Ad Code

20. சத்தியம் பண்ணலாமா? ரா. கிறிஸ்து ராசையா | Shall we Swear? மத்தேயு 5.33-37 Matthew

சத்தியம் பண்ணலாமா?

ரா. கிறிஸ்து ராசையா B.A,                             சிவசைலயனூர், புலவனூர் சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்

 BD - 3, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.          

 

click here to download pdf of Meditation 20

தியானப்பகுதி: மத்தேயு 5:33-37

33அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாகிலும் வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. 37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.


முகவுரை

நமது அன்றாட வாழ்வில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்கின்ற ஒரு காரியமாக சத்தியம்பன்ணுதல் இருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று எண்ணலாம். அதன் உள்ளான விளக்கத்தை இயேசுகிறிஸ்து போதித்த நோக்கத்தின் அடிப்படையில் தியானிப்போம்.

 

தெளிவுரை

சத்தியம்பண்ணுதல் (ὀμνύω – omnuó – swear) என்பது ஆணையிடுதல் (Oath), வாக்குக்கொடுத்தல் (Promising) போன்றதாகும். அதே நேரத்தில்,  ஆணையிடும்போது, அந்த உறுதிக்கூறல் உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் மாற்றும் அபாயம் உள்ளது.  பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் சரி, புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து வாழ்ந்தக் காலத்திலும் சரி ஆணையிட்டுக்கூறுவது எனபது பொதுவான ஒன்றாகும். ஆதிக்காலத்தில் ஆபிரகாம் மற்றும் யோசேப்பின் நாட்களில் தாங்கள் ஆணையிடும் காரியத்தில் உண்மை இருந்ததை இவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை வாசிக்கும்போது அறிய முடிகிறது. நியாயப்பிரமாணத்தின் நாட்களில், மக்கள் தாங்கள் ஆணையிடும் காரியம் குறித்து சற்றும் யோசிக்காமல், மனம் பதறி அதாவது நன்மையா தீமையா என்றும் கூட யோசிக்காமல் ஆணையிடுகிறதை குறித்து லேவியராகமம் 5:4 ல் வாசிக்கிறோம். தாங்கள் கண்ட செயலைக் குறித்தோ, செய்த செயலைக் குறித்தோ சாட்சியாகக் கூறும்போது கடவுளின் பெயரில் (லேவியராகமம் 19:12) ஆணையிட்டுக்கொடுத்தால் அது உண்மை ஆகி விடும் என்கின்ற மாயையானப் பிம்பம் ஒன்று மக்களின் மனதில் பதிந்துவிட்டது. அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவை மறுதலித்து பேசும் மூன்றாவது தருணத்தில், தான் இயேசுவோடு வாழவில்லை, அவரை தெரியாது என சத்தியம்பண்ணத் தொடங்கியதை நாம் அறிந்திருக்கிறோம் (மத்தேயு 26:74; மாற்கு 14:71).

 

மனம்பதறி செய்யும் இச்செயல் தீமை என்பதனை உணருவதற்குத் தான் சத்தியம்பண்ண வேண்டாம் என்று இயேசுக் கட்டளையிடுகிறார் (மத்தேயு 5:34). இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டு சட்டத்தை சுட்டிக்காட்டும்போது மத்தேயு 5:33 ல் பொய்யாணையிடாமல்  எனக் கூறப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். கடவுளின் பெயரிலோ, அவர் உண்டாக்கிய பொருளின் பெயரிலோ, மனிதன் பெயரிலோ ஆணையிடுவது தவறு என்று இயேசு தெளிவாகக் கூறினார் (மத்தேயு 5:34-36). ஏனென்றால், உலகத்தில் நாம் ஆணையிடும் எப்பொருளையும் நாம் உண்டாக்கமுடியது. வானம், பூமி என்று இயற்கையை ஆதாரமாக வைத்து ஆணையிடுவதால் நாம் அதை உண்டாக்கிய கடவுள் மீது சத்தியம்பண்ணுவதாக இயேசுக் கூறுகிறார்.

 

இயேசு கிறிஸ்து சில சான்றுகளை இங்கு கொடுக்கிறார். கடவுளின் அரியணையாகிய விண்ணுலகின் மேல் ஆணையிட வேண்டாம். அவரின் கால்மணையாகிய மண்ணுலகின் மேல் வேண்டாம். பேரரசரின் நகரமாகிய எருசலேம் மேலும் வேண்டாம். தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. இந்த எடுத்துக்காட்டுகளின் வாயிலாக கடவுளுக்கு முன்பாக நாம் எதையும் மறைக்கமுடியாது என்பதையும், அவர் நமக்கு மேலானவர் என்பதையும் மற்றும் அவரை மிஞ்சி நம்மால் எதையும் செய்ய முடியாது என்பதையும் வலியுறுத்துகிறார். அப்படி செய்து நாம் நம்முடைய கருத்தை சாத்தியப்படுத்த முயற்சிப்பது கடவுளை அவதூறுப்பண்ணும் செயல். ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது. எனக் கூறுகிறார் (மத்தேயு 5:37).

 

நிறைவுரை

தான் செய்தக் காரியத்தை செய்யாததாகவும், செய்யாதக் காரியத்தை செய்ததாகவும் சித்தரித்துக் கூறி சத்தியம் செய்து தப்பிப்பது எனபது இன்றைக்கு எளிதாகிவிட்டது. அப்போஸ்தலனாகிய யாக்கோபு தன்னுடைய கடிதத்தில், யாக்கோபு 5:12 – ல் வானம், பூமி மற்ற எதன்பேரிலும் சத்தியம் செய்தால் நமக்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டு என்றுத் தெளிவாகக் கூறுகிறார். நாம் மற்றவர்களோடு உண்மையைப் பேசுவோம். தெரிந்தவற்றை தெரியும் என்றும், தெரியாதவற்றை தெரியாது என்றும் கூறுவோம். நமது சுய இச்சைக்காக, சுய ஆதாயத்துக்காக இதனை மாற்றி அமைத்து சத்தியம் செய்வதை தவிர்ப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.         

                                                                           




Post a Comment

0 Comments