Ad Code

13. இதுவே மீட்பின் காலம் | Now is the Day of Salvation | திருமறை தியானம் | ரோமர் 13.11 Romans

தியானம் : 13 / 27.02.2022
தலைப்பு : இதுவே மீட்பின் காலம்
திருவசனம் : ரோமர் 13.11 "நித்திரையை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது."

முகவுரை

இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்; ஒவ்வொரு நேரமும் பொன்னான நேரம். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, வாழ்க்கையின் பயணம் அமைகின்றது. என் நாட்களை வீணாக்கி விட்டேன் என்று காலம் போன பின்னர் புலம்புவர்கள் அநேகர். ரோமர் 13.11 இல் பரிசுத்த பவுலடிகளார், நாம் நம் மீட்பின் காலத்தை சரியாக பயன்படுத்த அழைப்புக் கொடுக்கிறார். இந்த பகுதியில் அவர் கிறிஸ்தவரின் கடமைகளை (The Christian’s obligations) கற்றுக் கொடுக்கிறார்.

1. விழித்துக்கொள்ள வேண்டிய காலம்

நித்திரையை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று என்று பவுல் மீட்பின் காலத்தை சொல்லுகிறார். ஆம், துங்கிக் கொண்டிருக்கக் கூடிய காலமல்ல. ராஜாதி ராஜா இயேசு கிறிஸ்து எப்போது வருவார் என்று நாம் அறியாதிருக்கிறபடியினால், எப்போதும் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு தூங்கக்கூடாது என்பது பொருளல்ல. மாறாக எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

2. விழிப்போடு நடக்க வேண்டிய காலம்

நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி (விழிப் பாய்) நடக்க வேண்டும் என்று பவுல் மீட்பின் காலத்தை அடையாளப்படுத்துகிறார். இறுதிக் காலத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறபடியினால், இந்த நாட்களை வீணடிக்காமல், விழிப்போடு, ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். பாவத்தில் விழுந்து விடாதபடி விழிப்போடு நடக்க வேண்டும்.

3. விரைந்து செயல்பட வேண்டிய காலம்

அது நமக்கு சமீபமாயிருக்கிறது என்று பவுல் மீட்பின் காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார். இன்னும் கொஞ்சம் நாட்கள் போகட்டும், மாறுகிறேன் என்று காலத்தை தள்ளிபோடாது விரைந்து செயல்பட வேண்டும். பாவத்தை விட்டுவிட நாளை என்று காலம் தாழ்தக்கூடாது. நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறியோமே.

நிறைவுரை
"அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்..." என்ற பாடலை எழுதிய திரு. அற்புதராஜ் மர்காஷியஸ் அவர்கள் சிறுவயதில் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் கல்லூரி வாழ்வில் பாவங்களில் வீழ்ந்து, கடவுள் நம்பிக்கையற்றவரானார். மீண்டும் சிலுவையின் அன்பை புரிந்து கொண்டு, கடவுளின் பிள்ளையாக, ஆசிரியப்பணியோடு ஊழிமமும் செய்தார். இதை வாசிக்கும் நீங்கள் இதுவே மீட்பின் காலம் என்றுணர்ந்து,
   என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
   எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
   நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
 உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
என்று சொல்லி அர்ப்பணியுங்கள். இறையாசி உங்களோடிருப்பதாக.

Post a Comment

0 Comments