறியது.

பாளையங்கோட்டைக்கு வந்த கர்னல், கோகிலாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். அதன் மூலம் ஆங்கில வேதபுத்தகத்தையும் வாசிக்க கொடுத்தார். தன்னோடுகூட கோகிலாவையும் ஆலயத்திற்கு அழைத்து சென்றார். இதன்மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சுவிஷேசம் கூறினார். இயேசு கிறிஸ்துவை கர்னல் மூலம் அறிந்து கொண்ட கோகிலா கொஞ்சம் கொஞ்சமாக இயேசுவின் அன்பையும் வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்ததையும் அறிந்து கொண்டு இயேசுவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். 

காலபோக்கில் கோகிலாவின் ஆதறவற்ற நிலையை எண்ணி, அவளுடைய எதிர்காலம் கருதி, கோகிலாவை கர்னல் லிட்டில்டன் தன் மறுமனையாட்டியாக வைத்துக்கொள்ள எண்ணினார். இந்த சூழ்நிலையில் 1775 ம் ஆண்டு ஆங்கிலேய இராணுவ வீரர்களுக்கு ஆராதனை நடத்துவதற்கு அனுப்பப்பட்ட குருவானவர் சுவாட்ஸ் ஐயரிடம், கர்னல் லிட்டில்ன் தன்னுடைய பராமரிப்பில் இருக்கும் கோகிலா பற்றி கூறி, அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க கேட்டுக்கொண்டார். ஆனால் குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் கர்னலுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டு இருப்பதை அறிந்துகொண்டதால் ஞானஸ்நானம் கொடுக்க சம்மதிக்கவில்லை. இதைக்கேட்ட கோகிலா இயேசுவைப்பற்றிப்பிடித்து வாழ்வதினின்றும் மாறிவிடவில்லை.

இந்நிலையில் 1778 ம் ஆண்டு பாளையங்கோட்டை பகுதியில் பணிபுரிந்த ஆங்கிலேய மக்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் மற்றும் திருமணம் செய்துவைப்பதற்காக குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் மீண்டும் பாளையங்கோட்டை வந்தார். சுவாட்ஸ் குருவானவரின் அருளுரை கோகிலாவை முழுவதுமாக இயேசுவண்டை திருப்பியது. கோகிலா, தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவளாக வேண்டும் என்ற விருப்பத்தை சுவாட்ஸ் குருவானவரிடம் தெரிவித்தார். அப்பொழுது கிளாரிந்தாவின் நற்குணங்களையும் நற்செயல்களையும் இயேசுவின்மீதுகொண்ட பக்தி வைராக்கியத்தையும் பார்த்து 03/03/1778 அன்று அவருக்கு ராயல் குளோரிந்தா என்று ஞானஸ்நானம் கொடுத்தார். ஏனெனில் குளோரிந்தா மராட்டிய மன்னர்களின் பரம்பரையை சார்ந்தவர்களாய் இருந்ததினால் அவ்வாறு பெயரிடப்பட்டது. அப்போது அவருக்கு 32 வயதாகும். 

இந்த சூழ்நிலையில் 1779ம் ஆண்டு கர்னல் ஹென்றி லிட்டில்டன் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டியதிருந்தது. இங்கிலாந்து சென்று திரும்பி வருவேன் என்றவர் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்தில் சூலைநோயினால் வியாதிப்பட்டு மரித்துப்போனார். இதை சற்றும் எதிர்பாராத குளோரிந்தா அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. ஆயினும், என் காலங்கள் இயேசுவின் கரத்தில் இருப்பதால் நான் பயப்படேன் என்று கிறிஸ்துவுக்குள் தன்னை தேற்றிக்கொண்டாள். கர்னல் ஹென்றி லிட்டில்டன் மரிப்பதற்குமுன் தன் சொத்துக்கள் அனைத்தும் கோகிலாவுக்கே சொந்தம் என்று எழுதி மரித்ததினால் இப்பொழுது கோகிலா ஒரு பெரிய சீமாட்டி. கர்னல் வீட்டில் வேலைபார்த்த சமையல் பெண்ணின் மகனை தத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளையைப்போல் வளர்த்து கர்னல் ஹென்றி லிட்டில்ன் நினைவாக அவனுக்கு ஹென்றி என்று ஞானஸ்நானம் கொடுத்து தன் மகனாக்கிக்கொண்டார். 
 
இறைப் பணியில் குளோரிந்தா
திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவரான குளோரிந்தா அவர்கள் லிட்டில்டன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம் சுவிஷேச பணியை செய்வதற்கும் சமுதாய சேவை செய்வதற்கும் பயன்படுத்தினார். பாளையங்கோட்டை பகுதியில் பெண்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்த 2 ஆண்டிற்குள் 40 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆகவே இவர்கள் ஆராதிப்பதற்கு என்று ஒலைக்குடிசையினால் ஒரு சிற்றாலயத்தை கட்டினார். அங்கு பெண்களுக்கு தினமும் வேதத்தை கற்றுக்கொடுத்து அவர்களை தன்னைப்போல விசுவாசத்தில் பலப்படுத்தினார். இவருடைய பண்பும் அன்பும் அரிய உபதேசமும் அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தியது. அவர்கள் குளோரிந்தா அம்மையாரை பாசமாக பாப்பாத்தி அம்மா என்று அழைத்தார்கள்.
குளோரிந்தாவிடம் இருந்த பணத்தின் மூலமும் மற்றும் சில ஆங்கில அதிகாரிகளின் உதவியுடன் கட்டப்பட்ட பெரிய ஆலயத்தை 1785 ம் ஆண்டு குருவானவர் சுவாட்ஸ் அவர்கள் மூலமாய் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் 80 பேருக்கு நற்கருணை பறிமாறப்பட்டது. இதுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு என்று முதலாவது கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயம் அப்போது பாப்பாத்தி அம்மாள் கோவில் என்று அழைக்கப்பட்டது. இது இன்று குளோரிந்தா ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. நற்செய்திபணி மூலம் அநேக குடும்பங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே மீண்டும் குருவானவர் சுவாட்ஸ் அவர்களை அழைத்து 120 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. குளோரிந்தா அம்மையார் கல்வி அறிவு இல்லாத புது விசுவாசிகளுக்கு என்று 1787 ம் ஆண்டு ஒரு குடிசையில் பள்ளிக்கூடம் ஏற்டுத்தினார். இதுதான் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவ பள்ளிக்கூடம். அதுதான் இன்று இது தூய. யோவான் கல்லூரி அளவிற்கு உயர்ந்திருக்கின்றது.

1792 ம் ஆண்டிற்குள் 2000 த்திற்கும் அதிகமானவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த தஞ்சாவூரில் சபை ஊழியராக பணியாற்றிக்கொண்டிருந்த சத்தியநாதன் அவர்களை திருநெல்வேலி பகுதிக்கு அனுப்பிவைக்குமாறு குளோரிந்தா அவர்கள் சுவாட்ஸ் ஐயரை கேட்டுக்கொண்டார்கள். இதினிமித்தம் சத்தியநாதன் உபதேசியார் பாளையங்கோட்டை வந்தார். பின்னர் அவரை ஆங்கில குருவானவர்கள் ஜெனிக்கே மற்றும் கோலாப் ஐயர் முன்னிலையில் போதகராக சுவாட்ஸ் ஐயர் அபிஷேகித்தார்.

குளோரிந்தா அவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததினால் தைரியமாக பிராமண பெண்களிடம் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பேசி நற்செய்திபணியை அறிவித்ததினால் அநேக இந்துமத பிராமணர்களும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். குளோரிந்தா அவர்கள் தன்னோடு அநேக பெண்களை பயன்படுத்தி ஜாதி, மதம், இனம், குலம், ஆண், பெண் என்று பார்க்காமல் எல்லோருக்கும் சுவிஷேசம் அறிவித்ததினால் திருநெல்வேலி பகுதியில் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். 1802 ஆம் ஆண்டுக்குள் 5000 த்திற்கும் அதிகமானோர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

குளோரிந்தா அவர்கள் பிணியாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவிகளை செய்துவந்தார்கள். 
1810 ம் ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் குடி தண்ணீர் எடுப்பதை இந்துமத பூசாரிகள் எதிர்த்தார்கள். ஆகவே குளோரிந்தா அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று ஒரு கிணறு வெட்டினார்கள். அது இன்றுவரை பாப்பாத்தியம்மாள் கிணறு என்று அழைக்கப்படுகின்றது. இந்த கிணறு 190 ஆண்டுகளாக நல்ல தண்ணீர் கொடுத்து வருகிறது. இன்றும் அந்த கிணறு குளோரிந்தால் ஆலய வளாகத்திற்கு அருகில் இருக்கிறது.


இறுதிக்காலத்தில் குளோரிந்தா
ஆசாரம் மிக்க பிராமணக் குடியில் பிறந்து, சாதி ஆசாரங்களைத் தகர்த்து, ஏழை எளியவர்களுடன் சமமாக பழகி, அவர்களுக்கு பண உதவி அளித்து, அவர்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக உழைத்து, அக்கினியிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு கொள்ளி போல்  பிரகாச சுடராக, பல எதிர்ப்புகள், போராட்டங்கள் மத்தியிலும் கிறிஸ்துவுக்கு நல்ல போர்சேவகியாய் இருந்து அநேக ஆத்துமாக்களை ஆதாயமாக்கினார்கள். அந்த அம்மையாரின் மரணம் இன்னும் மர்மமாக இருக்கிறது. தன்னுடைய 60 ம் வயதில் 1806 ம் ஆண்டு இவ்வுலக ஓட்டத்தை நிறைவு செய்தார்கள். தண்ணீர் நிறைந்த ஒரு தடாகத்தில் அவருடைய சரீரம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அவருடைய சரீரம், குளோரிந்தா ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிறைவுரை
இன்று குளோரிந்தா அவர்கள் திருநெல்வேலி திருச்சபையின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்கள். திருச்சபை வரலாற்றில், தனக்கென ஒரு முத்திரையை பதித்த, குளோரிந்தா அம்மையார் திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் மூலைக்கல் மற்றும் விடிவெள்ளி என்றால் மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  குளோரிந்தா தினமாக ஆசரிக்கப்படுகின்றது. திருநெல்வேலி  கிறிஸ்தவத்தில் ஒரு எழுப்புதலையும், சமுதாய சேவையில் சரித்திரத்தையும், ஒரு பெண்ணாக சாதித்து காட்டியது இன்றைய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய முன்மாதிரி. 

Post a Comment

1 Comments

Anonymous said…
Glory to Jesus