தலைப்பு : திருமறையைக் கற்றுத்தரும் உயிர்த்த கிறிஸ்து
திருவசனம் : லூக்கா 24.27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். உயிர்த்த இயேசு கிறிஸ்து தரிசமான சம்பவங்களில் ஒன்று தான், 'எருசலேமில் இருந்து எம்மாவூர் சென்ற' பதினொருவரல்லாத இரு சீடர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியதாகும். இந்த நிகழ்வும் தொடர்ந்து வரும் நிகழ்வும் திருமறையின் முக்கியத்துவத்தை மிக தெளிவாக கற்றுத் தருகிறது.
1. திருமறை உணர செய்கின்றது
எம்மாவூர் சென்ற சீடர்கள், தங்களுடன் வருவது இயேசு என்று அறியாமல், இயேசுவுக்கு நடந்த காரியங்களை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே செல்லுகையில், இயேசு அவற்றைக் குறித்துக் கேட்கையில் இன்னும் அதிகமாக அதைப் பற்றி பேசினர். இயேசுவோ, புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்கள் (லூக்கா 24.26) என்று சொல்லி தம்மைக் குறித்து வரும் வேத வாக்கியங்களை விளக்கினார். அப்போது அவர்கள் இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது (24.32). ஒரு வித்தியாசத்தை உணர ஆரம்பித்தனர் என்று சொல்லலாம்.
2. திருமறை பின்மாற்றத்தைத் தடுக்கின்றது
இயேசுவின் சீடர்களாகிய இவர்கள், ஏன் எருசலேமில் இருந்து எம்மாவூர் செல்ல வேண்டும்? கல்லறையில் இயேசுவைக் காணவில்லை என்று அறிந்த பிற்பாடு தான் இந்த பயணம் ஆரம்பிக்கிறது (24.24). மிகுந்த பயத்துடன் தங்களை காப்பாற்றிக் கொள்ள எருசலேமை விட்டு வெளியேறி்யிருக்க அதிக வாய்ப்புண்டு. இதைத் தவிர எந்தவொரு முக்கிய காரணமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இயேசு தம்மை வெளிப்படுத்தி சென்ற பின்பு (24.33) உடனே அவர்கள் எருசலேம் நோக்கி சென்றார்கள் என்று பார்க்கிறோம். ஆம் திருமறை பின்மாற்றம் அடையாது தடுக்கும்.
3. திருமறை நல்மாற்றத்தைத் தருகின்றது
பதினொருவரும் அவர்களோதிருந்தவர்களும் கூடியிருந்த இடத்திற்கு அந்நேரமே எழுந்து சென்றார்கள் (24.33). அங்கு இயேசு மீண்டும் அங்கிருந்த அனைவருக்கும் தம்மை வெளிப்படுத்தினார் (24.36-49). அவர்களோடு உணவு சாப்பிட்டார். அவர்கள் வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் மனதை திறந்தார் என்று சொல்லி பார்க்கிறோம். நல்ல மாற்றம் சீடர்களுக்கு ஏற்பட்டது.
நிறைவுரை
தன்னுடைய மரண தருவாயில், தன் பிள்ளைகளை தன்னருகில் அழைத்து, "நான் உங்களுக்கு பொக்கிஷம் ஏதும் சேர்த்து வைக்கவில்லை; ஆனால் ஒன்றை ஒன்று உங்களுக்காக நான் விட்டுச் செல்வது இது தான்" என்று சொல்லி பரிசுத்த வேதாகமத்தை காட்டினார் ஒரு அன்புத் தாயார். அவரருகில் நின்ற அவரது சின்ன பையன் சீகன் பால்க்கின் இருதயத்தில் அது ஆழமாக பதிந்தது. இந்த சீகன் பால்க் தான் பின்னாளில் தரங்கம்பாடி வந்து, திருப்பணி செய்து, முதன் முதலில் தமிழ் வேதாகமத்தை அச்சிட்டு கொடுத்தார். ஆனால் இன்றைக்கு இந்த திருமறையைத் தியானம் செய்ய, எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? இறையாசி உங்களோடிருப்பதாக.
0 Comments