உள்ளத்தால் விபசாரமா?
ரா.கிறிஸ்து ராசையா B.A, சிவசலையனூர், புலவனூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.
click here to download pdf of Meditation 18
தியான பகுதி: மத்தேயு 5: 27 – 30
27விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 29உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 30உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
முகவுரை
பாவங்களில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று கூற முடியாது. கடவுளின் திருமுன் சிறியதோ, பெரியதோ பாவம் பாவமே. எனினும், மனிதருள் குறிப்பாக யூதருக்குள் மிகமோசமான நடவடிக்கையாகக் கருதப்படும் விபசாரம் எனும் பாவச்செயலைக் குறித்தும் இச்சையின் பலனையும், இவற்றிலிருந்து விடுபடும் வழியையும், பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், பரிசுத்தப்படுத்துகிறவருமாகிய நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் மலைப்போதனையிலிருந்து தியானிப்போம்.
விபசாரம்
விபசாரம் என்பது நியமிக்கப்பட்டத் துணையோடு அல்லாமல் வேறொருவரோடு திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ வைக்கப்படும் உறவு. இது சட்டரீதியாகவும் தவறு. வேதமும் இதனை கடுமையாக எதிர்க்கிறது. எனவே தான், கடவுள் திருச்சட்டங்களுள் ஒன்றாக இதனை வைத்துள்ளார். யாத்திராகமம் 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக. இது வெளிப்படையான ஒரு செயல். யூத மரபில் விபசாரம் ஒரு கொடிய பாவம் எனக் கருதப்படுகிறது (The Great Sin). யூதர்கள் மூன்று விதமான பாவத்தைக் கொடிய பாவம் என்பர். விக்கிரகம், விபசாரம் மற்றும் கொலை. இந்த பாவத்தைச் செய்பவர் கண்டிப்பாகக் கொலை செய்யப்படவேண்டும் (லேவியராகமம் 20:10).
இச்சை
இச்சை என்பது பேரார்வம், ஏக்கம், அடைய வேண்டும் என்கிற மோகம் அல்லது பேராசையைக் குறிக்கும். மூல மொழி ஆதாரங்களைப் பார்க்கும்போது Longing for அதாவது ஒரு பொருளின் மீதோ, ஏதோ ஒரு நபர் மீதோ ஏக்கம் கொள்ளுதலைக் குறிக்கிறது. இச்சை பாவம் செய்வதற்கான ஆரம்ப நிலை ஆகும். விபசாரம் செய்யத் தூண்டும் ஆசையாகும். விபசாரம் மட்டுமல்ல எந்த ஒரு செயலையும் சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ அடைய வேண்டும் என்கிற பேரார்வத்தைக் கொடுப்பது தான் இச்சை.
இச்சையும் விபசாரமும் ஒன்றே
இயேசுகிறிஸ்து தன்னுடைய போதனையில் இச்சையோடு ஸ்திரீயைப் பார்ப்பதே, விபசார பாவம் (மத்தேயு 5:28) எனக்கூறக் காரணம் என்னவென்றால், பழைய ஏற்பாட்டு ஆணாதிக்கக் காலத்திலும் சரி, புதிய ஏற்பாட்டில் பரிசேயரின் காலத்திலும் சரி, ஒரு பெண் வைக்கும் தவறான உறவே விபசாரம் ஆகும். அதுவே ஒரு திருமணமான ஆண், திருமணமாகாத பெண்ணோடு உறவு வைத்திருப்பது பெரிய குற்றமாகக் கருதப்படவில்லை. இதனை இயேசு உடைத்தெறிந்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை உணர்த்தினார். மேலும் விபசாரம் வெளிப்படையான செயல். இச்சை இதயத்தில் செய்யப்படும் செயல். வெளிப்படையாக செய்வதுதான் தவறு எனக்கருதின பரிசேயரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதற்குச் சான்றாக ஒரு பரிசேயன் தன் ஜெபத்தில் (லூக்கா 18:11) “விபசாரக்காரரையும்” எனக் குறிப்பிடுவதில் வெளிப்படையாக செய்வது மட்டும் தான் தவறு என அந்தப் பரிசேயன் எண்ணியது புலப்படுகிறது. ஆகவே தான் இயேசு, அகத்திலும் சரி புறத்திலும் சரி, தவறாக நினைப்பதும் பாவம், தவறு செய்வதும் பாவம் என உணர்த்துவதற்கு இச்சையோடு பார்த்தாலே விபசாரம் எனக்கூறினார். இதுதான் உண்மையும்கூட, இச்சை என்பது விபசாரம் செய்யும் வேராக இருந்து, விபசாரச் செயலை வெளிப்படுத்துகிறது.
“Adultery is an Explicit Act of Sin
Lust is an Explicit Root of Adultery”
விடுதலைக்கான வழி
மத்தேயு 5:29,30 இந்த இரண்டு வசனங்களிலும் இயேசுகிறிஸ்து இச்சை, விபசார பாவம் செய்யாமலிருப்பதற்கான வழியை நமக்கு காண்பிக்கிறார். இந்த வசனங்களை வாசித்து விட்டு அதன் அர்த்தத்தை அதில் சொல்லியிருக்கிறப் பிரகாரமாக நாம் புரிந்துவிடமுடியாது. இந்த வசனங்களில் ஆண்டவர் சில உதாரணங்களையும், சில உருவகங்களையும் யூத மரபில் செய்யப்படும் தண்டனைகளை வைத்து நமக்கு சொல்லியிருக்கிறார். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தை “நரகம்” என்பதின் கிரேக்க பதமான Υξνναν Gi-Henna நேரடி மொழிபெயர்ப்பு இன்னோம் பள்ளத்தாக்கு (யோசுவா 15:8) ஆகும். இது அடையாளமாக நித்திய தண்டனைக்குரிய இடமான நரகத்தைக் (Figuratively used for evarlasting punishment) குறிக்கிறது. ஏன் ஆண்டவர் இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிப்பிட வேண்டும்?
இன்னோம் பள்ளத்தாக்கு (Valley of Hinnom) என்பது இந்த பள்ளத்தாக்கு எருசலேமிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருக்கும் மலைப்பகுதியின் பள்ளத்தாக்கு ஆகும். யூதர்கள் இந்த இடத்தில் தான் தவறு செய்பவர்களுக்கு குறிப்பாக விபசாரம் செய்பவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவர். மூன்று விதத்தில் தண்டனை கொடுக்கப்படும். முதல் தண்டனை மலையிலிருந்து கீழே தள்ளிவிடுவர். இரண்டாவது தண்டனை குற்றம் சாட்டப்பட்டவர்மீது மார்பைக் குறிவைத்துக் கல்லுகளை எறிவர். அப்படியும் அவர் சாகவில்லை என்றால் பார்வையாளர்களை வைத்துக் கல்லுகளை எறிய வைப்பர். இதனைத் தான் ஆண்டவர் உன் சரீரம் முழுவதும் இப்படி அழிவதைப் பார்க்கிலும், உன் சரீரத்தின் ஒரு உறுப்பு அழிவது நல்லது என உதாரணமாகக் கண் மற்றும் கையைக் கூறி, அதனைத் தரித்துப் போடு என்கிறார்.
முடிவுரை
வெளிப்படையான செயல் மட்டுமல்ல, உள்ளத்தில் தோன்றும் தவறான சிந்தை, இச்சை யாவும் விபசார சிந்தைக்குச் சமம். நமது சரீரத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பரிசுத்தமானதாகக் காத்துக்கொள்ள வேண்டுமென்பதே இறைவனுடைய சித்தமாயிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலும் கொலோசெயர் திருச்சபைக்கு இதே வார்த்தையைச் சொல்லி கடிந்துகொள்வதைக் கொலோசெயர் 3.5 இல் வாசிக்கமுடிகிறது. நாம் நமது மாம்சத்தின் ஆசை இச்சைகளையும், உலக இச்சைகளையும் சிலுவையிலறைந்து (கலாத்தியர் 6:14) கிறிஸ்துவின் சிந்தையோடு, அவரின் அச்சடையாளங்களைத் தரித்துக்கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரத்தை பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்துக்கொண்டு, அவரின் அச்சடையாளங்களைத் தரித்துக்கொள்வோம். கடவுள் நம்மை இப்படிப்பட்ட பாவச் சிந்தையிலிருந்து விலக்கி, பரிசுத்தப் பாதையில் நடத்தி, ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
2 Comments