திருவருகைக்காலத்தின் முதலாம் ஞாயிறன்று, புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறந்த நாளுக்கு முன்வரும் நான்காம் ஞாயிறு கிறிஸ்தவ முறைமையின் புத்தாண்டு தினம் என்று கணக்கிடப்படுகிறது.
இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும். மொத்தம் 28 நாட்கள் (கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நான்காம் ஞாயிறு முதல் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வரை) ஆகும். வரலாற்றில் மனிதராகப் பிறந்த கடவுளின் மகனாகிய இயேசுவின் முதல் வருகையை சிறப்பிக்கவும், உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரவிருக்கின்ற இரண்டாம் வருகையை எதிர்நோக்கவும் தயாரிப்பு செய்கின்ற காலமாக அமைந்துள்ளது.
திருவருகைக்காலம் என்பது இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம். மேலும், கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம். காண முடியாத கடவுள் மனித வரலாற்றில் நுழைந்தார். ஒரு மனிதராக நம் நடுவே வாழ்ந்தார். இந்த மாபெரும் மறையுண்மையைக் கொண்டாடும் நாம், இயேசுவின் இரண்டாம் வருகைக்கும் நம்மைத் தயாரிக்க அழைப்பு விடுக்கும் காலம்தான் இத்திருவருகைக்காலம்.
*ஏன் அட்வெந்து ஞாயிறன்று செங்கரு நீல நிறம் (Purple Colour) பயன்படுத்தப்படுகிறது?* Click Here to Read
கிறிஸ்து எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என்றெண்ணிக் காலம் தாழ்த்தாம, கிறிஸ்து நமக்குள்ளே இருக்கிறார், நம் சகோதர, சகோதரிகளிட த்தில் இருக்கிறார் என்று உணர்ந்து வாழ அழைப்பு விடுக்கப்படுகிறது. நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டும் ஆண்டவர் நம்மிடையே மீட்பராக பிறக்க உள்ளார். விடுதலை உறுதி என நம்பிக்கை தருகின்ற வார்த்தைகளோடு திருவருகைக் காலத்தை பயனுள்ளதாக்குவோம்.
அன்று இஸ்ரயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக் கிடந்தனார். மெசியா நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று ஏங்கினர். அவர்களின் நம்பிக்கை பொய்க்காது என்று கூறி விடுதலை வாழ்வை வாக்களிக்கிறார் கடவுள்.
தொடக்கக் கால கிறித்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? என்பது தெரியாது. ஆனால் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதன் வழியாக நாம் கிறிஸ்துவை எதிர்கொள்ள முடியும்.
"மாரநாதா, ஆண்டவரே வருக" (1 கொரி 16:22): "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (வெளி 22:20) என்று திருச்சபை இயேசு கிறிஸ்துவைக் கூவி அழைக்கிறது. "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்” என்று திருச்சபை பறைசாற்றுகிறது.
இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? அந்த நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது (மத் 24:36), காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7), இறுதி நாள்களில் இயற்கையில் பல்வேறு குழப்பங்களும் கொந்தளிப்பும் நிகழும் என்பதை முன்னறிவித்து, எப்போதும் விழிப்பாக இருந்து மன்றாடும்படி, நற்செய்தியில் இயேசு கிறிஸ்து அறிவுறுத்துகிறார்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இக்காலம், இருளின் பிடியில் இருந்தும், அடிமையின் பிடியில் இருந்தும், அழிவில் இருந்தும், துன்பத்தல் இருந்தும் காத்துக்கொள்ள மானிட மகனை சந்திப்பதற்காக அவரை நம் உள்ளத்தில் ஏற்று அவரையே அணிந்து கொள்ள அழைக்கும் அன்பின் காலம். இஸ்ராயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்திருந்ததுபோல நாமும் காத்திருப்போம். விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்து தோழியர் உவமையில் அக்கன்னியர் காத்திருந்தனர். அவர்களை போல நாமும் விளக்குகள் ஏற்றி மணமகனின் வருகைக்காக நம்மையே தயார் செய்வோம்.
0 Comments