ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று திருவசனம் சொல்லும் முறை ஆரம்பிக்கப்பட்டது திருச்சபையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். அதன் வரலாற்றை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். click here to download pdf of 2022 Memory Verse Book of CSI Tirunelveli Diocese
திருநெல்வேலிச் சீமைக்கு வந்து அருட்பணியாற்றின தலைசிறந்த மிஷனெரிமாரில் ஒருவரான, பண்ணைவிளை மிஷனெரி மருத்துவர் ஜாண் தாமஸ் டக்கர் ஐயர். ஜெபமாந்தன், வேதவிற்பன்னன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவர் சங்கீதக்காரனைப்போல, வேதவசனங்களைத் தன் மனதில் வைத்து அவற்றைத் தியானித்துக்கொண்டேயிருப்பவர். ஏராளமான திருவசனங்களை அவர் மனப்பாடம்பண்ணியிருந்தார். தியானத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் பற்பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், தெய்வசித்தத்தை அறிந்து நடக்கவும், அவ்வசனங்கள் மிகுந்த பயனுள்ளவையாயிருந்ததையும் அவர் தன் அனுபவத்தில் நன்கறிந்திருந்தார்.
தன்னைப்போலவே தன் சபைகளிலுள்ள கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் வேத வசனங்களை மனப்பாடம் பண்ணவும், அவற்றை எந்நேரமும் தியானிக்கவும் நல்வாழ்க்கைக்கு அனுகூலமாக உபயோகிக்கவும் பழகவேண்டும் என்ற ஆசை அவருள்ளத்தில் வெகு நாளாயிருந்தது. ஆனால், அதை எப்படி நிறைவேற்றுவது என்பது தான் அவருக்குப் புரியவில்லை. பல நாட்களாய் அதுபற்றி யோசித்து அப்பிரச்னைக்கும் தீர்வு கண்டார். 1851-ம் வருட இறுதியில் அதின்படி அவர் தன் சபைகளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்தார். அஃதென்ன வெனில்:
1852 ஜனவரி முதலாம் ஞாயிறு முதல் சபையாரில் ஆண்களும் பெண்களும் ஆளுக்கொரு வேத வசனத்தை வாரத்துக்கொன்றாக மனப்பாடம் பண்ணவேண்டும். ஆராதனையில் இரண்டாம் பாடம் வாசித்து முடிந்ததும், ஒவ்வொருவராக எழுந்து நின்று, தான் அந்த வாரம் மனப்பாடம் செய்திருந்த திருவசனத்தை, அவ்வசனம் காணப்படும் ஆகமம், அதிகாரம், வாக்கியம் இவற்றோடு உபதேசியாரிடம் சொல்ல வேண்டும்.
துவக்கத்தில் சபையார் இம்முறையை விரும்பவில்லை. ஆனால் காலக்கிரமத்தில், திவ்விய வசனங்களை மனதில் தேக்கி வைப்பதின் சிறந்த நன்மைகளை, அனுபவத்தில் அறியவாரம் பித்தபின், அம்முறையை நன்குமதித்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். எவ்வளவு சிறந்த முறை?. இம்முறையின்படி, சபை மக்கள் ஒவ்வொருவரும் தன் தனக்குப் பிரியமான, குறைந்த பட்சம் ஐம்பத்திரண்டு திருவசனங்களையாவது மனப்பாடம் பண்ணிக்கொள்வார்களே!. டக்கர் ஐயரின் நம்பிக்கையும் அவர் எதிர்பார்த்ததும் அதுவே.
இன்றைக்கும் திருநெல்வேலி & துத்துக்குடி திருமண்டலங்கள் திருவசன ஊழியம் என்று வருடந்தோறும் புத்தகம் வெளியிடுவது சிறப்பான ஒன்றாகும். இன்றும் பல சபைகளில் அறிவிப்பு வேளையில் திருவசனம் சொல்லும் முறை உள்ளது. சில சபைகளில், முதல் மணி அடித்தவுடன் சொல்லும் முறை உள்ளது. ஆனால் சில சபைகளில் மட்டுமே குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது பாராட்டத்தக்கது. இதே போல அனைத்து திருச்சபைகளிலும் அனைவரையும் வசனம் சொல்ல உற்சாகப்படுத்தி நடைமுறைப்படுத்தினால் திருச்சபை வளர்ச்சிக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
0 Comments