Ad Code

10. கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவோர் பேறுபெற்றோர் | டே. ஜோன்ஸ் ராஜாசிங் | Blessed are those who Persecute for Christ's Sake | மத்தேயு 5.11-12 Matthew

கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவோர் பேறுபெற்றோர் 

 டே. ஜோன்ஸ் ராஜாசிங் B.A.,                         BD - 4, ஐக்கிய வேதாகம கல்லூரி (UBS), புனே.  

 மருதடியூர், திப்பணம்பட்டி சேகரம்    CSI திருநெல்வேலி திருமண்டலம்

 

click here to download pdf of Meditation 10

தியான பகுதி:                மத்தேயு 5:11-12 “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.”

 

முகவுரை


இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் போதித்த கொள்கைகளில் ஒன்று கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுவோர் பாக்கியவான்கள். இயேசு மக்களுக்கு தன்னிமித்தமாய் வருகின்ற நிந்தனைகள், துன்பங்கள் மற்றும் அவதூறுகள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற அழைப்பைக் கொடுக்கிறார். காரணம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற உலகத்தில் (1 யோவான் 5:19) கிறிஸ்துவைப் போல் நீதியைப் பேசும்போது அல்லது நீதி செய்யும்போது பாடுகள் வருவது இயல்பு. ஆனால் அதில் நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

 

விளக்கவுரை

 

கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தனைகள் (νειδίσωσιν - oneidisōsin - Insults), துன்பங்கள் (διώξωσιν - diōxōsin - persecute) மற்றும் அவதூறு (πονηρν - ponēron - slander) குறித்து சொல்லப்ட்படுள்ளது. தீமையான மொழிகளை சொல்லுதல் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான அறிக்கையை வெளியிடுவதாகும். இவற்றையெல்லாம் செய்யும் பொழுது நாம் இயேசுவை விட்டுவிடுவோம் என்று உலக மனிதர்கள் நமக்கு நெருக்கம் கொடுப்பார்கள். ஆனால், நாம் அதை மகிழ்ச்சியோடு எற்றுக்கொள்ள வேண்டும். சந்தோஷப்பட்டு களிகூருதல் என்பது மனதில் அமைதியோடு, மனக்கவலையின்றி, ஆண்டவரிடத்தில் மனமகிழ்ச்சியாக இருப்பதாகும்.

 

எவை சரியான பாடுகள் என்று புரிந்துகொள்ள எவை பாடுகள் அல்ல என்று பேதுரு தெளிவாக சொல்லியுள்ளார். “உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது. மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்” (1 பேதுரு 4:15-16).

 

நமக்கு மட்டும் இந்த பாடுகளல்ல. நமக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர்களும் பாடநுபவித்தார்கள் என்று இயேசு சொல்லுகிறார். “நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்” (மத்தேயு 23.35).

 

மத்தேயு 26 ஆம் அதிகாரத்தில் இயேசுவைப் பிடித்து பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு கொண்டு வந்த போது, பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவிற்கு விரோதமாக பொய் சாட்சிகளை தேடினார்கள் மற்றும் அநேகர் வந்து பொய் சாட்சி கூறினார்கள் (Slanders). மத்தேயு 27 ஆம் அதிகாரத்தில் தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் இயேசுவை வாரினால் அடித்து, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவரை அடித்து துன்பப்படுத்தினார்கள் (Persecution). அவர் வஸ்திரங்களை கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, யூதருடைய ராஜாவே வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி அவரை நிந்தித்தார்கள் (Insults). இந்த சமயத்திலேயும் இயேசு இவை அனைத்தையும் எற்றுக்கொண்டு, தந்தையின் சித்ததையே செய்துமுடித்தார்.

 

இதன் மூலமாக இயேசு நமக்கு கற்று கொடுத்திருப்பது, இயேசுவின் கட்டளையில் நாம் பிரியமாயிருந்து அதை கைக்கொண்டு (மத்தேயு 5:11). கிறிஸ்துவினிமித்தம் பாடுபட்டால் பாக்கியவான்களாவோம்; அதாவது கொடுத்து வைத்த வாழ்க்கை என்று எண்ணவேண்டும். மேலும், பூலோகத்தில் துன்பங்களோடு வாழ்ந்தாலும், பரலோகத்தில் கடவுள் தரக்கூடிய பலன் (μισθς – misthos – reward / wages) மிகுதியாயிருக்கும் (மத்தேயு 5:12).

 

முடிவுரை:

 

ஆகவே நம்மை மனிதர்கள் நிந்திக்கும் (Insults) போதும், துன்பப்படுத்தும் போதும் (Presecute) மற்றும் அவதூறு பரப்பும் போதும் (Slander) நமது அணுகுமுறை எப்படியிருக்கிறது என்று சிந்திதுப் பார்ப்போம். 1941 ம் ஆண்டு வில்லியம்ஸ் மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மகனாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள், 1965 ம் ஆண்டு ஒரிஸ்சாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பாரிபாடா என்ற பகுதிக்கு வந்து அங்கிருந்த ஆதிவாசி மக்கள் மத்தியில் தங்கி இருந்து தொழுநோயாளிகளுக்கு சேவைசெய்யவும் நற்செய்திபணி அறிவிக்கவும் வந்தார். 34 வருடங்களாக இந்தியாவிலே சேவை செய்துக் கொண்டிருந்த கிரகாம் ஸ்டெயினை கொலை செய்யும்படி 50 பேர் கொண்ட வன்முறை கும்பல், கோடாரிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களோடு, அவர்கள் இருந்த வாகனத்தை அடித்து நொறுக்கி வாகனத்தை தீ வைத்ததில், அவரும், அவருடைய இரண்டு பிள்ளைகளும் வாகனத்திற்குள்ளேயே தீயினால் கரிக்கட்டையாகி போனார்கள். இந்த சம்பவத்தைக் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவருடைய மனைவியினிடத்தில் கேட்டபோது, அவர் மனைவி கூறியது, நான் இவர்களை மன்னிக்கிறேன், இவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்று சொல்லி இந்த நிந்தனைகள், துன்பங்கள், அவதூறுகளின் மத்தியிலே வெட்கப்படாமல் மனமகிழ்ச்சியோடு எற்றுக்கொண்டு அதினிமித்தமாக இறைவனை மகிமைப்படுத்தினார்கள்.

 

இதைத்தான் பேதுரு சொல்லுகிறார்: (1 பேதுரு 4:16) நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். (1 பேதுரு 2:21) கிறிஸ்து, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கடவுளை மகிமைப்படுத்த ஆசி வழங்குவாராக.


Post a Comment

0 Comments