Ad Code

15. எப்படி போதிக்க வேண்டும்? | பா.ரெகுபென் சுந்தர் | How to Preach? | மத்தேயு 5.19 Matthew

எப்படி போதிக்க வேண்டும்? 

   பா. ரெகுபென் சுந்தர் B.Sc,                                     பங்களாசுரண்டை சேகரம்

    CSI திருநெல்வேலி திருமண்டலம்    BD - 1, ஐக்கிய வேதாகம கல்லூரி, புனே.       

 

click here to download pdf of Meditation 15

தியான வசனம்:  மத்தேயு 5.19          

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய்க் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

 

தியானம்

போதித்தல் அல்லது பிரசங்கம் பண்ணுதல் என்பது மிக முக்கியமான அங்கமாகும். இதற்கு தகுதி வேண்டும் என்றெல்லாம் பலர் நினைப்பது உண்டு. இன்றையக் காலத்தில் போதகம் பண்ணுவதற்கு மக்கள் எவ்வாறெல்லாம் மதிப்பெண் கொடுக்கின்றனர் என எதிர்பார்ப்பதும் உண்டு. பலவிதமான அடிப்படைக்கூறுகள் இந்த கலையில் இருப்பினும், இயேசுகிறிஸ்து சொன்ன, போதகம் பண்ணுதலில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தன்மையைத் தியானிப்போம்.

 

ஆகையால் என்று இந்த வசனம் தொடங்குவது, இந்த வசனத்திற்கும் அதற்கு முன்னுள்ள வசனங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை புரிந்துகொள்ள முடியும். மத்தேயு 5.17-18 வசனங்களில் வரும் இறைவார்த்தையின் முக்கியத்துவத்திற்கு மெருகூட்டும் வண்ணம் 19ஆம் வசனத்தில் அவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டியவற்றின் நெறிமுறையைக் கற்றுக்கொடுக்கிறார்.

 

மத்தேயு 5:19 இல் இயேசு சொல்கிறார், போதகம் பண்ணுகிறவன் அதனை கடைபிடித்து சொன்னால் பெரியவனாயிருப்பான் என்கிறார். இங்கு போதித்தல் என்பது ஏதோவென்றை சொல்வது போல் இயேசுவைப் பற்றி கூற வேண்டும் என நினைப்பது உண்டு. ஆனால் அதைக் காட்டிலும் மேலானது போதகம். போதகம் என்கிற பதத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க மொழி பதத்தின் அர்த்தம் (διδάσκω – didaskó – to learn, to teach) கற்றுக்கொண்டு கற்பி எனலாம். போதித்தல் என்பது கற்றுக்கொடுப்பதாகும்.

 

கடைபிடித்து (ποιέω – poieó – Keep) என்று சொல்லும் போது, அதாவது ஒரு காரியத்தை செய்வதற்கு நம்முடைய உடலளவிலும், மனதளவிலும் நாம் கொடுக்கும் பங்காகும். இயேசுகிறிஸ்து, இங்கு நமக்கு தெளிவாக கற்றுத்தருகிற காரியம், நாம் பிரசங்கிக்கும் முன் அல்லது பிரசங்கத்தில் சொல்ல வரும் காரியத்தை நமது மனதும் உடலும் கடைப்பிடித்திருக்க வேண்டும். எனவே போதகம் பண்ணுமுன் அதனை கடைபிடித்து போதகம் பண்ண அழைக்கப்படுகிறோம்.

 

குறிப்பாக சிறிய கட்டளை தானே என்று எண்ணி, அதையும் கடைபிடிக்காமல் மீறி, போதித்தால், இறையரசில் சிறியவர் என்று பின்னுக்குத் தள்ளப்படும் நிலை தான் கிடைக்கும். இது இறையரசிற்கான தகுதியிழப்பைக் (Disqualified for God’s Kingdom) குறிக்கிறது. தங்களை இறையரசிற்குரியவர்களாக கருதிய, ஆசாரியர்கள் பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் வேதபாரகர்களை இயேசு தம் ஊழியத்தில் எச்சரித்தை நற்செய்தி நூல்களில் வாசிக்க முடியும். லூக்கா 11.46 ஐ வாசிக்கும்போது, “அதற்கு இயேசு: "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.” ஏனென்றால் அவர்கள் மக்களுக்குப் போதித்ததில், விரலளவிற்குக்கூட கடைபிடிக்கவில்லை.

 

சிந்தனைக்கு…

சுருங்க சொன்னால். “கற்றுக்கொண்டு கடைப்பிடித்து கற்றுக்கொடு.”  ஆம். இது தான் கடவுள் நம்மில் எதிர்பார்க்கக்கூடிய போதக முறைமையாகும். இதைத் தான் பவுலடிகளாரும் பின்பற்றினதாக சொல்லுகிறார் (1 கொரி 9.27): “பிறருக்கு பிரசங்கம் பண்ணுகிற நான்தானே தகுதியற்றவனாக (Disqualified) மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.” பிரசங்க பீடத்தில் நின்று, பிறரிடம் கேள்விகள் எழுப்பும் நாமே, நம்மிடம் கேள்விக்கணைகளைத் தொடுப்போம். ஆவியானவர் துணையோடு நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, சீரமைப்போம். ஆண்டவர் நமக்கு உதவி செய்து வழிநடத்துவாராக, ஆமென்.





Post a Comment

1 Comments

Anonymous said…
Very useful. Thank u