Ad Code

புனிதர் பேட்ரிக் வரலாறு | History of the St. Patrick, the Apostle of Ireland |



ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமன்-பிரிட்டானியா கிறிஸ்தவ மறைப்பணியாளரான பேட்ரிக் பிரிட்டனிலுள்ள ஓர் உயர்குடியில் கல்போனியஸ் - கோன்செஷ்சா ஆகிய பெற்றோருக்கு மகனாக, 390 ஆம் ஆண்டு பிறந்தார். பேட்ரிக் சிறுவயது முதல் கடவுள் மீது பக்தியில்லாமலே வாழ்ந்து வந்தார். இவருக்கு 16 வயது நடந்துகொண்டிருந்தபோது அயர்லாந்தை சேர்ந்த சில முகமூடிக் கொள்ளையர்கள் இவரைக் கடத்திச் சென்று, அங்கே இருந்த ஒரு கனவானிடம் விற்றுவிட்டார்கள். அங்கே கனவானிடம் இருந்த ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் எல்லாம், போதிய உணவில்லாமல், சரியான ஆடையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.

ஒருநாள் பேட்ரிக், கடவுளை மறந்து இப்படி வாழ்ந்ததனால் தான், இந்த நிலைமை என்று மனம் வருந்தி அழுதார். அதனால் அன்றிலிருந்து அவர் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அவர் அங்கிருந்து தப்பித்து, சொந்த நாட்டுக்குப் போகும்படியாக வந்தது. எனவே, அவர் தான் வேலைபார்த்துக் கொண்டிருந்த கனவானிடமிருந்து தப்பித்து, ஒரு கப்பல் வழியாக தன்னுடைய சொந்த நாட்டிற்குச் சென்றார். தன்னுடைய பெற்றோர்களோடு அங்கே மகிழ்ச்சியாக இருந்தார்.

அவருக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவர் குருவாகப் படித்து பிரான்ஸ் நாட்டில் சில காலம் பணிசெய்தார். ஒருநாள் அவருக்கு மீண்டும் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அவரை அணுகிவந்து, “எங்களுடைய நாட்டிற்கு வந்து கிறிஸ்துவைப் பற்றி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். கனவிலிருந்து விழித்தெழுந்த பேட்ரிக், அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் ஜெலஸ்டின் என்பவரைச் சந்தித்து தன்னுடைய கனவை, விருப்பத்தை எடுத்துரைத்தார். இதற்கிடையில் ஏற்கனவே அயர்லாந்து நாட்டிற்கு மறைபோதகப் பணியை ஆற்றச் சென்ற பலேடியஸ் என்பவர், அங்கு பல்வேறு எதிர்ப்பு வந்ததால் நாடு திரும்பி இருந்தார். இப்போது பேட்ரிக் அயர்லாந்துக்குச் சென்று, மறைபோதகப் பணியை ஆற்றப் போவதாகச் சொன்னதைக் கேட்டதும் அவர் பெரிதும் மகிழ்ந்து போனார். எனவே திருத்தந்தை பேட்ரிக்கை உளமகிழ்வோடு அனுப்பி வைத்தார்.

பேட்ரிக் கப்பில் பயணம் செய்துசெய்து அயர்லாந்தில் உள்ள தென்பகுதிச் சென்றார். தென்பகுதியில் இருந்த மக்கள் அவரை விரட்டிவிட்டார்கள். எனவே அவர் வடபகுதிச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் அவர் மன உறுதியோடு இருந்து பணிசெய்தார். ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைத்தார். நோயாளிகளைக் குணப்படுத்தினார். பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை அளித்தார். இறந்த ஒன்பது பேரை உயிர்த்தெழச் செய்தார். இப்படியாக அவர் அயர்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் படிப்படியாகப் பரவுவதற்குக் காரணமாக இருந்தார்.

பேட்ரிக் அயர்லாந்தில் உள்ள சால் என்ற பகுதியில் நற்செய்திப் பணியை ஆற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு அங்கே இருந்த மக்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. ஒருசமயம் மக்கள் அவரிடம் “நீர் போதித்துக்கொண்டிருப்பது உண்மையான கடவுள்தான் என்பதை எங்களுக்கு நிருபித்துக்காட்டும்” என்றார்கள். உடனே அவர் அருகே இருந்த 'ஷாம்ராக்' என்ற பாறையைச் சுட்டிக்காட்டி, இந்த ஒரு பாறையிலிருந்து மூன்று பாறைகள் தோன்றியிருக்கின்றன. இந்தப் பாறை மூவொரு கடவுளான தந்தை, மகன், தூய ஆவியைச் சுட்டிக்காட்டுகிறது” என்றார். இதைக் கேட்டு அவர்கள் மலைத்துப் போனார்கள். இச்செய்தி அங்கிருந்த அரசரின் காதுகளை எட்டியது. அவன் புனித பேட்ரிக்கை, தன்னுடைய ஆளுகைக்குள் உட்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் போதித்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவருக்கு அனுமதி அளித்தார்.

அயர்லாந்தில் வேற்று தெய்வ வழிபாடு அதிகமாகவே இருந்தது. எனவே புனித பேட்ரிக் அதனைத் துணிவோடு எதிர்கொண்டு வெற்றிகொண்டார். அயர்லாந்து நாட்டில் பேட்ரிக் நற்செய்திப் பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது, மக்களில் ஒருசிலர் அவரிடத்தில் வந்து, "நச்சுப் பாம்பில் தங்களுக்கு அதிகமான தொல்லைகள் ஏற்படுவதாகக்" கூறினார்கள். அவர் கடவுளிடத்தில் மன்றாடிய பிறகு நச்சுப் பாம்புகளின் தொல்லைகள் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள்.

இவருடைய பணிகளைப் பார்த்த திருத்தந்தை மேலும் மூன்று கர்தினால்களை அங்கு அனுப்பி வைத்து, அவருக்குப் பேருதவியாக இருக்கச் செய்தார். பேட்ரிக் செய்த மிகச் சிறப்பான காரியம், அந்த நாட்டிலேயே குருக்கள், துறவறத்தாரை தோன்றச் செய்து அந்நாடு முழுவதும் நற்செய்தி பரவக் காரணமாக இருந்தார். இதற்காக அவர் பலமுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ்துவின் மீது கொண்ட பற்றினால் எல்லாவற்றையும் மிகவும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய உடல், பொருள் ஆவி அத்தனையும் அயர்லாந்து மண்ணில் நற்செய்தி பரவுவதற்காக அர்ப்பணித்தபேட்ரிக் சுமார் 72 ஆம் வயதில் இந்த மண்ணுலக வாழ்வு விட்டு மார்ச் 17, 461 மற்றும் 464க்கு இடைபட்டகாலத்தில் அயர்லாந்திலுள்ள கவுண்டி நகரத்தில் இயற்கை மரணமாக பிரிந்து சென்றார். இவரே அயர்லாந்தின் அர்மாகி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் எனக் கூறப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டு முதலே அயர்லாந்தின் பாதுகாவலர் என்னும் பட்டத்திற்காக இவர் வணக்கம் செலுத்தப்பட்டார் எனச் சான்றுகள் உள்ளன. கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள், கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் சமூகம் மற்றும் லூதரன் சபை போன்றவற்றால், புனித பேட்ரிக்கின் நினைவுத் திருநாள், ஆண்டுதோறும் இவரின் இறந்த நாளான 17 மார்ச் அன்று கொண்டாடப்படுகின்றது.

Post a Comment

0 Comments