விவாகரத்து பண்ணலாமா?
தா. ரெபின் ஆஸ்டின் B.A, சிவசைலயனூர், புலவனூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.
தியான பகுதி: மத்தேயு 5:31 - 32
31தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. 32நான் உங்களுக்குச் சொல்கிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலோழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.
விளக்கவுரை
இயேசுகிறிஸ்து இந்த இரண்டு வசனங்களில் விவாகரத்தைக்குறித்து கற்றுக்கொடுக்கிறார். ஏனென்றால், பழைய ஏற்பாட்டுக்காலத்தில் விவாகரத்து என்பது, எவ்வாறுப் பார்க்கப்பட்டதென்றால், கணவன் என்பவர் தன் மனைவியை எந்த விஷயத்துக்காகிலும் விவாகரத்துப் பண்ணலாம். ஏனென்றால் கணவனாருக்கு மட்டுமே விவாகரத்து செய்யும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த கணவன் தன் மனைவியின் மீது சிறு சந்தேகம் கொண்டாலும் விவாகரத்து பண்ணிவிடும் நிலையிருந்தது. இந்த சிறு காரியம் என்பது தன் மனைவியானவள் வேறு எந்த நபரிடமோ அல்லது வேறு ஆண் நபரிடமோ பேசினாலோ விவாகரத்துச் செய்யலாம். அது மாத்திரமல்ல, மனைவியானவள் தன தலையின் முடியை வெளிபுறமாக பிறர் காணும்வண்ணம் வைத்திருந்தாலும்கூட விவாகரத்து செய்யப்படுவர்.
இதனை மாற்றுவதற்காகத்தான் மோசேயின் காலத்தில், ஒரு நபர் விவாகரத்து செய்யவேண்டுமெனில் பயன்படுத்தக்கூடிய தள்ளுதற்சீட்டை குறித்து மோசே கற்பித்த நியமமாவது (உபாகமம் 24.1-4): ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவியாகலாம். இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடும்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும்.
மத்தேயு 5:32 – ம் வசனத்தில் ஒருவர் தன் மனைவி மீது சிறு சிறு குற்றங்களை சுமத்தி விவாகரத்துச் செய்யலாகாது. மாறாக, தன் மனைவி விபசாரம் செய்வதை கணவனார் பார்த்தாலோ அல்லது இந்தக் காரியத்தில் மட்டும் அவருக்கு தன் மனைவி மீது நம்பிக்கை இல்லாத மனம் இருக்குமாயின் மாத்திரம் விவாகரத்துப்பண்ணலாம். அதுவும் கூட மன்னிக்கமுடியுமாயின் மன்னிக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையென்றால் விவாகரத்து செய்யலாம் என்று இயேசு கூறுகிறார்.
இயேசுகிறிஸ்துவின் இந்த போதனையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து தள்ளுதற்சீட்டைக் கொடுத்து விவாகரத்துப் பண்ணலாமா என்ற கேள்வியை கேட்டனர் (மத்தேயு 19.07; மாற்கு 10.4). ஆனால் இயேசுகிறிஸ்து அதற்கு கூறிய பதில் என்னவென்றால், மோசே காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரக் காரணம் ஜனங்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொடக்க காலத்தில், கடவுள் மனிதனை உண்டாக்கும் காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை என்று மத்தேயு 19:4-6 ஆம் வசனங்களில் இயேசு கூறுகிறார்.
திருத்தூதர் பவுல் திருமணமானவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, புருஷன் - மனைவியை விட்டு பிரியக்கூடாது என்கிறார். அவர் இந்த ஆலோசனையை கர்த்தர் சொன்னார் என்று தைரியமாக குறிப்பிடுகிறார் (1கொரி 7). அதனால் தங்களுடைய சொந்த இச்சையை நிறைவேற்றுவதற்காக தன் மனைவியை விவாகரத்து பண்ணிவிட்டு இன்னொருவருடன் திருமணம் செய்ய இயேசுகிறிஸ்து அனுமதி அளிக்கவில்லை. எனவே, விபசாரம் செய்திருந்தாலோழிய மற்ற எந்த காரணத்திற்காகவும் விவாகரத்து செய்யக்கூடாது.
சிந்தனைக்கு…
கடவுள் ஆதிகாலத்தில் மனிதனை ஒன்றாயிருப்பதற்குத் தான் உண்டாக்கினார். அந்த மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடு ஒன்றாயிருக்க வேண்டும் என்பதைத் தான் ஆதியாகமம் 2:24 இல் பார்க்கிறோம். ஆகவே திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் மனைவியோடு இருப்பதற்கான அர்ப்பணிப்பு. கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கின்றனர். எனவே விவாகரத்தை இயேசுகிறிஸ்து விரும்பவில்லை. கிறிஸ்தவ தம்பதிகள், இது என்னுடைய தனிப்பட்ட வாழ்வு. என் முடிவு அல்லது என்னுடைய பெற்றோர் சொன்னார்கள், நான்கு பெரியவர்கள் நியாயம் பேசி தீர்மான எடுத்ததாகும் என்றெல்லாம் கூறி விவாகரத்திற்கு காரணம் கூறக் கூடாது. இதைக்குறித்து என் கர்த்தர் என்ன சொன்னார் என்பதுதான் நமது முடிவாக இருக்கவேண்டும் எல்லோரும் குடும்பமாக கணவனும் மனைவியுமாக இணைந்து ஒன்றாய் வாழ்வதைத்தான் கடவுள் விரும்புகிறார்.
|
0 Comments