யாரடா நீ? இப்படியும் வாழ முடியுமா?
ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன் உனது வாழ்க்கையை பார்த்து... யார் என்று நீங்களும் தெரிந்து கொள்ள வாசியுங்கள் வாசகர்களே....!
விசாரிக்கப்படவேண்டியவன் அவன்...
ஆனால் அவன் மற்றவர்களை விசாரிக்கிறான்!
மன விசாரத்தில் இருக்க வேண்டியவன் அவன்...
ஆனால் மற்றவர்களின் மன விசாரத்தை உற்றுநோக்குகிறான்! பிரச்சனைக்கு(சொப்பனத்துக்கு) தீர்வு கொடுக்க ஒருவரும் இல்லை என்ற இருவரின் கூக்குரலுக்கு...! "ஒருவர் உண்டு நிச்சயமாய் ஒருவர் உண்டு அவர் என்னிடம் உண்டு" என்கிறான் யோசேப்பு. சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது அல்லவா...! உங்கள் சொப்பனத்தை என்னிடம் சொல்லுங்கள்! இன்று உனது பிரச்சினைக்கும் தீர்வை தேவன் மட்டும் தானே சொல்ல முடியும்! இவனது பிரச்சினைகள் மலைபோல் குவிந்து இருக்க.. இவன் மற்றவர்களின் காரியங்களை கேட்டு விசாரித்து, அதற்கு பதிலையும் சொல்கிறான்!
இவனது மலைபோல் பிரச்சனை தான் என்ன? அதையும் தான் பார்ப்போமே..! அண்ணன்மார்கள் பகைக்கிறார்கள்! அப்பாவின் பாசம் ஒருபுறம்... அவர் கொடுத்த பல வர்ண அங்கி ஒருபுறம்..! இதையெல்லாம் பார்த்த சகோதரர்கள் அவனைப் பகைத்தார்கள்..! சரி போகட்டும் அவனிடம் தோன்றின சொப்பனத்தை சொன்னதினிமித்தம் இன்னும் அதிகமாய் பகைத்தார்கள்.. பிரச்சனை பெரிதாகிறது... ஆடு மேய்க்கும் அண்ணன்மார்களை பார்க்க யோசேப்பு சீகேமிற்கு செல்கிறான்..! தூரத்திலிருந்து பார்த்த அண்ணன்மார்கள் அவனைக் கொலை செய்யவும் துணிந்தனர். அடப்பாவிகளா அவன் உங்களது தம்பி அடா.. இந்த எண்ணம் அவர்களில் யாருக்கும் மேலோங்கவில்லையே... காரணம் சொப்பனமே..!! அவர்கள் சொன்ன வாக்கியம் இதோ நாம் அவனைக் கொன்று இந்த குழிகள் ஒன்றிலே போட்டு ஒரு துஷ்ட மிருகம் அவனை பட்சித்தது என்று சொல்வோம். வாருங்கள் அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் என்று பார்ப்போம் என்றார்கள்..! இத்தோடு அவன் பாடு தீர்ந்ததா என்ன.. இனி தானே பிரச்சனை சூறாவளி போல பெரிதானது..! அவனைை குழியில் போட்ட அண்ணன்மார்களிடமிருந்து யூதாவோ அவனை விடுவித்தான். பின்பு அவனை இஸ்மவேலரிடம் விற்பணை செய்தனர். விலைமதிப்பில்லாத உயிரை 20 காசுக்காக வாடா விற்று போட்டீர்கள்..!
எனது ஞாபகம் என் நேசர் இயேசுவின் மேல் போகிறது..! அடேய் யூதாசே குற்றமில்லாத இரத்தத்தை 30 காசுக்காகவா காட்டிக் கொடுத்தாய்..! அவர் உனது மணவாளன் அடா..! அவர் உன்னை சினேகிதனே என்றல்லவா கூப்பிட்டார்..! அப்பொழுதும் உன் மனம் அவர் பக்கம் திரும்பவில்லையோ..! அவர் உனது கால்களையும் அல்லவோ கழுவினார்..! யூதாசே உன்னிடம் என்ன சொல்லுவேன் நான்..! உன்னை பார்த்து கல்நெஞ்சன் என்று சொல்வேனோ.. இல்லை என்றால் என் கடவுளின் திட்டம் என்று சொல்வேனோ.. நான் என்ன சொல்வேன்... சரி...! இயேசு யோசித்தது போலவே யோசேப்பும் யோசித்து இருப்பானோ என்னவோ...! நமது அண்ணன்மார்கள் தானே என்று ஒரு மனம் சொல்ல.. எனக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று மறுமனம் சொல்ல அவனது மனம் என்ன பாடு பட்டதோ.. அவனுக்கும் கடவுளுக்கும் தானே தெரியும்...
இந்த மீதியானியர் போத்திபாரிடம் யோசேப்பை விற்று விட்டனர்..! போத்திபாரின் வீட்டிலாவது அவனுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இருந்ததா என்ன? ஆறுதல் சொல்ல ஆளில்லை... அவனை அடைவதற்கு நித்தமும் ஒரு திட்டம் தான் ஒருத்தியாள் தீட்டப்பட்டது..! அந்தத் திட்டம் ஒருநாள் நடந்துவிடும் என்று நப்பாசையில் "அவள்" அவனைப் பற்றிக் கொள்ள அவனோ தெறித்து ஓடினான்..! அவள் கையில் தன் வஸ்திரத்தையும் விட்டு விட்டு... அவன் ஒன்றும் சிம்சோன் அல்ல, தெலீலால் மடியில் படுத்து கிடந்து கானம் பாட..! அவன் ஒன்றும் தாவீது அல்ல, மற்றவனின் மனைவியை உரிமை கொண்டாட...! அவன் ஒன்றும் நம்மை போன்றும் அல்ல (சமயத்திற்காக காத்திருப்பவன் அல்ல) யாராவது கிடைப்பார்களா தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள என்று..! அவன் யோசேப்பு அல்லவா அவன் வாய்ச் சொல்லை போல வாழ்ந்தும் காட்டினான்..! என்ன அவனது சொற்கள் இதோ..!
இந்த வீட்டிலே எண்ணிலும் பெரியவன் இல்லை நீ அவருடைய மனைவியாக இருக்கிறபடியால் உன்னை தவிர வேறொன்றையும் விலக்கவில்லை இப்படி இருக்க நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி? என்றானே அந்த உத்தமபுத்திரன்..!!
இப்படி இருக்க தான் செய்யாத குற்றத்திற்காக அவன் சிறையில் இருக்க..! தாங்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் இருவரின் முன்பு இப்பொழுது யோசேப்பு அடடா..! இவர்களது சொப்பனம் அவனை என்னவெல்லாம் சிந்திக்க வைத்திருக்கும் டேய் இங்கேயும் சொப்பனமா! நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் இந்த சொப்பனம் தானடா என்று அவர்கள் மீது வெறுப்பை காண்பிக்கவில்லை..! மாறாக அவன் அவர்களை விசாரித்து சொப்பணத்தை கேட்டு அதற்கு விடையையும் சொன்னான்..! அவன் சொன்ன வார்த்தையின் படியே இருவருக்கும் நடைபெற்றது..! தன் பிரச்சனையை விட மற்றவனது பிரச்சனை சிறியதாக இருந்தாலும் அதையும் விசாரித்து அதற்கு ஒரு பதிலை தேவனிடம் கேட்டு சொன்னான் யோசேப்பு....! என்ன டா இப்படி எல்லாம் வாழவும் முடியுமா என்று வாயில் கை வைக்கும் அளவுக்கு வாழ்ந்தவன் அல்லவா அவன்....
"குழியில் போட்டனர் அண்ணன்மார்கள்! பழியை போட்டாள் போத்திபாரின் மனைவி!
சிறையில் போட்டான் அவனது எஜமான்!
கடைசியில் கர்த்தர் அல்லவோ சிங்காசனத்தில் வைத்தார்"!!!
இன்றைக்கு பிரச்சினைகள் நிறைந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்களும் இல்லை என் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இல்லாத மனிதனும் இல்லை...! மானிடா அன்பு தேவ பிள்ளைகளே மாறுவோம் யோசேப்பை போல..! உங்கள் பிரச்சனை பெரிதுதான் இல்லை என்று நான் சொல்லவில்லையே ..! ஏற்ற நேரத்தில் தேவன் அதற்கு ஒரு பதிலை ஒரு முடிவை ஏற்படுத்துவார் ..! உன் பிரச்சனைக்காக மற்றவர்களை கவனத்தில் கொள்ளாமல் விட்டு விடாதே..! ஏனெனில் கிறிஸ்தவத்தின் தன்மையும் ஏன் கிறிஸ்துவின் தன்மையும் அது தானே தேவன் உனக்கு உதவட்டும்..!தேவை நிறைந்த உலகில் இன்றைய தேவை யோசேப்பே.. அந்த யோசேப்பு நீதானோ?
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2.4
Prepared by
Mr. Aravind
Theological Student, UBS
0 Comments