நீதிக்காகத் துன்புறுவோர் பேறுபெற்றோர்
பே. மான்சிங் கிளிண்டன் M.A, (BD – 1) குருக்கல் இறையியல் கல்லூரி, சென்னை. மஞ்சுவிளை சேகரம், CSI திருநெல்வேலி திருமண்டலம்
click here to download pdf of Meditation 10
தியான வசனம்: மத்தேயு 5:10
“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.”
முகவுரை
தத்துவவியலாளர் ஜான் லாக் என்பவர் தனது சகிப்புத்தன்மை தொடர்பான ஒரு கடிதத்தில் "நீதிக்காக துன்புறுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்படுவார்கள்" என்று இயேசுவின்அடுக்கு சொற்றொடர் போதனையிலிருந்து (மத்தேயு 5:3−11 ) மேற்கோள் காட்டியுள்ளார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய பாதையில் ஒரு மலையின் மேல் ஏறி ஜனங்களுக்கு சொன்னது: “நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (Blessed are they which are persecuted for righteousness sake).
விளக்கவுரை
நீதியினிமித்தம் துன்பப்படுவது என்பது உண்மையாய், உத்தமனாய், நேர்மையாய், நன்மை செய்கிறவர்களாய் வாழுவதினால் சந்திக்கின்ற பிரச்சனைகள் மற்றும் உபத்திரவப்படுவதாகும். அதனிமித்தம் தங்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது என்பது கடவுளை சார்ந்து வாழ்கின்ற வாழ்வாகும். நீதி என்பது δικαιοσύνης - dikaiosünēs – Righteousness / Justice Praticize the Justice). துன்புறுதல் என்பது (δεδιωγμένοι - dediōgmenoi – Persecution) குறிக்கும்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக சொன்னது: (2தீமோத்தேயு 3:11) "அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் இறைபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்". இறைபக்தி என்பது கடவுளுக்குப் பிரியமாக நீதியின் வழியில் நடப்பதாகும். குறிப்பாக கிறிஸ்து கற்பித்த இறையரசின் (Values of God’s Kingdom) நெறிமுறைகளில் வாழ்வதாகும்.
ஆதியாகமம் 39 ஆம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, யோசேப்பு உண்மையாய் பாவம் செய்யாமல் வாழ்ந்ததினிமித்தம் அவன் சிறைச்சாலையில் காவல் பண்ணப்பட்டான், துன்பப்பட்டான் என்று அறிகிறோம். ஆனால் ஒருநாளில் கர்த்தர் அவனை எகிப்து முழுமைக்கும் அதிகாரியாக வைத்தார். ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 41:43)
பாக்கியவான்கள் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். முதல் திருவருட்பேற்றில், இயேசு சொன்னது போல, இந்த கடைசி திருவருட்பேற்றிலும் சொல்லுகிறார்: “பரலோகராஜ்யம் அவர்களுடையது” இங்கு அவர் இறையரசின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்துதல் 7.14 இல் வாசிக்கிறோம். ‘யோவான் அவரிடம், "என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது; "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.’
சிந்தனைக்கு…
நீங்கள் உத்தமனாய் வாழ்ந்து நன்மை செய்கிறனிமித்தம் நீங்கள் பாடுபடலாம், உபத்திரவப்படலாம்; சோர்ந்துபோகாதிருங்கள். ஏனென்றால், நீங்கள் தான் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திருத்தூதர் பேதுரு அடிகளாரும் சொல்லுகிறார்: “கடவுள் மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்” (1 பேதுரு 2:19); "நீங்கள் நன்மை செய்து பாடுபடும் போது பொறுமையோடே சகித்தால் அதுவே கடவுளுக்கு முன்பாக பிரீதியாயிருக்கும்" (1பேதுரு 2:20பி). கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
0 Comments