சமாதானம் பண்ணுவோர் பேறுபெற்றோர்
அ. யோசுவா ராபின்சன் B.A, BD - 1, செராம்பூர் கல்லூரி, செராம்பூர். மாங்குளம், கோடன்குளம் சேகரம்
CSI திருநெல்வேலி திருமண்டலம்
click here to download pdf of Meditation 08
தியான வசனம்: மத்தேயு 5: 9 “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இறைவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”
முகவுரை
இன்று உலகில், நாடுகளுக்கிடையே சண்டைகள், போர்கள், இனக்கலவரங்கள், தனிமனித போராட்டங்கள் என்று மனித வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும், சமாதானம் இல்லாத நிலையை நாம் காண முடிகிறது. இதனால் மக்களிடையே ஒருபுறம் பகையும், வெறியும் நிலவுகிறது. மற்றொருபுறம் பயமும், திகிலும் சூழ்ந்துள்ளது. ஏன் திருச்சபையிலும் சமாதானக்குலைச்ச்லுக்கு குறைவில்லை. .காரணம் கடவுளோடுள்ள உறவு மனுக்குலத்திடம் சரியாக இல்லை. உலகில் நிலவி வரும் இந்த சமாதானமற்ற நிலையில், சமாதானம் அளிப்பவர்களாக (εἰρηνοποιός - eirénopoios – Peace) இறையரசின் குடிமக்கள் இருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் – கடவுளின் மக்கள்
சமாதானம் பண்ணுதல் எப்படி என்பதை கிறிஸ்தேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் ஊழியகாலத்தில், செலாத்தே என்னப்பட்ட யூதப்பிரிவினர் (Revolutionary Group), கடவுளின் புத்திரராகிய தாங்கள் தான், கடவுளின் அரசை தங்கள் இராணுவ முறைமைகள் மூலம் கொண்டுவர முடியுமென்று அவ்வாறே செயல்பட்டனர். அவர்களுக்கு எதிராக இயேசு இந்தக் கருத்தை பதிவு செய்தார். சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் சமாதான காரணராக சமாதானம் பண்ணுகிறவராக வாழ்ந்தார். அதில் முக்கியமாக இரு அம்சங்கள் உள்ளன.
1) கடவுளுக்கும் மனிதருக்குமிடையேயான சமாதானத்தை ஏற்படுத்துதல்: பவுலடிகளார் சொல்லுகிறார்: (எபேசியர் 2.16-18) “(இயேசு)தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.” (கொலோசெயர் 1:20) “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை (εἰρηνοποιός - eirénopoios – Peace) உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
2) மனிதருக்கும் மனிதருக்குமிடையேயான சமாதானத்தை ஏற்படுத்துதல்: இயேசுகிறிஸ்து மக்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், ப்ரிவினைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார். அதை செயல்வடிவமாக்கி வாழ்ந்தும் காண்பித்தார். இதற்கு உதாரணமாக, இயேசு சமாரிய பெண்ணை சந்தித்தது, சகேயுவின் வீட்டிற்கு சென்றது, என சொல்லிக்கொண்டே போகலாம்.
“சமாதனத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்” (மத்தேயு 10.34) என்று இயேசு சொன்னது இதற்கு எதிர்மறையாக இருக்கலாம். ஆனால் இந்த வசனத்தின் பின்ணனியைப் பார்க்கும்போது, மனிதர்கள் முன்பாக கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை அறிக்கை செய்வதால் ஏற்படும் சூழ்நிலை சார்ந்து சொல்லப்பட்டுள்ளது.
இவ்விதமாக, அமைதியை ஏற்படுத்துவோர் நம் தந்தையாம் கடவுளின் புத்திரராவர் (Sons of God). கிறிஸ்துவில் இருக்கும் பண்புகள் அவரது பிள்ளைகளிடத்திலும் இருக்க வேண்டும். நம்முடைய செயல்பாடுகள் நம்மை பிரதிபலிக்கும்; நாம் யாரென்பதை வெளிப்படுத்தும். ஆகவே கடவுளின் பிள்ளைகளுக்குரிய குணாதிசயங்களோடு வாழ்வோம்.
சிந்தனைக்கு....
இறைமக்களாகிய நாம் ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழவும், சமாதானத்தை உண்டுபண்ணவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வீட்டில், தெருவில், ஊரில், படிக்கின்ற அல்லது பணிபுரியும் இடத்தில் சமாதானத்தை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
சபைக்குள்ளாக சமாதானத்தை உண்டாக்க வேண்டும். அதாவது, பிரிவினையற்ற சூழல் உண்டாக்க வேண்டும். சபைக்குள்ளாக காணப்படும் ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளாக நாம் ஒன்று என்ற சிந்தையில் வாழ வேண்டும் வேண்டும் (கொலோசெயர் 3:11). உங்கள் சபையில் நீங்கள் சமாதானம் பண்ணுகிறவரா? அல்லது சமாதானக்குலைச்சலுக்கு காரணரா? சிந்தித்துப் பாருங்கள்.
தற்போதைய சூழலில், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழுகின்ற ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெறுவதைக் குறித்து நாம் கேள்விபடுகிறோம். மற்ற உலக நாடுகள் இதுகுறித்து குரல் கொடுக்கின்றன; அல்லது அமைதி காக்கின்றன. எத்தனை நாடுகள் துணிந்து தீர்வு காண முன்வந்துள்ளன என்று சிந்தித்து பார்ப்போம்.
சமாதான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி சமாதானம் பண்ணுகின்ற கடவுளின் பிள்ளைகளாக இந்த உலகில் வாழ்ந்து காட்டுவோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
0 Comments