Ad Code

இந்திய குடியரசு தின வரலாறு | Republic Day of India | ஜனவரி 26 January

குடியரசு (Republic) என்பது குடிமக்களாலான அரசு. அதாவது, அதாவது மக்களாட்சி என்று சொல்லலாம். வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். அதாவது, மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது. 
இந்திய குடியரசிற்கான அரசியலமைப்பு சட்டத்தை, முனைவர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கினார்கள். எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு 1950 ஜனவரி 26 அன்று நிறைவேற்றப்பட்டதாலும், காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தின்படி, முதற் சுதந்திர கொண்டாடப்பட்ட, 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையிலும் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும், அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும். மேலும் நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

Post a Comment

0 Comments