தூயவுள்ளத்தோர் பேறுபெற்றோர்
கா. ஜெபரூபன். BE (BD – 1) மேட்டூர் சேகரம்
CSI திருநெல்வேலி திருமண்டலம்
ஐக்கிய இறையிய கல்லூரி , பெங்களூர்.
click here to download pdf of Meditation 07
தியான வசனம்: மத்தேயு 5:8 " இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இறைவனைத் தரிசிப்பார்கள்."
முகவுரை
இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றின சீடர்களையும் மக்களையும் பார்த்து சொன்னது: "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்." பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவராகிய கடவுள் (யாத்திராகமம் 15:11), அவரைப் பின்பற்றுகிறவர்களும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். “உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவியராகமம் 19:2). கர்த்தருடைய பர்வதத்தில் அவரை தரிசிக்க செல்ல, இருதயத்தில் மாசில்லாமல் இருக்க வேண்டுமென்று தாவீது சங்கீதத்தில் (24.4) சொல்லியிருக்கிறார்.
இருதயத்தில் தூய்மை (Purity in the Heart)
சரீரத்தின் அவயவங்களில் எல்லாவற்றைப் பார்க்கிலும், இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது (எரேமியா 17:9). நோவா காலத்தில் வாழ்ந்த மனிதர்களைக் குறித்து கடவுள் சொல்லுகிறார் “அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே” (ஆதியாகமம் 6:5). இயேசுகிறிஸ்துவின் காலக்கட்டத்தில் வாழ்ந்த யூத தலைவர்கள் தங்களை வெளிப்புறமாக சுத்தமுள்ளவர்களாக காண்பித்தார்கள். மனிதர்களுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிற, பொல்லாத சிந்தனைகள், கொலைபாதகங்கள், களவுகள், பொய்ச்சாட்சிகள், தூஷணங்கள், மனிதனை தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:18, 19) என்று அவர்களை எச்சரித்தார். இயேசுகிறிஸ்து இறையரசின் குடிமக்கள் உட்புறத்தில் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். இத்தனை எதிர்மறையான சிந்தனைகளை உடையதும், திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிற இருதயத்தில் கடவுள் ஏன் தூய்மையை எதிர்பார்க்கிறார்?
இருதயத்திற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறது. “அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்” (2 கொரிந்தியர் 1:22). ஆவியென்னும் அச்சாரமானது, நாம் ஆவியின் சிந்தை உடையவர்களாக, ஆவிக்குரியவைகளை நடப்பிக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய இருதயதங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரோமர் 8:5 சொல்லுகிறது, “ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.” இருதயம் மற்றும் மூளை ஆகிய இரு அவயவங்களும் முறையே மனிதனின் சிந்தனைகளிலும், சிறந்த முடிவுகளை எடுப்பதிலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இருதயத்தின் நினைவுகளும், சிந்தனைகளும் தூய்மையாக, பரிசுத்தமாக ஆவிக்குரியவைகளாக இருந்தால், நம்மால் கடவுளுக்குப் பிரியமாக வாழ முடியும்.
மாறாக, இருதயமானது மாம்ச சிந்தை கொண்டதாகக் காணப்பட்டால், நாம் மாம்சத்திற்குரியவர்களாக மாம்சத்தின் படி நடக்கிறவர்களாக இருப்போம் (ரோமர் 8:5). இருதயம் எண்ணற்ற சிந்தனைகளைக் கொண்டதாகவும், நன்மையான மற்றும் தீமையான சிந்தனைகளை உடையதாகவும், இரு மனமுள்ளதாகவும் காணப்படுகிறது. அதாவது மாம்ச சிந்தையும் ஆவியின் சிந்தையும் ஒரு சேரக் கொண்டதாகக் காணப்படுகிறது. ஆனால், அது ஆவியின் சிந்தையை மட்டும் உடையதாக இருக்கவேண்டும்.
பாக்கியம் & இறைதரிசனம் (Blessedness & Experiencing God)
கடவுள் விரும்புகின்ற பரிசுத்தம் நம்முடைய இருதயத்தில் காணப்பட வேண்டும். அப்படி இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பேறுபெற்றவர்கள், பாக்கியவான்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். எபிரெயர் 12.14 சொல்லுகிறது, “அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்.” அதாவது தூய்மையள்ளவர்களிடம் கடவுள் வெளிப்படுகிறார். இறைதரிசனம் என்பது நேரடியாக காண்பதென்று சொல்ல இயலாது. பிதாவை ஒருவனும் கண்டதில்லை என்று வேதம் (யோவான் 1.18) சொல்லுகிறது. மோசேக்குத் தம் பின்புறத்தை காண்பித்தது தவிர (யாத்திராகமம் 24.10), பழைய ஏற்பாட்டிலும் கடவுள் தம்மை முழுமையாக காண்பிக்கவில்லை. ஆனால், கடவுளின் செயல்பாடுகளைக் காண முடியும். மேலும் அவரோடு சிறந்த அனுவமும் கிடைக்கிறது. விசுவாசத்தினாலே அதரிசனமானவரைத் தரிசிக்கிறோம் (எபிரெயர் 11.27). விண்ணரசில் நாம் அவரை தரிசிக்க முடியும் (வெளி 22.4).
சிந்தனைக்கு…
யாக்கோபு 3:11ல் "ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?" என்று திருத்தூதர் யாக்கோபு கேள்விக் கேட்பதைப் பார்க்கிறோம். நம் இருதயமாகிய ஊற்றுக்கண் எந்த நிலையில் உள்ளது. அது இருமனமுள்ளதாக, தனது வழிகளிளெல்லாம் நிலையற்றதாக, அல்லது தூய்மையற்றதாக உள்ளதா? யாக்கோபு 5:8ல் “இரு மனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். கடவுளை அணுகிச் செல்லுவதற்கும், கடவுள் நம்மை அணுகி வருவதற்கும் (யாக்கோபு 5:8), கடவுளைக் காண்பதற்கும் (மத்தேயு 5:8), இறையரசில் பங்குபெறுவதற்கும் உளத்தூய்மை தேவை. தாவீதைப் போல "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்" (சங்கீதம் 51:10) என்று வேண்டிக்கொள்வோம். தூய்மையான உள்ளத்தோடு வாழ்வோம். இறையாசி உங்களோடிருப்பதாக! ஆமென்.
.
0 Comments