திருத்தூதர் அந்திரேயா (Apostle Andrew)
முதல் அழைப்பு பெற்றவர் (The First-Called)
கிறிஸ்துவை அறிமுகம் செய்தவர் ( Introduced Jesus)
நினைவுத் திருவிழா: நவம்பர் 30
பிறப்பு: கி.மு. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு - பெத்சாய்தா, கலிலேயா, ரோம பேரரசு (Bethsaida, Galilee, Roman Empire)
இறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி - பட்ராஸ், அச்சையா, ரோம பேரரசு (Patras, Achaia, Roman Empire)
சித்தரிக்கப்படும் வகை:
'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுருள்
யார் இந்த அந்திரேயா?
புனிதர் அந்திரேயா அல்லது புனிதர் பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்கள்) ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரரும், ஆவார். கிரேக்க மொழியில், 'ஆண்ட்ரெஸ்' என்றால் 'ஆண்மை' அல்லது 'பலம்' அல்லது 'வலிமை' என்பது பொருள். எனவேதான், தமிழில் இவரது பெயரை, 'பெலவேந்திரர்' என அழைக்கின்றோம். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் சீமோன் பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன்பிடி தொழில் செய்துவந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு சேர்ந்தார்.
திருமறையில் அந்திரேயா
இவரைப் பற்றிய குறிப்பு, நான்கு நற்செய்தி நூல்களிலும் வருகிறது. ஒத்தமைவு நற்செய்திகளில் (மாற்கு, மத்தேயு, லூக்கா) இவர் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் என்றும், சீமோன் பேதுருவின் சகோதரர் என்றும், இயேசுவின் முதற்சீடர்கள் இருவரில் ஒருவர் என்றும் அறிமுகப்படுத்துகிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இவரைப் பற்றிய குறிப்பு மூன்று இடங்களில் வருகிறது. இறுதிகால இயேசுவின் இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக ஒலிவ மலைக்கு (Mount of Olives) வந்த நான்கு சீடர்களுள் இவரும் ஒருவராவார்.
ஒன்று:
திருமுழுக்கு யோவானின் சீடர்களுள் ஒருவராக இருந்த அந்திரேயா (யோவான் 1), 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் கட்டளை கேட்டு அவருடன் சென்று தங்குகிறார். பின், தன் சகோதரர் பேதுருவையும் அழைத்துச் சென்று, இயேசுவிடம் அறிமுகம் செய்கின்றார்.
இரண்டு:
ஐந்து அப்பங்கள் ஐயாயிரம் பேருக்குப் பகிரப்படும் நிகழ்வில் (யோவான் 6), 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான்' என்று இளவல் ஒருவரை இயேசுவுக்கு அறிமுகம் செய்தது இவரே.
மூன்று:
கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக் காண விரும்பியபோது (யோவான் 12), அவர்களை, பிலிப்புடன் இணைந்து, இயேசுவிடம் கூட்டிச் சென்றார்.
திருத்தூத ஊழியத்தில் அந்திரேயா
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு (ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில் ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுவார். மேலும் இவரைப் பற்றிய செய்தி ‘அந்திரேயாவின் பணி’ என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.
அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும், இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும் அந்த நூலிலே படிக்கின்றோம். சித்தியாவில் நற்செய்தி அறிவித்த அந்திரேயா பத்தாரஸ் என்ற இடத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். அங்கே ஆளுநராக இருந்தவன் ஏஜெரஸ். அவருடைய மனைவி மாக்சிமில்லா தீராத நோயினால் படுத்தபடுக்கையாய் கிடைந்தபோது அந்திரேயா அவரைக் குணப்படுத்துகிறார். இதனால் மனமாற்றம் அடைந்த அவர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். இது பிடிக்காத அவருடைய கணவன் அந்திரேயாவை சிலுவையில் அறைந்து கொலை செய்யத் தீர்மானித்தான்.
புனிதர் அந்திரேயா, “மத்திய யூரேசியாவின்” (Central Eurasia) பிராந்தியமான “ஸ்கித்தியாவில்” (Scythia) பிரசங்கித்தார். கிரேக்க புராணங்களில் அறிவுமிக்க வயதான “நெஸ்டார்” (Nestor) எனும் அரசனின் காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்பின்படி, கருங்கடல் (Black Sea), “டினெபர் நதி” (Dnieper river) மற்றும் “உக்ரெய்ன்” (Ukraine) நாட்டின் தலைநகரான “கியேவ்” (Kiev) வரை அவர் பிரசங்கித்ததாகக் கூறுகிறார். அங்கு அங்கிருந்து வடமேற்கு ரஷியாவின் நகரான “நோவ்கோரோடு” (Novgorod) சென்றார்.
பாரம்பரியங்களின்படி, பின்னாளில் கி.பி. 38ம் ஆண்டுகளில், “கான்ஸ்டண்டிநோபில் மற்றும் இஸ்தான்புல்” (Constantinople and Istanbul) என்று அறியப்பட்ட, பண்டைய கிரேக்க நகரான “பைசான்டியம்” (Byzantium) கண்டடைந்தார். ரோம் கிறிஸ்தவ திருச்சபையின் மூன்றாம் நூற்றாண்டின் மிக முக்கிய இறையியலாலர்களில் ஒருவரான “ஹிப்போலிட்டஸ்” (Hippolytus of Rome) என்பவரின் கூற்றின்படி, அந்திரேயா பண்டைய தென்கிழக்கு ஐரோப்பாவின் புவியியல் மற்றும் சரித்திரவியல் பகுதியான “திரேஸ்” (Thrace) எனும் பகுதிகளிலும் பிரசங்கித்தார்.
இரத்த சாட்சியான அந்திரேயா
அந்திரேயா, கிரேக்கத்தின் பிராந்தியப் பகுதிகளுள் ஒன்றான “அச்சேயா” (Achaea) எனுமிடத்திலுள்ள “பட்ராஸ்” (Patras) நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அரையப்பட தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே “X” வடிவ சிலுவையில் தம்மை அரையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றும் “ஓ மாட்சிமை மிகுந்த சிலுவையே, உனக்காகத் தான் நான் இத்தனை நாள்கள் ஏங்கிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லி சிலுவைச் சாவை மிகத் துணிவோடு ஏற்றுக்கொண்டு கி.பி.70 ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உயிர்துறந்தார். பட்ராசில் (Patras) உள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இவருடைய விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இயேசுவை மெசியா என ஏற்று, அவரை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆவோம். ஆக, நாம் ஒவ்வொருவரும் இயேசுவை மெசியா என ஏற்று, அவர் காட்டும் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும். இறையருள் பெறுவோம்.
0 Comments