ஆசீர்வதியும் கர்த்தரே என்ற திருமண பாடல் பாடப்படாத கிறிஸ்தவ திருமணங்கள் இல்லை எனலாம். அத்தகைய பிரசித்திபெற்ற பாடலை எழுதியவர் அருட்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள். இந்திய மிஷனரி சங்கத்தின் முதல் மிஷனரியான இவர் கருத்தாழம்மிக்க கீர்த்தனை பாடல்களை எழுதி பாடியுள்ளார். 1924 ஆம் ஆண்டு இவரது குமாரன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கும், பண்ணைவிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த அருட்திரு. டி. எஸ். டேவிட் ஐயரவர்களின் குமாரத்தியான சென்னை தூய எப்பா பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த யுன்ஸ் அவர்களுக்கும் விவாகம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பரிசுத்த விவாக ஆராதனை பண்ணைவிளை ஆலயத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மருதகுளத்திலிருந்து மணமகனின் உறவினர்கள், முந்தின நாள் பண்ணைவிளைக்கு வரும் வழியிலே, பெருங்குளத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள். உயர்சாதியினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய குளம் என்பதை இவர்கள் அறியாமல், அங்கிருந்த ஒரு குளத்தில் குளித்தார்கள். இதையறிந்த உயர்சாதியனர் இவர்களை சூழ்ந்து கொண்டு, பிரச்சனை செய்தனர். இந்த செயலால், குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், தங்கள் விக்கிரகங்களை அதில் இனி சுத்தப்படுத்த கூடாது என்றும் வாதாடினர். சிலமணி நேரத்திற்குள்ளாக இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் வந்து, சமாதானம் பேசி, மணமகன் வீட்டாரைப் பத்திரமாக வழியனுப்பி வைத்தனர்.
இந்த செய்தியானது மணமகனின் தந்தை Rev. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் செவியை எட்டின போது, மக்களின் கண்கள் அறியாமை என்னும் இருளால் குருடாக்கப்பட்டிருந்ததை எண்ணி வருந்தினார். அன்று முழுவதும் "வீசிரோ வான ஜோதி கதிரிங்கே" என்ற வரியை மீண்டும் மீண்டும் சொல்லி அசைப்போட்டுக் கொண்டிருந்தார். "இருளில் நடக்கிற மக்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி, உம் ஒளியை வீசச்செய்வீராக" என்பது அதன் அர்த்தம். அன்றைய தினம் சாயங்காலமே, முழுபாடலையும் எழுதி முடித்தார்.
மறுநாள் தன் மகன் திருமணத்தில் பாடி மகிழ்ந்தார். ஆசீர்வதியும் முழு பாடலையும் வாசிக்க click here
1 Comments